Fri. Nov 22nd, 2024

திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கூல் மனிதரான துரைமுருகன். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1989 ஆம் ஆண்டில் இருந்து திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் எல்லாம் அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். பள்ளிப் பருவத்தில் மிகவும் ஏழ்மைநிலையில் இருந்ததால், கல்லூரிப் படிப்பு என்பது கனவாகிடுமோ என்ற நேரத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், அவரின் உயர்க்கல்விக்கு வழி அமைத்து கொடுத்தார் என்று முன்னணி அரசியல்வாதிகள் இன்றைக்கும் கூறுவதுண்டு.

50 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் இருக்கும் துரைமுருகன், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆத்ம நண்பராகவும் திகழ்ந்தவர். துரைமுருகன் இருக்கும் இடத்தில் சிரிப்பொலிக்கு பஞ்சம் இருக்காது என்று திமுக முன்னணி நிர்வாகிகள் புகழ்ந்து கூறுவதுண்டு. இன்றைய நிலையில், திமுகவில் மூத்த தலைவரும், அனுபவமிக்கவராகவும் ஒருவர் இருக்கிறார் என்றால் சாட்சாத் துரைமுருகனையே அந்த பெருமை சாரும். இப்படி எண்ணற்ற பெருமைகளுக்கு, புகழுக்குரியவராக திகழும் துரைமுருகனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது உண்டு. சாதிப் பற்று மிகுந்தவர் என்றும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாதவர் என்றும் அவருக்கு மிகமிக நெருக்கமான நண்பர்களே இன்றைக்கும் பேசுவதை வேலூர் மாவட்டத்தில் கேட்க முடிகிறது.


அமைச்சர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமான திமுக முன்னணி நிர்வாகி ஒருவர் பகிர்ந்து கொண்ட தகவல் ஒன்று, மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாகவே இருக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த துரைமுருகன், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, திமுகவில் மாவட்ட அளவில் மூன்று செயலாளர்கள் உருவெடுத்தார்கள். மூன்று பொறுப்பாளர்களும் துரைமுருகனின் நிழலில் வளர்ந்தவர்கள் என்றாலும்கூட, இன்றைக்கு மூன்று பேருமே அவருக்கு எதிரானவர்களாகதான் திமுகவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலூர் மாவட்ட செயலாளரான நந்தகுமார் எம்எல்ஏ,,பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பதவிக்கு மரியாதை தரும் வகையில் துரைமுருகனோடு நேரடியாக மோதாமல், அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த்தை வேலூர் மாவட்டத்தில் மட்டம் தட்டும் காரியத்தில் கச்சிதமாக ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான காந்தி, திமுகவின் பொதுச் செயலாளர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்ட துரைமுருகனோடு, நேருக்கு நேராக மல்லுக்கு நிற்கிறார். ஆலங்காயம் புகழ் திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான தேவராஜன், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியில் கதிர் ஆனந்த் அரங்கேற்றிய தில்லாலங்கடி வேலையால், தந்தைக்கும் தனையனுக்கும் எதிராக நெஞ்சை நிமர்த்தி கொண்டு எதிர்ப்பு அரசியலை துவங்கிவிட்டார்.

அமைச்சர் காந்தி…


இப்படி மும்மூர்த்திகளும் துரைமுருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக கொம்பு சீவிக் கொண்டிருக்கும் வேளையில், மூன்று மாவட்டங்களிலும் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக உட்கட்சி அரசியல் செய்வதற்காக, தங்களுடைய ஆதரவாளர்களை உருவாக்கும் முயற்சியில் அமைச்சர் துரைமுருகனும், அவரது வாரிசான கதிர் ஆனந்த் எம்பியும் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் பயன்படுத்தும் யுக்திகள்தான் படுகேவலமாக இருக்கிறது என்கிறார்கள் இருவருடனும் நிழலாக வலம் வரும் உடன்பிறப்புகள். எம்எல்ஏ பதவி வாங்கி தருகிறேன், உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்துகிறேன், மாவட்ட அளவில் துணை அமைப்புகளில் பதவிகள் பெற்று தருகிறேன் என இருவரும் ஒரே குரலில் வாக்குறுதிகளை வாரி வழங்கி, அமைச்சர் காந்தி, நந்தகுமார் எம்எல்ஏ, தேவராஜ் எம்எல்ஏ ஆகியோருக்கு எதிராக உள்குத்து அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், வேலூரை உள்ளடக்கிய மூன்று மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் அக்னி நட்சத்திரம் போல எப்போதும் முஷ்டியை தூக்கிக் கொண்டே திரிகிறார்கள்.

நந்தகுமார் எம்எல்ஏ

பதவி ஆசையோடு தங்களை அண்டி வாழும் உடன்பிறப்புகளை அமைச்சர் துரைமுருகனும், அவரது புதல்வர் கதிர் ஆனந்த்தும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தை பார்த்துதான் மூத்த திமுக நிர்வாகிகள் குமறுகிறார்கள். சென்னையில் இருந்து வேலூர் வரும் அமைச்சர் துரைமுருகன், காட்பாடியில் உள்ள தனது வீட்டில் தங்கிக் கொண்டு, மூன்று மாவட்டங்களிலும் உள்ள தனது விசுவாசிகளுக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பார். அப்படி அவரது அழைப்பில் அடிக்கடி சிக்கி 10,000 ரூபாயை இழந்து கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு உடன்பிறப்பின் சோகக் கதையை கேட்ட பிறகுதான், இத்தனை ஆண்டு காலம் துரைமுருகன் மீது வைத்திருந்த ஒட்டுமொத்த மதிப்பும் மரியாதையும் சீட்டு கட்டைப் போல சரிந்துவிட்டது.

தேவராஜ் எம்எல்ஏ


துரைமுருகனின் காட்பாடி வீட்டுக்கு அருகிலேயே பிரபலமான வடநாட்டுக்காரரின் இனிப்பு கடை உள்ளது. அங்கு தனக்கு, தனது குடும்பத்திற்கு தேவையான இனிப்புகளை வாங்காமல், குடியாத்தத்தில் உள்ள அந்த தாழ்த்தப்பட்ட உடன்பிறப்பை தொலைபேசியில் அழைத்து, ஒவ்வொரு ஸ்விட் பெயராக சொல்லி கிலோ கணக்கில் வாங்கச் சொல்வார். அதேபோல காரம் உள்ளிட்ட திண்பண்டங்களையும் பட்டியலிடுவார். துரைமுருகனே போனில் தொடர்பு கொண்டு சொல்வதால், அந்த அப்பாவி உடன்பிறப்பும் 7000, 8000 ரூபாய் செலவழித்து வாங்கிக் கொண்டு, காட்பாடிக்கோ அல்லது சென்னைக்கோ காரில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்வார்.

இப்படியாக இவர் ஒருவர் மட்டும்தான் செய்கிறாரா இல்லை இன்னும் உடன்பிறப்புகள் பலர், தங்கள் சொந்த காசை செலவழித்து, அமைச்சர் துரைமுருகனுக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கிக் கொடுக்கிறார்களா.. இந்த விவகாரத்தை கிளறுவதற்கே எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது. கரங்கள் சிவக்க சிவக்க அள்ளி கொடுத்த எம்ஜிஆரால் வழிகாட்டப்பட்ட ஒருவர், திமுகவின் உயர்ந்த இடத்திற்கு சென்ற பிறகும்கூட, தனது கஞ்சத்தனத்தை விடாமல் இருப்பதை கண்டு எங்கள் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது என்றார் வேலூர் திமுக முன்னணி நிர்வாகி ஒருவர்…

என்னத்த சொல்ல……

One thought on “எப்படியிருக்க வேண்டியவர் துரைமுருகன்… இப்படியாயிட்டாரே.. புலம்பும் வேலூர் உடன்பிறப்புகள்…”

Comments are closed.