Fri. Nov 22nd, 2024

கோவையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரியும், வாக்கு எண்ணிக்கையை கோவையில் நிறுத்தி வைக்கவேண்டும், என்றும் கோவை மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோவையைச் சேர்ந்த வாக்காளர் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாகுபாடில்லாமல் அனைத்து கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்ததாகவும், தேர்தல் ஆணையத்தில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. அதே வேளையில் கோவை மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும், தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் இடைக்கால உத்தரவு பிறபித்து வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.