ஆளும்கட்சியான திமுகவில் நேற்று இரண்டு முக்கியமான விடங்கள் குறித்து சூடான விவாதம் நடைபெற்றுள்ளது. நீதிக்கட்சியின் வாரிசான மறைந்த சட்டப்பேரவைத் தலைவர் பழனிவேல் ராஜனின் வாரிசும் நிதித்துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ( ஐடி விங்) பொறுப்பில் இருந்து விலகினார். அவர் வகித்த பதவி, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலுவின் புதல்வர் டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கப்பட்டுள்ளது. ஐடி விங்கில் இருந்து தாமாக முன்வந்து பதவி விலகியிருந்தாலும் கூட, திமுக தலைமைக் கழகத்தால் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாகவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவி விலகலுக்கு சம்மதித்தார் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்பும் சத்தம் மதுரையில் அதிமாகவே கேட்கிறது.
திமுக, அரியாணையில் ஏறிய நாள் முதலாகவே, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தவர்தான். அதுபோலவே, தமிழகத்தின் நிதிநிலைமையை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது முந்தைய அதிமுக ஆட்சி எனவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததுடன், வெள்ளை அறிக்கையும் வெளியிட்டு தமிழகத்தின் நிதி நிலைமையை வெட்டவெளிச்சமாக்கினார். சட்டப்பேரவையில் அவரின் ஆணித்தரமான வாதத்தையும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வந்ததையும் முதல்வர் மு.க.ஸ்டாலினே வெகுவாக ரசித்தார் என்று அமைச்சரின் விசுவாசிகள் பெருமிதத்துடன் பேசி வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக அண்ணா அறிவாலய நிர்வாகிகள் முணுமுணுக்கின்றனர்.
திமுக தலைமையின் எச்சரிக்கையின் காரணமாகவே, அமைச்சர் அடக்கி வாசிப்பதாகவும், மூத்த தலைவரும் திமுக எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவனைப் பற்றி அமைச்சர் நாகரிகமற்ற முறையில் தெரிவித்த கருத்துதான், அவர் மீது முதல்வர் கோபம் கொள்ள முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக ஆதங்கத்துடன் கூறும் திமுக முன்னணி நிர்வாகிகள், 1990 ஆம் ஆண்டிற்கு முன்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை போல பேசும் முன்னோடிகள்தான் திமுகவில் அதிகமாக இருந்தனர். அரசியல் களத்தில் திமுகவுக்கு தனித்த அடையாளம் கொடுத்ததே, யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக கருத்து தெரிவித்து கெத்து காட்டுவதைதான். அந்தவகையில் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா, திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் திமுகவுக்கு தலைமை வகித்த காலங்களில் பழனிவேல் தியாகராஜனைப் போல நூற்றுக்கணக்கானோர் தனித்த அடையாளங்களோடு வாழ்ந்தனர்.
மாநில சுயாட்சி கொள்கையை உரக்க பேசுவதும், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதையும் அப்போதைய மக்கள் பெரும்பான்மையானோர் ரசித்து வந்தனர். திமுக பொதுக்கூட்டங்களில் மாநில சுயாட்சி..மத்தியில் கூட்டாட்சி…உரிமைக்கு குரல் கொடுப்போம்..உறவுக்கு கை கொடுப்போம் என்ற முழக்கங்களை கலைஞர் உச்சரிக்கும்போதெல்லாம், மொத்த கூட்டமும் ஆர்ப்பரிக்கும். அந்த வகையிலான உணர்வோடுதான் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி வந்தார். அவரின் துணிச்சலுக்கு தடை போட்டிருப்பது, திமுகவில் உள்ள முன்னணி நிர்வாகிகளிடையே வருத்தத்தைதான் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக தலைமைக்கு, திமுக மேலிடம் பயந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதோ என்ற எண்ணம், மாநில சுயாட்சி கொள்கையை உயிர்மூச்சாக கொண்டிருப்பவர்களிடம் உருவாகியிருக்கிறது என்கிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள்.
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவலத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றை செங்கல்லை காட்டியதும், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் டார்ச்சரை தாங்க முடியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என்றெல்லாம் பேசியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியிலும்கூட அதிர்வலைகளை உருவாக்கியது. இப்படியான துணிச்சலை ரசிக்க, திமுகவில் எப்போதுமே பெருங்கூட்டம் இருந்து வருகிறது. அமைச்சர் பழனிவேல் ராஜனை தொடர்ந்து பேச அனுமதித்தால், திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று சிறுகூட்டம் ஒன்று போட்ட தூபம், திமுக தலைமை வரை சென்றதால்தான் பழனிவேல் ராஜனின் கருத்து சுதந்தத்திற்கு ஆபத்து வந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் துணிச்சல் முன்பு பழனிவேல் தியாகராஜனின் பேச்சுகள் ஒன்றுமே இல்லாதபோதும், ஆட்சிக்கு ஆபத்து என்ற பலவீனமான குரல்களுக்கு திமுக தலைமை பணிந்துவிட்டதுதான் பெரும் வேதனை என்கிறார்கள் மதுரை திமுக முன்னோடிகள்…
உதயநிதிக்கு சமமானவராக கதிர் ஆனந்த்.. இது வேலூர் கலாட்டா…
திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் புதல்வர் கதிர் ஆனந்த் எம்பிக்கு நேற்று பிறந்தநாள். இதனையொட்டி, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து பதாகைகள், சுவரொட்டிகளை பரவலாக ஒட்டி அமளிதுமளி செய்துவிட்டனர். கதிர் ஆனந்த்தை வாழ்த்தி ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இந்த விவகாரம் மூன்று மாவட்டங்களிலும் பரவலாக சர்ச்சையை ஏற்படுத்த, கதிர் ஆனந்த்தின் ஆதரவாளர்கள் உதிர்த்த முத்துகள்தான், இளைஞரணி நிர்வாகிகளை ரத்தம் கொதிக்க வைத்துவிட்டதாம்.
சென்னையில், தமிழகத்தில் எந்த மூலைக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றாலும், அவரை வரவேற்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் காத்து இருக்கிறார்கள். அவரை வரவேற்று ஒட்டப்படும் போஸ்டர்கள், நாளிதழ் விளம்பரங்களில் தலைவர் ஸ்டாலின் போட்டோவும் உதயநிதியின் போட்டோவும் மட்டுமே இடம் பெறுகிறது. அப்போதெல்லாம் யாரும் அந்தந்த மாவட்டச் செயலாளரின் போட்டோவை ஏன் போடுவதில்லை என்று கேள்வி கேட்பதில்லை. தலைவருக்கு இணையான பதவியான பொதுச் செயலாளர் பதவியில் கதிர் ஆனந்த்தின் தந்தை இருக்கிறார். அதனால், பொதுச் செயலாளரின் மகனும், எம்பியாகவும் உள்ள கதிர் ஆனந்த்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை என்று துரைமுருகனின் சிஷ்ய பிள்ளைகள் கெத்து காட்ட கொதித்து போய்விட்டார்களாம் இளைஞரணி நிர்வாகிகள்.
உதயநிதி ஸ்டாலிக்கு இணையாக கதிர் ஆனந்த்தை வைத்து பேசுவதா என்று நெற்றிக்கண்ணை திறந்துள்ளனர். இப்படி இளைஞரணி கோபக்கணலோடு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஆக்ரோஷமாக சுற்றி வந்த வேளையில், அவர்களை சீண்டிவிடும் எந்தவொரு நடவடிக்கையும் அந்த மாவட்டங்களில் தலைதூக்காததுதான் ஆறுதலான அம்சம் என்கிறார்கள் மூத்த முன்னோடிகள்.
கொரோனோவை காரணம் காட்டி கதிர் ஆனந்த் நேற்றைய தினம் உள்ளூரில் பிறந்தநாளையே கொண்டாடவில்லை. அவர் வெளியூர் சென்றுவிட்டார். அதுதொடர்பாக முன்கூட்டியே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துவிட்டார். ஆகவே, காட்பாடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் அவரது ஆதரவாளர்கள் பெருங்கூட்டமாக கூடாததால், கதிர் ஆனந்த்தின் பிறந்தநாள் விழா களையிழந்துவிட்டது. பிறந்தநாள் அன்று கதிர் ஆனந்த் வெளியூர் சென்றதற்கு மற்றொரு காரணமும் கசிகிறது. அமைச்சர் துரைமுருகன் மீது ஏதோ ஒரு விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் கொண்டுள்ளார் என்று கூறும் தந்தை, தனையனுக்கு நெருக்கமான விசுவாசிகள், அதன் காரணமாகவே கதிர் ஆனந்தும் அடக்கி வாசித்துள்ளார் என்கிறார்கள்.
எது எப்படியோ, எதற்கெடுத்தாலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் பிற தலைவர்களின் வாரிசுகளையும் ஒப்பிட்டு பேசுவது மாநிலம் முழுவதும் ஆங்காங்கே எழுந்து கொண்டிருப்பதால், இளைஞரணி நிர்வாகிகள் அடிக்கடி சூடாகும் சூழல்தான் உள்ளது. இந்த போக்கு, திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்கிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள்….