Fri. Nov 22nd, 2024

ஓமிக்கரான் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்று தெரியாமல் ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் உள்பட அனைத்துக்கட்சி அரசியல் நிர்வாகிகளும் கலக்கத்திலேயே இருந்து வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைவிட ஆளும்கட்சியான திமுகவில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாகவே நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில், அமைச்சர்கள் முகாமிட்டு, 100 சதவீத வெற்றியைக் குறிவைத்து ஆள்பலம், பணபலம், படைபலம் உள்ள திமுக நிர்வாகிகளை தேர்வு செய்து வருகின்றனர்

. மேயர் வேட்பாளருக்கு செல்வாக்கான வேட்பாளர்கள் திமுகவில் இல்லையென்றால், மாநகரத்தில் அதிக செல்வாக்குடன் வலம் வரும் கோடீஸ்வர முதலாளிகளையும் வளைத்து, திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவித்துவிடும் முஸ்தீபுகளிலும் அமைச்சர் பெருமக்கள் படுரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இப்படி, மாநிலம் முழுவதும் திமுக அமைச்சர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் பகல், இரவு பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திமுகவுக்கு சவாலாக இருக்கும் மேற்கு மண்டலத்தில், சேலம் துவங்கி கோயம்புத்தூர் வரை அனைத்து நகர்ப்புற அமைப்புகளிலும் அதிமுகவைவிட அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற ஸ்பெஷல் அஜெண்டாவுடன் திமுக முன்னணி அமைச்சர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.


திமுகவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜென்ம விரோதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் மேயர் பதவி உள்பட அனைத்து நகராட்சி, பேரூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தி கிடைத்தால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியடைவார் என்பதால், அந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை இல்லாத வகையில் தேர்தல் களத்தில் புதிய புதிய வியூகங்களை வகுத்து வருவதால், அந்த மாவட்டத்தில் உள்ள பழம் பெருச்சாளிகளான மூத்த நிர்வாகிகள் விழிபிதுங்கியுள்ளனர்.


தங்கள் வாரிசுகள், உறவினர்கள், விசுவாசிகள் என யாராவது ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அமைச்சர் செந்தில்பாலாஜியை அணுகினால், அவர்களிடம் இனிக்க இனிக்க பேசும் அமைச்சர் செந்தில்பாலாஜி, நிறைவாக கூறும் வார்த்தைகளை கேட்டுதான் அவர்கள் ஆடிப்போய்விடுகிறார்கள். என் கையில் எதுவும் இல்லை..எல்லாமே உதயநிதி ஸ்டாலின்தான் முடிவெடுக்கிறார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிவிடுவதால், அதைகேட்டு அதிர்ச்சியாகி, மறுவார்த்தை பேச வழியின்றி வெளியேறிவிடுவார்கள் மூத்த நிர்வாகிகள்.

மறைந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலத்தில் இருந்தே தேர்தல் களங்களில் அனுபவம் பெற்றவர்கள் நாங்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுக்கிற லிஸ்ட்டைதான் உதயநிதி ஸ்டாலின் ஓகே செய்ய போகிறார். செந்தில்பாலாஜி மனசு வைத்தால், சீட் நிச்சயம் கிடைத்துவிடும். ஆனால், ஆறுதல் பெறுகிற அளவுக்குக்கூட நீங்கள் சிபாரிசு செய்கிற ஆட்கள் குறித்து பரிசீலிக்கிறேன் என்று கூட கூறாமல், ஒரேடியாக உதயநிதி பெயரைச் சொல்லி சீனியர்கள் என்று கூட பார்க்காமல் விரட்டி விடுகிறாரே என்று மாலை நேரங்களில் புலம்பும் நிலைதான் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வருகிறது.


அந்தந்த மாவட்டத்தில் பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்கள்தான், திமுக வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்று கீழ்மட்ட நிர்வாகிகள் வரை உண்மை தெரிந்திருந்த போதும்கூட, கலைஞர் காலத்து திமுக முன்னணி நிர்வாகிகளின் சிபாரிசுகளுக்குகூட செல்வாக்கு இல்லை என்று மாவட்டங்கள் தோறும் திமுகவிற்குள்ளாகவே சலசலப்புகள் அதிகமாகியிருக்கிறது. இப்படி உட்கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்துகளை மோப்பம் பிடித்துள்ள தில்லாங்கடி அரசியல் டூபாக்கூர்கள், உதயநிதி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி பதவி மோகத்தில் உள்ள திமுக நிர்வாகிகளை குறி வைத்துள்ளதாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக பட்சி ஒன்று வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிர்ந்தது. அதிர்ச்சியாக அந்த நபரிடம் பேசினால், ஆளும்கட்சியாக இருக்கும் திமுகவுக்குள் நடக்கும் முட்டல் மோதல்களை விலாவாரியாக விவரித்தார். தேர்வுப்படலம் விசித்திரமாக இருப்பதைவிட, விட்டில் பூச்சிகளாக இருக்கிறார்களே திமுக நிர்வாகிகள் என்ற பரிதாபம்தான் எழுந்தது.


பட்சி வாக்குமூலம் இதோ…

திமுக, அரியணையில் அமர்ந்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே, ஆட்சியிலும், கட்சியிலும் முடிவெடுக்கும் அதிகாரம், தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் இல்லை என்று மாவட்ட அளவிலான திமுக நிர்வாகிகளுக்கு தெரிந்துவிட்டது. யாருக்கு எந்த பதவியை வழங்குவது என்று தீர்மானிக்கிற இடத்தில், தளபதியின் இல்லத்தரசி துர்கா ஸ்டாலின், அவர்களது புதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவும், தளபதி குடும்பத்தின் இளவரசரும், மருமகனுமான சபரீசன் ஆகியோர்தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும், அவர்களிடம் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட எந்தவொரு மூத்த அமைச்சர்களின் சிபாரிசுகளும் எடுபடுவதில்லை என்பதும் திமுக எம்எல்ஏக்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் வரை அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

அதனால், ஆட்சியிலும், கட்சியிலும் அவரவர் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள, உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோரின் கண் அசைவுக்காக, அவர்களுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தை சுற்றி சுற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையான நண்பர்கள் யார் என்பதை எல்லோராலும் எளிதாக அடையாள கண்டு கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். பதவி மோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் இப்படிபட்ட சூழலை, தங்களுக்க சாதகமாக்கி கொண்டு, பணம் பறிக்கும் வேலையில் ஒரே கும்பலே இறங்கியிருக்கிறது என்பது கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டோம்.


உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கம் என்று கூறிக் கொண்டு டிப் டாப் ஆசாமிகள், எல்லா மாவட்டங்களிலும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நகர்ப்புற தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் அந்த தில்லாலங்கடி ஆட்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. மேயர் தேர்தல் நடைபெறவுள்ள மாநகராட்சிகளில் வார்டு கவுன்சிலராக போட்டியிட விரும்பினாலே, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். அந்தளவுக்கு பணவசதி படைத்தவர்கள், கட்சிக்காரராக இல்லாதவராக இருந்தாலும் கூட அவர்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வெறியோடு சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிபட்டவர்களை மோப்பம் பிடித்து சென்னைக்கு வரவழைத்து, உதயநிதி ஸ்டாலின் மூலம் சீட் வாங்கித் தருவதாக கூறி 5 லட்சம், பத்து லட்சம் என பேரம் பேசி அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் அளவுக்குகூட ஆட்டையை போடும் அளவுக்கு கொடூர குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் டூபாக்கூர் அரசியல்வாதிகள் சிலர்.


சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இந்த கும்பல் திமுக நிர்வாகிகளை தங்க வைத்து, அவர்களின் பணத்தில் உல்லாசத்தில் ஈடுபடுகிற கொடுமையையும் இன்றைக்கும் அரங்கேறி கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் உதயநிதி ஸ்டாலினின் பிஏ என்று சொல்லி கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட டூபாக்கூர் ராஜேஷ் கருணாமூர்த்தியின் தில்லாங்கடி வேலைகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும்கூட பதவி மோகத்தில் நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள், புரோக்கர்களை நம்பி லட்சங்களில் பணத்தை இழக்க தயாராகிவிட்டார்கள் என்று நினைக்கும் போதுதான் பகீர் என்று இருக்கிறது.

கட்சிக்காக உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் திமுக நிர்வாகிகள் மோசடி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால், மாநகராட்சி பதவிகளுக்காவது மாநில அளவில் திமுக முன்னணி நிர்வாகிகளை உள்ளடக்கி ஒரு குழுவை நியமித்து அவர்கள் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்ய, திமுகவுக்கே உரித்தான ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடையே கோரிக்கை என்று ஒரே மூச்சில் பேசியது பட்சி.
எங்கே போகும் இந்த பாதை?