Sat. May 18th, 2024

சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி..

வார விடுமுறை நாட்களில் ஐஏஎஸ் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் அலுவல் ரீதியான கைபேசி அழைப்புகளை விரும்புவதே இல்லை என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் கூடுதல் மற்றும் இணைச் செயலாளர்கள் பலர்.. ஆனால், அவர்களில் முற்றிலும் மாறுபட்ட வராக இருக்கிறார் தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ்.. வார விடுமுறை நாட்களையும் அலுவலக நாட்களாக மாற்றிக்கொண்டு 15 மணிநேரத்திற்கு மேலாக உழைத்து கொண்டு இருக்கிறார் என்று வியப்புடன் கூறுகிறார்கள் தலைமைச் செயலக அலுவலர்கள்..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் கூட வரலாறாக மாறும் அளவுக்கு தான் வெ. இறையன்பு ஐஏஎஸ் ஸின் பணிகள் அமைந்திருக்கின்றன என்பதுதான் இதற்கு முன்பு தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் முன்னுதாரணமாக இல்லாத அம்சமாகும்..


அரசு நிர்வாகம் தறிகெட்டு போகிறது என்பதை சுட்டிக் காட்டினால் அதை விரைந்து சரி படுத்துகிறார் தலைமைச் செயலாளர் என்று ஊடகங்களும் அறப்போர் இயக்கம் போன்றவையும் வெளிப்படையாகவே பாராட்டுகின்றன..

விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நிர்வாகத்தின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் தலைமைச் செயலாளர்..

முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் நின்று தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து பதில் சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பை சுமந்து கொண்டு இருக்கும் தலைமைச் செயலாளரின் உழைப்பு பற்றியும் மனிதநேயத்தை பற்றியும் வியந்து வியந்து பேசும் தலைமைச் செயலக அலுவலர்கள் எண்ணற்றோரை சந்தித்து கொண்டே இருக்கிறேன்..

பரிசுத்தமான தனிமனித வாழ்க்கைப் போல தனது அரசுப் பணியையும் அமைத்துக் கொண்டிருக்கும் வெ. இறையன்பு ஐஏஎஸ்ஸின் மனித நேயத்துடன் கூடிய கண்டிப்பான ஆட்சிப் பணியை அறிந்து வியந்து போனேன்.. கடந்த வாரம் ஏற்பட்ட வியப்பில் இருந்து மீள முடியாததால் அதை அப்படியே எழுத்தில் வடிக்கிறேன்..

சேலத்தில் இருந்து சென்னை வந்திருந்த நண்பர்- தொழில் முனைவோரின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்து அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் சென்றிருந்தேன்.. மின்சாதன பொருட்கள் ஒப்பந்தம் தொடர்பாக அலுவலகத்தில் இருந்த உயரதிகாரி ஒருவரை நண்பர் சந்தித்தார்.. ஏற்கெனவே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கும் போல.. சகஜமாக பேசினார்கள்.. ஊடகவியலாளர் என கூறி அறிமுகப்படுத்திய போதும் அவரது உரையாடலில் மாற்றம் ஏற்படவில்லை..அரசு நிர்வாகம், அரசியல் கள செயல்பாடுகள் பற்றி ஆர்வமாக உரையாடியவர், திடீரென தலைமைச் செயலாளரின் அதிரடி நடவடிக்கை பற்றி விவரிக்க விவரிக்க நாங்கள் வியந்து போனோம்..


6 மாதத்திற்கு முன்பு(ஜுன் மாதம்) சென்னை அருகே உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி நிர்வாக பொறியாளர்கள் 3 பேருக்கு அதே உற்பத்தி நிலையத்தில் வேறுவேறு இடங்களில் பணி மாறுதல் வழங்கி தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பிக்கிறார்.. இதில் ஒருவர் பெண் அதிகாரி.. அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியாற்ற அனுமதிக்காமலும் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்திற்கு செல்லாமலும் ஆண் அதிகாரி ஒருவர் வம்பு செய்கிறார்..இருவருக்கும் இடையே நிலவும் பிரச்சினையால் மூன்றாவது அதிகாரியும் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சேர முடியவில்லை..தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடத்தில் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு தலைமை பொறியாளரிடம் முறையிடுகிறார் அந்த பெண் அதிகாரி..

ஆனால் அவரோ பணி மாறுதல் உத்தரவுக்கு மாறாக முரண்டு பிடித்து கொண்டு இருக்கும் ஆண் அதிகாரிக்கு ஆதரவாக செயல்பட்டு பெண் அதிகாரியை பழைய பணியிலேயே தொடருங்கள்..15 நாட்களுக்குப் பிறகு புதிய இடத்தில் பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கிறேன் என கூறி 6 மாத காலம் இழுத்தடிக்கிறார்..ஒவ்வொரு மாத இறுதியிலும் உயர் அதிகாரியிடம் முறையிட்டும் பணி மாறுதல் உத்தரவு நடைமுறைக்கு வராததால் வெறுத்து போன அந்த பெண் அதிகாரி, தலைமைச் செயலகம் வந்து மின்சார துறை அமைச்சரின் உதவியாளரிடம் முறையிடுகிறார்.அவரும் தலைமை பொறியாளரை அழைத்து பணி மாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் பெண் அதிகாரி பணியாற்றும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என பரிந்துரை செய்கிறார்.அதன் பிறகும் கூட தலைமை பொறியாளர் ஆண் அதிகாரிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்ததால் நொந்து போன அந்த பெண் அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவையாவது ரத்து செய்யுங்கள் என கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்..அப்போதும் கூட பணி மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படவில்லை..

தனது பதவிக்கு இணையான ஆண் அதிகாரி பணி மாறுதல் உத்தரவை மதிக்காமல் 6 மாதமாக தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்து தொடர்ந்து வேலை பார்த்து வருவதால் அலுவலக ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி வரும் என்ற அச்சத்தில் இரு வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் செல்கிறார்..

மன நிம்மதிக்காக வழிபாட்டு தலத்திற்கு சென்றவர் வழியில் தலைமைச் செயலகத்திற்கு செல்கிறார்.. அங்கு தனக்கு அறிமுகமான அரசு அதிகாரியிடம் தனது நிலைமையை எடுத்துரைக்கிறார்.. அவரின் பரிதாப நிலையை தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் அந்த அதிகாரி.. பெண் அதிகாரி வீடு திரும்புவதற்கு முன்பாகவே மின்சார வாரிய தலைமை பொறியாளர் பெண் அதிகாரியை கைபேசியில் அழைத்து விடுமுறையை ரத்து செய்து விட்டு உடனடியாக அவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட பணியிடத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அதற்கான அறிக்கையை அனுப்பி வைக்குமாறு உத்தரவிடுகிறார்.. அதை கேட்டு அந்த பெண் அதிகாரி திகைத்து போய் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்..

6 மாத கால போராட்டம் யாரால் முடிவுக்கு வந்தது என்பதே அந்த பெண் அதிகாரிக்கு அப்போது தெரியவில்லை.. பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு தான் தலைமைச் செயலாளர், மின்சார வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்ஸுக்கு கறார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது..

6 மாத கால மன உளைச்சல் மற்றும் போராட்டத்திற்கு 30 நிமிடத்திற்குள்ளாக தீர்வு காணப்பட்டதை இப்போதும் கூட மெய் சிலிர்க்கவே அந்த பெண் அதிகாரி விவரிக்க கூடும்..

இப்படி அரசின் எந்த துறையாக இருந்தாலும் அங்கு நடைபெறும் முறைகேடுகள் தன் கவனத்திற்கு வந்தால் உடனடியாக அதை களைந்து நீதியை நிலைநாட்டுபவராக திகழ்கிறார் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ்..

மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறப்புகள் எல்லோரும் அறிந்தவை தான். அவரது எளிமை, நேர்மை, கடின உழைப்பு, இந்திய தேசத்தின் மீதான பக்தி, மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தின் மீதான அக்கறை உள்ளிட்ட வற்றால் அவர் இந்திய மக்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்கிறார்.. அவரைப் போலவே தான் வெ. இறையன்பு ஐஏஎஸ்ஸும் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருக்கிறார்.. நேர்மையற்ற எந்தவொரு செயலிலும் அவர் ஈடுபட மாட்டார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று தான்..

இப்படிபட்ட நற்குணங்களுடன் கூடிய ஒருவரை இன்றைய உலகில் பார்ப்பது அரிது என்பதுடன் இந்தியாவின் முதல் குடிமகனாக இந்த நாட்டுக்கு டாக்டர் அப்துல் கலாம் சேவையாற்றி இருந்தாலும் விளிம்பு நிலை மனிதர்களின் துயரைப் போக்கும் வகையில் தனித்தனி உத்தரவுகளைப் பிறப்பித்து அவர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க கூடிய சந்தர்ப்பம் டாக்டர் அப்துல் கலாமுக்கு அமைந்திருக்கவில்லை.. ஆனால் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் ஒடுக்கப்பட்ட,
அங்கீகாரம் கிடைக்காத மக்களின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.. அந்த ஒரே நற்செயலுக்காக டாக்டர் அப்துல் கலாம் போல தமிழினத்தில் மற்றொரு மா மனிதராக நம்மிடையே வாழும் வெ. இறையன்பு ஐஏஎஸ்ஸை நாம் கொண்டாட வேண்டும் என்று உணர்ச்சி ததும்ப கூறினார் அந்த மின்சார வாரிய அதிகாரி..

உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை வெளியே காட்டி கொள்ளாமல் அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்..

100 இளைஞர்களை கொடுங்கள்.. இந்த தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்றார் வீரத்துறவி விவேகானந்தர்.. 100 இளைஞர்களின் உள்ள உறுதியோடு ஒற்றை மனிதராக தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை நேர்மை பாதைக்கு திருப்ப கடுமையாக போராடுகிறார் தலைமைச் செயலாளர்..
அவரின் கனவு மெய்யானால் தமிழ்நாட்டிற்கு விடியல் விரைவில் நிச்சயம்..

2022 புதிய ஆண்டின் முதல் நாளில் இந்த கட்டுரையை விட சிறப்பான வாழ்த்துகளை
என்னால் வடிக்க முடியவில்லை..

3 thoughts on “தமிழ் இனத்தின் இன்னொரு அப்துல் கலாம், வெ. இறையன்பு ஐஏஎஸ்… இளம் தலைமுறையினர் கொண்டாட வேண்டிய மாமனிதர்!”
  1. தங்களின் ஒவ்வொரு பதிவும் உணர்ச்சி மிக்கதாகவும் உரைநடை வடிவில் இருப்பதால் படிக்கும்போது அந்த நிகழ்வு அப்படியே கண்ணெதிரே தோன்றுகிறது. தங்களின் பதிவை தினந்தோறும் பதிவு செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  2. மதிப்புக்குரிய தலைமை செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு IAS அவர்களை பற்றிய மிகவும் பொருத்தமானதொரு கட்டுரையை இந்த புத்தாண்டு தினத்தில் படித்ததில் பெருமகிழ்ச்சி. காதுக்கு எட்டிய செய்தி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல கூர்ந்து கவனித்து பகிரபட்டுள்ளது.. இதை போல ஆயிரம் அரும்பெரும் செயல்பாடுகள் கண்ணுக்கு தெரியாமல் நடந்து கொண்டே இருக்கும் என்பதை இந்த கட்டுரையின் கருத்துக்களை கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த சொல்லாக்கம்.. நன்றிகள்.

Comments are closed.