நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. முதலில் அரசு பணியாளர்கள் அஞ்சல் மூலம் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டன. 3 ஆம் கட்டமாக நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய அமைப்புகளுக்குட்பட்ட தேர்தலில் அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதில், பெரும்பான்மையான வாக்குகள் ஆளும்கட்சியான திமுகவுக்கு ஆதரவாகவே இருந்தது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள மொத்த 21 மாநகராட்சிகளில் ஆயிரத்து 373 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், அங்கெல்லாம் பதிவான வாக்குகள், அதற்குரிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
அதுபோல, மொத்த நகராட்சிகளான 138 ல் 3842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளான 489 ல் 7604 வாடுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8 மணி முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 30 நிமிடங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய மன்றங்களில் திமுகவே முன்னிலை பெற்றுள்ளது.
மாநககராட்சி வார்டுகளில் திமுக 18 வார்டுகளிலும், நகராட்சிகளில் 25 இடங்களிலும் பேரூராட்சிகளில் 56 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேரூராட்சி மன்ற வார்டுகளில் 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட துவங்கிவிட்டனர்.