Fri. May 17th, 2024

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று ஒரு தம்பதியினர் தங்களின் குழந்தையின் நோய்க்கு சிகிச்சை அளிக்க நிதிஉதவி கேட்டனர். 24 மணிநேரத்தில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வீடு தேடி வந்ததை கண்டு அந்த தம்பதியினர் கண்ணிர் மல்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூரில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது,பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாங்கி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அவை நிறைவேற்றுப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் – அமுதா ஆகிய ஏழை தம்பதியர் தங்களது ஒன்றரை வயது மகள் ரட்ஷிதாவிற்கு ஏற்பட்டுள்ள கண் பாதிப்பிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தங்களிடம் பணவசதி இல்லை என்றும், அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அதனை கனிவுடன் பரிசீலித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தக் குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க தி.மு.க சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேடையிலேயே உறுதி அளித்திருந்தார்.

அந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ரூ.2 லட்சத்தை அந்த சிறுமியின் வீட்டிற்கு இன்று நேரிடையாகச் சென்று பெற்றோரிடம் வழங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனை தொடர்பு கொண்ட பணம் கொடுக்கப்பட்ட தகவலைத் உறுதிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, அந்தப் குழந்தையின் தாய் அமுதாவிடம் கைபேசியை கொடுக்கச் சொல்லி, குழந்தைக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து விசாரித்து நம்பிக்கை தெரிவித்தார். மேலும், குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தி.மு.க செய்யும் என்றும் உறுதியையும் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

தாங்கள் மனு கொடுத்த 24 மணிநேரத்திற்குள்ளாகவே வீடுதேடி வந்து நிதியுதவி வழங்க விரைவாக நடவடிக்கை எடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வராஜ் – அமுதா தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தகவல் அறிந்து நெகிழ்ச்சியடைந்த கிராம மக்களும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நிதி வழங்கிய தி.முக எம்எல்ஏ மெய்யநாதனுக்கும், தங்களது நன்றியை தெரிவித்தனர்.