பொங்கல் திருவிழாவையொட்டி திமுக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொதுமக்களிடமும் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருந்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்திருந்தாலும் ரேஷன் கடைகளுக்குச் சென்ற விளிம்புநிலை மற்றும் நடுத்தர மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மஞ்சள் பை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் முழுமையாக பொதுமக்களுக்கு தராமல் பல்வேறு இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் குளறுபடி செய்தனர். பரவலாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் எழுந்ததாலும், எதிர்க்கட்சியான அதிமுகவின் கடுமையான விமர்சனங்களாலும், உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, பெரும்பாலான மாவட்டங்களில் அரசு அறிவித்த 21 பொருட்களையும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் வழங்குவதற்கு படாதபாடு பட்டனர். இருப்பினும் இன்றைக்கும் கூட மஞ்சள் பை பற்றாக்குறையை தமிழக அரசால் கூட சமாளிக்க முடியவில்லை.
திருப்திகரமான வருவாய் நிலையில் உள்ள மக்கள், பொங்கல் பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு செல்லாததாலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டதாலும், மஞ்சள் பை பிரச்னை பெரிய அளவில் விவகாரமாக மாறவில்லை. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினார். ஆனால், அவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்படாத நிலையில், கரும்பும் கிடைக்கவில்லை. மேலும் முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் ஆகிய நான்கு பொருட்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் பதுக்கி கொள்கிறார்களாம். அதை குறிப்பிட்டு கேட்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களுக்கு பொங்கல் பண்டிகை முடிந்து திரும்பியவர்கள், கடந்த இரண்டு நாட்களாக ரேஷன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கிச் செல்வதாகவும், அவர்களுக்கு 15க்கும் மேற்பட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை 70 சதவீதத்திற்கு மேலானவர்களுக்குதான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 20 முதல் 30 சதவீதம் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாமல் உள்ளது என்று கூறும் உணவுத்துறை அதிகாரிகள், நிலுவையில் உள்ள மக்களை அடையாளம் காண்பதற்காக ரேஷன் கடை ஊழியர்களை வீடாக, வீடாகச் சென்று விடுபட்ட மக்களை பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டமிட்டபடி 100 சதவீதமும் விநியோகம் செய்யப்படாமல், 20 சதவீதத்திற்கு மேல் தேங்கினால், அந்த பொருட்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டு போய்விடும். கிடங்கிலும், ரேஷன் கடைகளிலும் இருப்பு வைத்திருக்கும் நாட்களிலேயே வண்டு உள்ளிட்ட பூச்சிகள் உணவுப் பொருட்களில் கலக்கவும், தரம் கெடும் நிலைக்கும் உள்ளாகிவிட்டது என்று கூறும் உணவுத்துறை அதிகாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல்முறையாக வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பே பொதுமக்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதுதான் நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான கொள்முதல், பிரித்து பாக்கெட் செய்வது, விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளில் மாவட்டங்களில் உள்ளவர்களையே பயன்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட அளவிலான வணிகர் சங்க பேரவை நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, தரமான பொருட்களை வழங்க அறிவுரை கூறியிருக்கலாம். பொருட்களை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியை மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் ஒப்படைத்திருக்கலாம். இந்தவகையில் திட்டமிட்டிருந்தால், இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களை தவிர்த்திருக்க முடியும் என்று கூறுகிறார்கள் உணவுத்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
ஆக மொத்தத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவுற்ற பிறகும் கூட பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான சர்ச்சைசள் நீடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. என்ன செய்யப் போகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..