அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.
கள்ள வாக்கு செலுத்த முயன்றதாக கூறி திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கமாக வடசென்னையில் உள்ள புழல் சிறையில்தான் அடைக்கப்படுவார்கள். ஆனால், அங்கு ஜெயக்குமாரை அடைத்தால், அதிக வசதிகளை அனுபவிப்பார் என்று கருதியே அவரை அதிக வசதிகள் இல்லாத கிளைச் சிறையாக இருக்கும் பூந்தமல்லிக்கு அழைத்துச் சென்று அடைத்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள் என்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
இந்நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி, கொரானோ விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிலுவையில் இருந்த அந்த வழக்கு தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டது.
அரசு அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, நோய் கிருமிகளை பரப்பும் வகையில் செயல்பட்டது என ஜெயக்குமார் உள்ளிட்ட 110 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவரத்தை சிறையில் உள்ள ஜெயக்குமாரிடம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஜெயக்குமார் தரப்பு, நீதிமன்றத்தில் அந்த வழக்கில் ஜாமீன் பெற்றாலும் உடனடியாக வெளியே வராத வகையில், இரண்டாவது வழக்குப்பதிவு செய்து, முன்னாள் அமைச்சரை திமுக அரசு பழிவாங்குவதுதாக ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் மனம் வெறுத்து கூறுகிறார்கள்.