Fri. May 17th, 2024

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூரில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார நிகழ்வு மூலம், அங்கு திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றார். பொதுமக்களில் சிலரை பேசச் சொல்லி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பின்னர் பேசியதாவது:
ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா அதில் இருந்து மீள்வதற்காக 6 ஆண்டு காலம் அதில் போனது. அவரது மரணத்துக்குப் பிறகு 4 ஆண்டு காலம் தனது பதவிக் கொள்ள பழனிசாமியின் பதற்றமான காலம் கழிந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக மக்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.

ஆனால் வெற்றி நடை போடும் தமிழகம் – என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி. இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல. வெத்து நடை போடும் தமிழகம். வளமான தமிழகம் என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி. அது உண்மையில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வளமான தமிழகம் தான். மற்றவர்களுக்கு தாழ்ந்த தமிழகம் தான்.
பல்வேறு திட்டங்களைக் கூறி மு.க.ஸ்டாலின் காது குத்துகிறார் ன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருவதாகவும், தன்னைப்போலவே மற்றவர்களும் இருப்பார்கள் எனக் கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வாறு பேசி வருகிறார். அதிமுக ஆட்சியால் 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழகத்தின் நிலையை மாற்றி – தமிழக வளர்ச்சி – மக்களுக்கு முன்னேற்றம் தருவதே திமுகவின் இலக்கு.
பெரிய பெரிய திட்டங்களைத் தான் செய்யவில்லை என்றால், ஒரு தொகுதிக்குத் தேவையான அவசிய தேவைகளைக்கூட இவர்கள் நிறைவேற்றவில்லை. இத்தகைய அவசிய, அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் 100 நாட்களில் உங்களது கோரிக்கைகளைத் தீர்ப்போம் என்ற உறுதிமொழியை நான் முன் வைத்துள்ளேன். இந்தக் கோரிக்கைகளை கழக அரசு அமைந்ததும் 100 நாளில் நாம் நிறைவேற்றுவோம். நிச்சயம் நிறைவேற்றுவோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள் – சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் என்று! அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன்! செய்வதைத் தான் சொல்வேன்! புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவோம்! புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்! புதிய உட்கட்டமைப்பு திட்டங்கள் கொண்டு வருவோம். தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்போம்.

பெருந்தலைவர் காமராசர் காலத்து கல்வி வளத்தையும், பேரறிஞர் அண்ணா காலத்து மாநில உரிமையையும், முத்தமிழறிஞர் கலைஞர் காலத்து மக்கள் நலத் திட்டங்களையும் – உட்கட்டமைப்புத் திட்டங்களையும் தமிழகத்துக்கு வழங்கும் காலமாக எனது ஆட்சிக் காலம் அமையும்”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.