Sun. May 5th, 2024

மத்திய பாஜக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றாக தேசிய பள்ளி சிறார் நலத்திட்டம், செயல்பட்டு வருவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் படி மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் உடல் நலத்தை கண்காணிப்பதற்கும் நலிவுற்ற மாணவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டு அரசு மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்..

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பள்ளிகளுக்கு செல்வதற்கு வசதியாக ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 50 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. இதன் செயல்பாடுகளை சுகாதார துறையின் மாவட்ட துணை இயக்குனர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.. மாதந்தோறும் ஒப்பந்த தொகையினை வழங்கும் பொறுப்பு துணை இயக்குனர் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.. மாநில அளவில் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் சென்னையில் இயங்குகிறது.. இதன் தற்போதைய தலைமை அதிகாரி தாரேஸ் அகமது ஐஏஎஸ்..


2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாகன வாடகை முறையாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது.. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி ன்பதால், அதில் எந்த குளறுபடியும் அப்போது நடக்கவில்லை.. ஆனால் 2020 ல் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவிலான இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.


கொரோனா சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு, தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளுக்கும் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டற்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட வாகனங்களையே அரசு மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.. இதனால் நிர்ணயிக்கப்பட்ட கிலோமீட்டர் அளவுக்கு மேலான இயக்கம், பணிநேரம் அதிகரிப்பு போன்றவற்றால் வாகன ஓட்டுநர்கள் அதிகமான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்..

இந்த திட்டத்தில் வாகனங்களை இயக்குபவர்களில் பெரும்பான்மையானோர் வேலையில்லா இளைஞர்களாகவே உள்ளனர்.. பெரும்பாலும் வங்கிக் கடன் உதவிப் பெற்றே வாகனங்களை பெற்றுள்ளனர்.. ஓட்டுநர் பணி மூலம் கிடைக்கும் சம்பளம் தான் அவர்களின் குடும்ப வருமானமாக உள்ளது..

இப்படி சிறிய முதலீட்டில் வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டு உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு மாதந்தோறும் ஒப்பந்த பணத்தை தராமல் மூன்று மாதம் ஆறு மாதம் என நிலுவை வைத்து சுகாதார துறை துணை இயக்குனர்கள் வழங்கி வருவதால், இந்த திட்டத்தில் இணைந்து செயல்படும் ஓட்டுநர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்து தங்களுக்கான ஒப்பந்த தொகையை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று சுகாதார துறை உயரதிகாரிகளை அடிக்கடி நேரில் சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.

. மேலும் டீசல் விலை உயர்வு, காப்பீடு தொகை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் ஈடுகட்டும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.. ஆனால் அவர்களின் கோரிக்கையை தாரேஸ் அகமது ஐஏஎஸ், சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் கண்டு கொள்ளாததால் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸை சந்தித்து ஓட்டுநர்கள் முறையிட்டு உள்ளனர்.. மேலும் அவர் ஆய்வுக்காக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும் ஓட்டுநர்கள் ஒன்று திரண்டு முறையிடுவதால் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது..

அந்த திட்டத்தின் நிர்வாக இயக்குனர் தாரேஸ் அகமது ஐஏஎஸ்ஸின் அலட்சியத்தால்தான் ஓட்டுநர்கள் தன்னை நாடி வருவதாகவும் அவர் உணர்ந்துள்ளார்.. இப்படி பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஒமிக்ரானை எதிர்கொள்வது தொடர்பாக அந்த துறையின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் புறப்பட்ட போது ஓட்டுநர்கள் அவரை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.. இதனால் எரிச்சல் அடைந்த அவர், ஆய்வுக் கூடத்திலேயே தாரேஸ் அகமது ஐஏஎஸ்ஸை கடுமையாக கடிந்து கொண்டு உள்ளார்..

சிறார் நலத்திட்டற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை வேறு பணிகளுக்கு ஒதுக்காமல் ஒப்பந்ததாரர்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டும், விலை உயர்வை கருத்தில் கொண்டு வாகன ஒப்பந்தத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று கண்டிப்பான குரலில் சொல்லியுள்ளார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.. அதற்கு பதிலளித்த தாரேஸ் அகமது, கொரோனா தொற்று நெருக்கடியை காரணம் காட்டி விளக்கம் சொல்ல இருவருக்குமான கருத்து பரிமாற்றம் வாக்குவாதமாக மாறியுள்ளது.. அமைச்சர் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாகவே வாகன ஓட்டுநர்கள் தங்கள் கோரிக்கைகளை அழுத்தமாக தெரிவித்து வரும் நிலையில், அதனை நிறைவேற்றும் பொருட்டு தாரேஸ் அகமது ஐஏஎஸ் ஒரு சில மணி நேரம் செலவிட்டாலே போதும் வாகன ஓட்டுநர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை எட்டி விட முடியும் என்று கூறும் சுகாதார துறை அதிகாரிகள் சிலர், முதல் அமைச்சரின் செயலாளர்களின் அரவணைப்பில் இருக்கும் தாரேஸ் அகமது ஐஏஎஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படாமல் வீம்பு பிடித்து கொண்டு இருக்கிறார்.. இவரை போன்ற அதிகாரிகளால் தான் திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று புலம்புகிறார்கள்..

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் நலிவுற்ற மக்களின் மீது கருணை காட்ட வேண்டும்…