Sun. May 5th, 2024

தாரை இளமதி..சிறப்புச் செய்தியாளர்.

நினைவுகளில் வாழும் மறைந்த தலைவர்களைப் பற்றிய தகவல்கள், அவர்களின் மறைவுக்குப் பிறகும் பலரால் அல்லது சிலரால் எப்போதுமே நினைவு கூரப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், அண்மையில் தற்கொலை செய்து கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலத்தைப் பற்றிய தகவல்கள், அந்த துறையினரிடம் மட்டுமல்ல, ஏற்கெனவே அவர் பணிபுரிந்த வனத்துறையிலும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் நல்லவையை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அவர் மறைந்து 25 நாட்களுக்கு மேலான பிறகும், அவரைப் பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவதை காட்டிலும், அவரால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினர் நாள்தோறும் தங்கள் வேதனையை யாரிடமாவது பகிர்ந்து கொள்வது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.  அவர்களில் ஒருவரான ஓய்வுப்பெற்ற வனத்துறை அலுவலர், நல்லரசுவை சந்திக்க நேர்ந்த நேரத்தில் வீரபாண்டி ஆறுமுகத்திடம் சிக்கி சுற்றுச்சூழல் வாரியத் தலைவர் மறைந்த வெங்கடாசலம் சின்னாபின்னமான தகவலை கூற, கூற, சிங்கம் திரைப்படத்தின் காட்சிகள் மீண்டும் ஒருமுறை கண்முன்னே வந்தது.

2006 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தது. மே 15 ஆம் தேதி திமுக அமைச்சரவையில், வேளாண் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட வீரபாண்டி ஆறுமுகம் மறுநாள் சேலம் வந்து, வீரபாண்டியில் உள்ள அவரது இல்லத்திலும், அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையிலும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோரின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். அந்த நிகழ்வு நள்ளிரவை கடந்த வேளையில், அவருக்கு மிகவும் நெருக்கமான வனத்துறை அலுவலர் ஒருவர், வெள்ளைத்தாளில் கைப்பட எழுதிய ஒரு விண்ணப்பத்தை நீட்டுகிறார். அதில், அவருக்கான பணி மாறுதல் கோரிக்கை எழுதப்பட்டிருந்தது. அதை படித்து பார்த்த வீரபாண்டியார், அந்த வனத்துறை அலுவவரிடம் சிரிப்பும் கண்டிப்பும் கலந்த குரலில், என்னய்யா, அமைச்சருக்கான லட்டர் பேடே இன்னும் அச்சு அடிக்கப்படவில்லை. அதற்குள் பணிமாறுதல் கேட்டு விண்ணப்பம் கொடுக்கிறாய் என்று கேட்க, தலைவரே, நீங்கள் ஒரு போன் போட்டால், நாளை காலையிலேயே பணிமாறுதல் கிடைத்துவிடும், சிபாரிசு கடிதம் எல்லாம் எதற்கு? என்று அந்த வனத்துறை அலுவலர் சொல்லியிருக்கிறார்.

திமுக ஆட்சி அமைந்து மூன்றாவது நாளிலேயே புதிய இடத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டும் என நீ முடிவெடுத்துவிட்டாய் என்று கூறி, திமுக மாவட்டச் செயலாளருக்கான தனது லட்டர் பேடில், அப்போதைய மாவட்ட வன அதிகாரிக்கு (டி.ஃஎப்.ஓ) கைப்பட எழுதி கையெழுத்திட்டு கொடுத்து அனுப்பி வைக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் பரிந்துரை கடிதத்தை பெற்றுக் கொண்ட அந்த டி.எ.ஃப்.ஓ., அமைச்சர் சிபாரிசு செய்ததால் நான் பணிமாறுதல் போட்டு விட வேண்டுமா? வனத்துறை அமைச்சர் சொன்னால்தான் கேட்பேன் என்று கறராக கூறிவிட, பணிமாறுதல் கேட்டு சென்ற வனத்துறை அலுவலர் ஏமாற்றுத்துடன் திரும்பி வந்துவிடுகிறார். அவரை மேலும் மேலும் நோகடிக்கும் விதமாக, சேலம் மாவட்டத்திலேயே தண்டனைக்குரிய பணி இடத்திற்கு, அந்த வனத்துறை அலுவலரை இடம்  மாற்றம் செய்து டி.எ.ஃப்.ஓ.,உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் அங்கு உடனடியாக பணியில் சேராமல் வீரபாண்டியாரின் ஆதரவு அதிகாரி விடுமுறையில் சென்றுவிடுகிறார். அப்போதும் விடாமல், ஏற்கெனவே தண்டனைக்குரிய இடத்திற்கு பணி மாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை அவராகவே ரத்து செய்துவிட்டு, அவரது இருப்பிடத்திற்கு வெகு தொலைவில் உள்ள கிட்டதட்ட 100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு இடத்திற்கு பணி  மாறுதல் செய்து, உடனடியாக பணியில் சேர வேண்டும் என தனது பதவிக்குரிய அதிகாரத்தோடு கண்டிப்பான வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கிறார் அந்த டி.எஃப்.ஓ. 

வீரபாண்டியாரின் ஆதரவு அதிகாரிக்கும் மாவட்ட வன அதிகாரிக்கும்(டி.எஃப்.ஓ)  இடையேயான பனிப்போர் இருவாரங்கள் கடந்திருந்த நிலையில், வார விடுமுறை நாளில் சேலம் வந்திருந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஞாயிறு இரவு அன்று சென்னை திரும்புவதற்காக, ஜங்ஷனில் உள்ள ரயில் நிலையத்திற்கு வருகிறார். அவர் செல்லும் ரயில் வருவதற்கு மேலும் 30 நிமிடங்கள் ஆகும் என்று சொல்ல, ஓய்வறையில் நெருக்கமான திமுக நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில், முதல் பாராவில் இடம் பெற்ற வனத்துறை அதிகாரி, வீரபாண்டியாரை சந்தித்து பொன்னாடை கொடுக்க, என்னய்யா, முதல் பணிமாறுதல் உத்தரவு உனக்குதான் போட்டேன்..வழக்கமாக போடும் வெறும் பொன்னாடை தானா, ஆப்பிள் பழம் எல்லாம் தர மாட்டியா என கிண்டலாக கேட்க, விருப்பப்பட்ட இடத்திற்கு பணி மாறுதல் போடாதது மட்டுமல்ல, தண்டனை வழங்கும் விதமாக இரண்டு இடங்களுக்கு அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் பற்றியும் கலங்கிய குரலில் சொல்லியிருக்கிறார் அந்த வன அலுவலர். அதைகேட்டு ஆவேசமான வீரபாண்டியார், டி.எஃப்.ஓ.வை உடனே வந்து என்னைப் பார்க்க சொல்லு என தனது உதவியாளரிடம் சீற, அடுத்த பத்து நிமிடங்களுக்குள்ளாக,  3 கிலோ தூரத்தில் உள்ள அஸ்தம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் இருந்து பறந்து வருகிறார் டி.எஃப்.ஓ.

அவரை பார்த்த நொடியே சீற்றத்தோடு என்னய்யா, நான் சொன்ன இடத்தில் பணிமாறுதல் போடாமல், உன் அதிகாரத்தை காட்டுறீயா என எகிறியுள்ளார் வீரபாண்டியார். அவரின் ஆவேசத்தைப் பார்த்து வேர்த்து வியர்த்துப் போன  அந்த டி.எஃப்.ஓ, இல்லை அய்யா, வனத்துறை அமைச்சரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்யலாம்னு இருந்தேன் என தயங்கியபடியே சொல்ல, அந்த ஆளு ( அப்போதைய வனத்துறை அமைச்சர் திருச்சி செல்வராசு) மதிமுகவுக்கு போய்விட்டு வந்தவர். அவரிடம் எல்லாம் நான் பேசனும்மா..சேலத்தில உட்கார்ந்துகிட்டு நான் சொன்னா செய்ய மாட்டியா நீ என கோபத்தோடு கொந்தளித்துவிட்டு, நீ போ, நாளைக்கு காலையில நீ சேலத்தில இருக்க மாட்டே என்று எகிறிவிட்டு, சென்னைப் புறப்பட்டு சென்றுள்ளார் அப்போது நேரம் இரவு 10.20 மணி.

அதேநேரத்தில் வீரபாண்டியாரை மரியாதை நிமித்தமாக வழியனுப்ப வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, நடந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டு டி.எஃப்.ஓ.விடம் சென்று வீரபாண்டியாரின் செல்வாக்கைப் பற்றி எடுத்துரைக்க முயன்ற நேரத்தில், ஜி.கே.மணியை சந்தித்த திமுக ஆதரவு வன அலுவலர், இடைப்பட்ட இரு வார காலத்தில் நீங்கள் பரிந்துரைத்த ஒன்றிரண்டு வன அலுவலர்களுக்கும் இந்த டி.எஃப்.ஓ.தான் பணி மாறுதல் வழங்காமல் கிடப்பில் போட்டவர் என்று பற்ற வைக்க, ஜி.கே.மணியும் தன் பங்கிற்கு டி.எஃப்.ஓ.வை சகட்டுமேனிக்கு காய்ச்சி எடுத்துள்ளார்.

காலையில் டி.எஃப்.ஓ. தனது அலுவலகத்திற்குச் சென்று பணிகளை துவங்கிய நேரத்தில், சென்னையில் இருந்து ஃபேக்ஸில் வந்த உத்தரவைப் பார்த்து அந்த டி.எஃப்.ஓ ஆடிப்போய்விட்டார். ராமநாதபுரத்திற்கு அவர் தூக்கி அடிக்கப்பட்டிருந்தார். அதை பார்த்து வெலவெலத்துப் போன அந்த டி.எஃப்.ஓ உடனடியாக விடுமுறை கடிதத்தை எழுதிவைத்து ஓடிப்போகிறார். அடுத்தடுத்த நாட்களில் அந்த டி.எஃப்.ஓ. எங்கே இருக்கிறார் என்பதை கூட சேலம் மாவட்ட வன அலுவலர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலைதான் இருந்துள்ளது. இந்த நேரத்தில் புதிய டி.எஃப்.ஓ, பணியில் சேர்ந்தவுடனேயே, மரியாதை நிமித்தமாக சேலத்தில் இருந்த வீரபாண்டியாரை சந்தித்துள்ளார். அவர் கையோடு கொண்ட போன கோப்பில் முதல் தாளே, திமுக ஆதரவு வன அலுவலருக்கான பணி மாறுதல் உத்தரவுக்கான அதிகாரப்பூர்வ அரசு ஆணைதான் இருந்தது.

நீ உத்தரவு போடாதே என்று கூறி அவரை அனுப்பி வைத்திருக்கிறார் அமைச்சர் வீரபாண்டியார். பத்து நாள் தலைமறைவுக்குப் பிறகு தனது அலுவலகத்திற்கு வந்த டி.எஃப்.ஓ., பழைய தேதியில், திமுக ஆதரவு அதிகாரிக்கு, அவர் கேட்ட இடத்திற்கே பணி மாறுதலுக்கான உத்தரவு தயாரித்து அதில் கையெழுத்திட்டு, உத்தரவை பிறப்பித்துவிட்டே, ராமநாதபுரத்திற்குச் சென்று, பொறுப்பு ஏற்றிருக்கிறார்.

தனது அதிகார திமிரால், அமைச்சர் வீரபாண்டியாரின் பரிந்துரையை புறக்கணித்துவிட்டு, தன் கீழ்உள்ள வன அலுவலருக்கு தண்டனைக்குரிய அலுவலகமாக கருதப்படும் எந்தெந்த இடங்களுக்கு பணி மாறுதல் உத்தரவு பிறப்பித்தாரோ, தன் வினை தன்னைச் சுடும் என்ற சொலவாடைக்கு ஏற்ப, தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நிலைமைக்கு உள்ளானார் அந்த டி.எஃப்.ஓ.

அந்த டி.எஃப்.ஓ யார் என்றால், தற்கொலை செய்து கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவரான சாட்சாத் வெங்கடாசலம்தான்…

மேலே விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வில், வீரபாண்டியாரும் உயிரோடு இல்லை..வெங்கடாசலமும் உயிரோடு இல்லை. ஆனால், நிகழ்வு தொடர்பான தகவல்களை இன்றைக்கும் மனதில் வைத்திருக்கும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உயிரோடுதான் இருக்கிறார். இந்த கட்டுரையில் இடம் பெறாத இன்னொரு பிரமுகரான கௌசிக பூபதியும் சேலத்தில் உள்ளார். இவர் அமைச்சர் வீரபாண்டியாரின் சிறப்பு உதவியாளராக இருந்த முருகேஷ் பூபதியின் உடன்பிறப்பு ஆவார். முருகேஷ் பூபதி வீட்டுக்குச் சென்ற புதிய டி.எஃப்.ஓ., பணிமாறுதல் உத்தரவை அவரிடம்தான் வழங்கியுள்ளார்.

இப்படி, 2006 ஆம் ஆண்டில் தனக்கு அதிகமான மனஉளைச்சலை ஏற்படுத்திய வெங்கடாசலத்தைப் பற்றி வருத்தமான குரலில் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அந்த திமுக ஆதரவு வன அலுவலர், என்ன இருந்தாலும், வெங்கடாசலம் மூளைக்காரன் சார். அதீத திறமை இருக்கும் இடத்தில் திமிரும் இருக்கும் என்று கூறி வெங்கடாசலத்தின் தற்கொலையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 1991-1996 அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா வரை அசைக்க முடியாத நபராக இருந்த வெங்கடாசலம், திமுக ஆட்சிக்காலமான 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பெட்டி பாம்பாக அடக்கி வைக்கப்பட்டிருந்தார். அதற்கு காரணம் வீரபாண்டியார்தான். அவரின் அரசியல் பாணியே தனி சார். அவரைப் போல ஒருவர் சேலம் மாவட்ட திமுகவுக்கு எப்போது கிடைப்பார் என்றார் சோகமான குரலில்..

அவரை ஆறுதல்படுத்திய நல்லரசுக்கு அறிமுகமான சேலம் திமுக நிர்வாகி, வீரபாண்டியாரின் மறைவுக்குப் பிறகு சேலத்தில் ஆளுமைமிக்க திமுக தலைவர் ஒருவர் கூட இல்லாததது சேலம் மாவட்ட திமுகவுக்கான துரதிர்ஷ்டம். அவரை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்யும் திமுக நிர்வாகிகள் கூட, அவரின் ஆளுமை குணத்தை இன்றைக்கும் நினைவுக்கூர்ந்து மெய்சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீரபாண்டியாரின் இடத்தை நிரப்ப திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்னவெல்லாமோ செய்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியை அனுப்பினார். அவரும் சோபிக்கவில்லை. இப்போது கே.என்.நேரு, சேலம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற அவருக்கும் கூட, சேலம் கள அரசியல் கைகூட வில்லை.

சேலம் மாவட்டத்தில் வலுவான அரசியலை முன்னெடுத்து வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு டப் பைட் கொடுக்கும் அளவுக்கு அதீத ஆளுமைக்குணம் கொண்ட ஒரு தலைவரைதான் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்ட தலைவர், சேலம் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தலைவர்களில் ஒருவரை கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் வேதனையும் ஏக்கமும் ஒருசேர கலந்த குரலில் அந்த திமுக நிர்வாகி..

அவரின் குரலை அப்படியே முன்மொழிகிறார்கள் வீரபாண்டியாருக்கு எதிரான முகாமில் உள்ள சேலம் திமுக நிர்வாகிகள் பலர். வீரபாண்டியாரின் மீது எண்ணற்ற விமர்சனங்களை வைத்தாலும்கூட, அவரைப் போல அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் விரட்டி, விரட்டி வேலை வாங்கிய அவரின் அரசியல் செயல்பாடுகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மறந்துவிடவும் முடியாது என்றார் முத்தாய்ப்பாக…

One thought on “வீரபாண்டியார் பாணி அரசியலுக்கு ஏங்கும் சேலம் திமுக நிர்வாகிகள்…..”

Comments are closed.