Sun. May 5th, 2024

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.. அதை நிரூபிக்கும் வகையில் தந்தம், பற்கள், கால் நகம், முடி ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும்.. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை தான் செல்வாக்கு என்பது இறந்த காலத்தில் மட்டுமல்ல நிகழ் காலத்திற்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது..
அதுவும் ஆட்சி பறிபோன 6 மாதத்திற்குள்ளாகவே படை பரிவாரங்கள் எல்லாம் காணாமல் போனது பெரும் சோகம் தான்..
அந்த வகையில் பரிதாபத்திற்குரியவராக காட்சியளிப்பவர் சாட்சாத் எடப்பாடி பழனிசாமி தான்..

முதல்வராக இருந்த 4 ஆண்டுகளிலும் சென்னையில் உள்ள அவரது அரசு பங்களாவிலும் சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகர் சொந்த இல்லத்திலும் எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் வருகை தந்தனர்.. வரிசையில் நிற்க வைத்து அவரை தரிசனம் செய்ய அனுமதித்தனர் காவல் துறையினர்.. அந்தளவுக்கு அன்றைக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தன.. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி இருப்பது தான் காலம் கற்பிக்கும் பாடம்..

எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தோடு சென்னை பசுமை வழிச்சாலை அரசு பங்களாவில் இபிஎஸ் தங்கியிருந்தால் அவரது விசுவாசிகள் மட்டுமே பார்த்து செல்கின்றனர்.. மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இபிஎஸ் இல்லத்தில் இருந்து கைபேசி அழைப்பு வந்தால் மட்டுமே அங்கு சென்று அவரை சந்திக்கின்றனர்.. மே 2 ஆம் தேதிக்கு முன்பாக இருந்த பரபரப்பு கடந்த 6 மாதமாக மிஸ்ஸிங்..

சென்னை அரசு பங்களா தான் பெரும்பாலான நாட்களில் வெறிச்சோடி கிடக்கிறது என்பதால் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை இல்லத்தில் அதிக நாட்கள் தங்குகிறார்..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அவரது சேலம் இல்லம் கொஞ்சம் கலகலப்பாகவே இருந்து வந்தது.. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக சென்னை அரசு பங்களா போலவே சேலம் இல்லமும் வெறிச்சோடிதான் காணப்படுகிறது என்கிறார்கள் அவரது விசுவாசிகள் சிலர்..

ஒன்றிய அளவிலான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக பார்க்க வந்தால் வீட்டிற்குள் வரவழைத்து மணிக்கணக்காக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.. ஆனால் முதல்வராக பதவி வகித்த நான்காண்டு காலத்தில் வீட்டின் முகப்பில் உள்ள போர்டிகோவிலேயே நிற்க வைத்து சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு அனுப்பி வைத்திடுவார் இபிஎஸ் என்கிறார்கள் அவர்கள்..

எப்படியும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை விரட்டி விட்டுவிட்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி ஏற்றிடுவார் என்று கனவில் இருந்த மாநில அளவிலான நிர்வாகிகள் அவரை அடிக்கடி வந்து சந்தித்து விட்டு சென்றனர்..

ஆனால் வி. கே. சசிகலா எனும் காகித கத்தியை காட்டி மிரட்டி இபிஎஸ் ஸின் வீம்பை குறைத்து உட்கட்சி தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியை வலிமை படுத்தி கொண்டார் ஓபிஎஸ்.. அவரின் திருவிளையாடல்களை கண்டு மிரண்டு போன இபிஎஸ் ஆதரவுக் கூட்டம் நடுநிலை வகிப்பது என்று முடிவெடுத்து இரட்டை தலைமைக்கு காவடி தூக்க ஆரம்பித்து விட்டது.. இதன் காரணமாக இபிஎஸ்ஸை மட்டுமே ஆதரித்து அவரது பின்னால் அணிவகுத்த கூட்டம் குறைந்தது..

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் தங்கியிருந்தாலும் சரி சேலத்தில் தங்கியிருந்தாலும் சரி அவரது விசுவாசமிக்க ஆதரவாளர்களே அடிக்கடி வந்து பார்ப்பது இல்லை.. தனக்கான செல்வாக்கு குறுகிய காலத்திற்குள்ளாகவே குறைந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, தனது மனசாட்சியான சேலம் இளங்கோவனிடம் கண் கலங்கி இருக்கிறார்..

தன்னை தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வர்களில் ஒருவராக்கிய எஜமானுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், தற்போதைய மாவட்ட செயலாளர்களுக்கு எதிரணியில் இருப்பவர்கள் என ஒவ்வொருவரிடமும் மனமுருக பேசி இபிஎஸ்ஸை வந்து பாருங்கள்.. எதிர்காலத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக அவர் மிளிர்வார்.. உங்களுக்கு பொற்காலம் காத்திருக்கிறது என ஆசை வார்த்தைகளை தூவி அழைத்து வருகிறார்..

அவரின் நெஞ்சுருக பேச்சில் மயங்கி தான் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி அண்மையில் ஆளுயர மாலையோடு வந்து இபிஎஸ்ஸை குளிர வைத்து விட்டு சென்றுள்ளார் என்கிறார்கள் இபிஎஸ்ஸின் தீவிர விசுவாசிகள்..
இதுபோன்ற சந்திப்புகளின் போதுதான் தனது தலைமையில் 4 ஆண்டு காலம் ஆட்சி இருந்த போது கட்சியினருக்கு செய்த உதவிகள், தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மணிக்கணக்காக பேசுகிறாராம் இபிஎஸ்.. அதைவிட முக்கியமாக அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் சரி பட்டு வரும். அப்படி வரும் தலைவரும் வி. கே. சசிகலா, டிடிவி தினகரனை முழு மனதோடு முழுமையாக எதிர்க்கும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று தன்னையே முன்னிலை படுத்தியே பேசுகிறாராம் இபிஎஸ்.. அவரின் புராணத்தை சகித்துக் கொண்டு புறப்படும் நேரத்தில் தான் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்து பிரமுகர்களை நெகிழ்ச்சியடைப செய்து விடுகிறாராம் எடப்பாடி பழனிசாமி..


அண்மைக்காலமாக இபிஎஸ் உதிர்க்கும் வார்த்தைகள்..


அடிக்கடி வந்து பார்த்துட்டு போங்க என்பதுதான்..


இப்படி இபிஎஸ் வேண்டுகோள் வைத்த போது அவரது இல்லத்தில் இருந்த அதிமுக பிரமுகர் ஒருவர் நல்லரசுவிடம் வேதனையோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறோம்..

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது இபிஎஸ் ஸுக்கு நாங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.. ஒத்த கான்ட்ராக்ட் கூட, அதுவும் உள்ளூர் வேலையை கூட சொந்தக்காரர்களுக்குதான் கொடுத்தார்.. சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுத்து இருந்தால் கூட கணிசமாக பொருளாதார நிலை உயர்ந்து இருக்கும்.. அப்போது உதாசீனப்படுத்திவிட்டு இப்போது உருகி உருகி பேசினால் காயப்பட்ட மனசு ஆறிடவாப் போகிறது..

தலைமை பதவியை காப்பாற்றி கொள்ளவும் திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தொண்டர்கள் படை தேவைப்படுகிறது..அதற்கு மேலாக அதிமுகவின் மானத்தை காப்பாற்றி கொள்ள உள்ளாட்சி தேர்தல் வெற்றியும் முக்கியமாக இருக்கிறது..அதற்காக தொண்டர்களை பாசக்கயிறு கட்டி இழுக்க பார்க்கிறார்..கடந்த பத்தாண்டும் பணம் தானே பிரதானம் என்று இருந்தார்கள்..இப்போதும் பணத்தையே கட்டி அழுவட்டும்..அதிமுக அமோக வெற்றி பெற்று விடும். நாங்கள் எல்லாம் இனிமேலாவது பிழைக்கிற வழியை பார்த்து கொள்கிறோம்..

இப்படிபட்ட மனநிலைக்கு தான் அதிமுக நிர்வாகிகள் பெரும்பான்மையானோர் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் அபரிதமான மக்கள் செல்வாக்கு பெற்ற எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் தலைமை ஏற்று வழிநடத்திய அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள துயரம்….