புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்றும் நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா கட்சி அதிரடி காட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம், பாரதிய ஜனதாவுக்கு தாவப் போகிறார் என்பது உறுதியானவுடன் அமைச்சர் பதவியில் இருந்து அவரை காங்கிரஸ் நீக்கியது. அதற்கடுத்த நாளே, நமச்சிவாயம், பா.ஜ.க.வில் ஐக்கியமானார். அவரது வழியில் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, மேலும் சில அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு தாவ ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
பா.ஜ.க.வின் வலைவீச்சில் மற்றொரு அமைச்சரான மல்லாடி கிருஷ்ணராவும் விழுந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகிய அவர், பா.ஜ.க.வில் ஐக்கியமாவதற்கு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வரிசையில் 4 வது நபராக காமராஜர் தொகுதி காங் எம்.எல்.ஏ ஜான்குமாரும் பதவி விலகியுள்ளார்.
தனது விலகல் கடிதத்தை அவர் சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிடம் இன்று அளித்தார்.
புதுச்சேரி காங்கிரஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து வரும் நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது என்றும் தகவல் வெளியாகி புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை அதிகப்படுத்தியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமமாக செய்தியாளாகளைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது என்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சி செயல்படும் எனறும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆட்சியை நீடிக்க தேவையான 15 எம்.எல்.ஏ.க்களின் பலம் தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கு இல்லை. காங்கிரஸ் 10, தி.மு.க. 3, சுயேட்சை 1 என்ற அடிப்படையில் 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரக்கு உள்ளது.இதே எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். அதனால், முதல்வர் நாராயணசாமி தனது தலைமையிலான ஆட்சிக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.