தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதிவேற்ற போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நீதிக்கட்சியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசான அவர், பாரம்பரியமான திமுக குடும்ப பின்னணியை கொண்டவர். இவரது தந்தை பழனிவேல் ராஜன், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மிகுந்த அன்புக்கு பாத்திரமானவர் என்பதால், அவரை சட்டப்பேரவைத் தலைவராக்கி அழகுப் பார்த்தார், அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.
அவரது மறைவுக்குப் பிறகு வெளிநாட்டு வாழ்க்கையை நிறைவு செய்து தமிழகத்திற்கு திரும்பிய அவரது புதல்வர் பழனிவேல் தியாகராஜன், தனது தந்தை வழியில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, மதுரை மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
இதேநேரத்தில், திமுகவை சமூக ஊடகங்களிலும் பிரபலமாக்கும் வகையில், திமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவான ஐ.டி.விங்கை துவக்கி, எதிர்க்கட்சியினருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து, 2021ல் மதுரையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அவருக்கு நிதியமைச்சர் பதவியை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த துறைக்கு தன்னை விட சிறந்தவர் யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற அளவிற்கு அவரின் ஆரம்ப கால பணிகள் விறுவிறுப்பாக அமைந்தன. ஆனால், ஒன்றிய பாஜக அரசுக்கு சுடச்சுட பதில் அளிப்பதாகட்டும், மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியினருக்கு நிதித்துறை தொடர்பாக பதில் அளிப்பதாகட்டும் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து, தமிழக மக்களின் விழிகளை விரிய வைத்தார்.
இதே காலக்கட்டத்தில் முந்தைய அதிமுக அரசின் நிதி மேலான்மையில் நடைபெற்ற முறைகேடுகளை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டும். தமிழகத்தின் நிதிநிலைமை எந்தளவுக்கு மோசமான நிலைமையில் இருக்கிறது என்பதையும் ஊரறியச் செய்தார், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

அவரின் பல செயல்பாடுகள் திமுகவின் அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சிக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்திருந்தாலும் கூட, மாநில அரசின் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் முக்கிய பிரமுகர், மிகுந்த கடமையுணர்வுடன் தனது துறை நடவடிக்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என விமர்சனம் எழுந்தது. இதே காலக்கட்டத்தில், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வதைப் போல சொந்த கட்சி நிர்வாகிகளையும் விமர்சனம் செய்ய துவங்கியதால், அவருக்க கடிவாளம் போடும் வகையில், அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமைப் பொறுப்பை பறித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதன் பிறகு, தனது அதிரடி நடவடிக்கைகளை குறைத்துக் கொண்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை மேம்பாட்டிற்காக முழுக் கவனம் செலுத்த தொடங்கினார். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய நிதியை பெற, குறிப்பாக ஜிஎஸ்டி வரி உள்பட பல்வேறு நிதிகளை பெறுவதற்காக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணக்கமாக செல்ல வேண்டும் திமுக மேலிடம் அறிவுரை கூறியது.
இதனையடுத்து, தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுதில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் நிதித்துறை உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.
ஒன்றிய நிதியமைச்சருடன் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தையின் முடிவில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு சம்மதித்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
