Fri. Nov 22nd, 2024

மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலூர் 8 வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது இஸ்லாமிய பெண் ஒருவர் அவர்களின் மதவழக்கப்படி ஹிஜாப் அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்ய முயன்றார். அப்போது வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த பாஜக வேட்பாளரின் முகவர் கிரிராஜ், அந்த பெண் அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றிவிட்டுதான் வாக்களிக்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மற்ற வாக்குச்சவாடி முகவர்கள், அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கிரிராஜை எச்சரித்ததுடன் வாக்குச்சாவடியில் இருந்து அவரை வெளியேற்றினர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிரிராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.