Fri. Nov 22nd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

இந்தியாவின் சிறந்த முதல்வர்… முதல் இடத்திற்கு முந்தி விட்டார்..என்றெல்லாம் புகழ் மாலை சூட்டுபவர்கள் யாராலும் தமிழகத்தின் முதல்வர் பதவியில் யாரையும் அமர்த்திவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்பவர்கள்தான் அரசியல்வாதி என்கிற நிலையில் இருந்து உயர்ந்து மக்களின் மனங்களை வென்ற தலைவராக பரிமளித்திருக்கிறார்கள். உங்கள் தந்தையும் திமுகவின் அசைக்க முடியாத தலைவராகவும் வாழ்ந்து வரலாறாகியிருக்கும் மறைந்த கலைஞர் மு.கருணாநிதிக்கு கிடைக்காத நல்வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு எம்எல்ஏக்களால்தான் முதல்வராக கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், நீங்கள் பெரும்பான்மையான மக்களால் முதல் அமைச்சர் பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.


முதல் அமைச்சர் பதவி என்பது மலர்க் கிரீடம் அல்ல… அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் எல்லோராலும் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், அரசியலையும், பொது வாழ்க்கையையும் வாழ்வியலாக கொண்டவர்களுக்கு முதல் அமைச்சர் பதவி என்பது மிகப்பெரிய அங்கீகாரம். தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயங்களாக இடம் பெறக் கூடியது. இதற்கு முன்பு முதல் அமைச்சர் பதவி வகித்தவர்கள் எல்லோரும் பன்முகத்தன்மைகளால், தலைமுறைகளை கடந்தும் நினைவுக்கூரத்தக்கவர்களாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


வாழ்வின் நிறைவுப்பகுதியில் முதல் அமைச்சராக பதவியேற்று இருக்கிறீர்கள். இதற்கு முந்தைய தேர்தல்களில் காணப்படாத அதிசயமாக மொத்த ஊடகங்களும் நீங்கள்தான் தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவியேற்க வேண்டும் என முனைப்பாக பரப்புரையை மேற்கொண்டன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்கு காரணம், பத்தாண்டு கால அதிமுக ஆட்சி, கட்டற்ற வகையில் ஊழல்களில் திளைத்ததுதான். அதையும் கடந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் அடிமை அரசாக விளங்கியதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உழைப்பால் அமைந்த அதிமுக ஆட்சியையும் ஜனநாயகத்தை, தமிழ் இனத்தை நேசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தார்கள்.


அந்த ஆட்சி மீதான கோபம்தான், திமுகவை அரியணையில் ஏற்றியது. 8 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் தலைதூக்கிய கோபம், இன்றைய தேதியில் திமுக ஆட்சிக்கு எதிராகவும் எழுந்திருக்கிறது என்பதான் உள்ளபடியே வேதனை தரக்கூடிய ஒன்று.


திமுக ஆட்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை, குளறுபடிகளை இன்றைய தேதியில் கூட நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையோ என்பதும், அன்றாட காய்ச்சிகளின் வயிற்றில் அடித்த அரசியல்வாதிகளும், பொது நலன் என்ற சிந்தனையே இல்லாத அரசு அலுவலர்களும் சொல்கிற தகவல்களை முழுமையாக நம்பி விடுகிறீர்களோ என்ற அச்சம், நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கை மூலம் வெளிப்பட்டிருக்கிறது.


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய அதே நாளில், அவருக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு வரிக்கு வரி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்த அதே நாளில்தான் (20.01.2022) கோடம்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை நான் வாங்கினேன். அப்போது கிடைத்த தகவல்களை வைத்துதான் 20 முதல் 30 % பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இல்லை என்ற தலைப்பில் ஒரு செய்தி கட்டுரையை வெளியிட்டேன்.


அந்த கட்டுரையை வாசித்த ஒன்றிரண்டு ஊடக நண்பர்கள் கைபேசியில் தொடர்பு கொண்டு ஆவேசமாக பேசினார்கள். கட்டுரை மென்மையாக இருக்கிறது என்றும் தாங்கள் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் இருப்பதாகவும், மிளகாய் தூளை நாவில் வைத்து சுவைத்துப் பார்த்தால் காரத்தை உணரமுடியவில்லை என்றும் கொதித்தார்கள். அவர்களுக்கு நான் அளித்த பதில், இதுதொடர்பாக முதல்வர் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று பார்ப்போம் என்று கூறினேன். ஆனால், நேற்றைய ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்புகள், கோடிக்கணக்கான மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் இல்லை என்பதுதான் அறத்தோடு வாழும் ஏழை மக்களின் கருத்தாக உள்ளது.

நேற்று முன்தினம் நான் வாங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை இன்று காலையில்தான் பிரித்து பரிசோதித்து பார்த்தேன். ஏலக்காய் 10 கிராமுக்கு பதிலாக 5 கிராம்தான் உள்ளது. 50 கிராம் முந்திரிக்குப் பதிலாக 22 கிராமும், 50 கிராம் திராட்சைக்குப் பதிலாக 31 கிராமும்தான் உள்ளது. இப்படிபட்ட லட்சணத்தில்தான், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எதிர்க்கட்சித்தலைவரை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து சவடால் விட்டு அறிக்கை வெளியிட்டார்.

என் வாழ்நாளில் பார்த்திராத வண்ணத்தில் வெல்லம் இருக்கிறது.


மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கலைஞர் ஆட்சிக்காலம் வரை அன்றாட காய்ச்சிகளின் வயிற்றில் அடிக்கும் கொடூரச் செயல்களை ஒரு போதும் அனுமதித்தது இல்லை. ஆனால், முதல்முறையாக முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்து 9 மாதங்களை கடப்பதற்குள் அடிதட்டு மக்களின் மடியில் கையை வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் என்பது 100க்கு ஆயிரம் சதவீதம் உண்மை.

அரசு நிர்வாகத்தின் கீழ்மட்டத்தில் நடைபெறும் ஊழல்களை, முறைகேடுகளை அதிகாரிகளிடமும் புகழ்பாடியே வாழ்க்கையே நகர்த்தும் அரசியல்வாதிகளிடமும் கேட்டு அறிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு முன்பு முதல்வர்களாக இருந்தவர்கள், அடிமட்ட தொண்டர்களின் குரல்களை கேட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தார்கள். முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தவுடன் நீங்கள் தொண்டர்களிடம் இருந்து வெகு தொலைவுக்கு விலகிப் போய்விட்டீர்கள்.

இந்தியாவின் ராஜதந்திரி என்று புகழப்படும் உங்கள் தந்தையான கலைஞருக்கு, எண்ணற்ற நட்பு குழாம் உண்டு. இலக்கியவாதிகள், திரைத்துறையினர், இசைக்கலைஞர்கள், பால்ய சிநேகிதர்கள், நேர்மையான ஊடகவியலாளர்கள் என அனைத்து துறையினரிடமும் நட்பு பாராட்டி, அவர்கள் மூலம் நாட்டு நடப்புகளை அரியணையில் இருந்த போதும், இல்லாத போதும் ஆர்வமுடன் அறிந்து உண்மையை உணர்ந்தவர்.


அரசியல்வாதிக்கும், தலைவருக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. உங்கள் காலம் முழுவதும் விமர்சனம் செய்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைப் போக்கை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2011 முதல் 2016 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விவசாயிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே அரசு அதிகாரிகள் தேடிச் சென்று உழவுத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார். விவசாயிகளும், வேளாண் அதிகாரிகளும் ஒரு இடத்தில் கூடும்நேரத்தில் விவசாயிகளுக்கு மிக்சர், தேநீர் கொடுத்து அனுப்பலாம் என அரசு உயர் அதிகாரி ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.

அப்படிபட்டநேரத்தில்தான் ஜெயலலிதாவிடம் இருந்த தலைவருக்குரிய மனிதநேயம், மகத்தான பண்பு ஆகிய நற்பண்புகள் வெளிப்பட்டிருக்கிறது. அந்த கோப்பில், அவரே கைப்பட எழுதியதுதான் இன்றைக்கும் அவரை நினைத்துப்பார்க்க வைக்கிறது. தலைவாழை இலை போட்டு, இனிப்பு, காரம்(மெதுவடை), காய் பதார்த்தம், உணவு, சாம்பார், ரசம், தயிர் போன்றவை பரிமாறி விவசாயிகள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கைப்பட எழுதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அவர் எழுதிய கோப்பை தேடி கண்டுபிடிப்பதில் இப்போது சிரமம் இருக்காது.


அடுத்ததாக, அரசுக்கான வருவாயை ஈட்டுவது தொடர்பான ஒரு ஆய்வுக்கூட்டத்தில், மெத்த படித்த அரசு உயர் அதிகாரி ஒருவர், டாஸ்மாக் பாரை அரசே நடத்தலாம் என்று யோசனை சொன்னபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியாகி, ஒருசில நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு, அம்மா, டாஸ்மாக் பார்களை அரசே நடத்துவது என்பது ஆபத்தானது. அரசே மக்களுக்கு ஊற்றிக் கொடுக்கிறது என்ற விமர்சனம் அரசுக்கு எதிராக எழுந்துவிடும் என்று தயங்கி, தயங்கி சொல்ல, அந்த யோசனையை அப்போதே புறக்கணித்திருக்கிறார் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா.

இதுபோன்ற சிந்தனைகளால்தான், அரசியல்வாதி என்ற நிலையில் இருந்து மாறி, மக்கள் போற்றும் மகத்தான தலைவராக உயருகிறார்கள். தங்கள் தந்தையும் இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த அறிவுரைகளை வழங்கிய கோப்புகளும் தலைமைச் செயலகத்தில் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் தேடியெடுத்து படித்துப் பாருங்கள். எந்த பல்கலைக்கழகங்களிலும் இல்லாத பாடமாக அவை அமையும்.


நிறைவாக ஒன்றே ஒன்று, தயவு செய்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்காதீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மனநிலையோடு பெரும்பான்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இன்றைக்கு இல்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கிற உயர் அதிகாரிகளை விரல் விட்டு எண்ணிவிடும் நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. நிர்ப்பந்தத்திற்காகதான் இன்றைக்கு பெரும்பாலான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களை முழுமையாக நம்பாதீர்கள். அவர்களிடம் கலந்து ஆலோசிப்பதை குறைத்துக் கொண்டு பொதுமக்களின் குரல்களுக்கு செவி கொடுங்கள்..

மகத்தான தலைவர் என்ற பாராட்டு, உங்கள் சிந்தனைகளாலும் செயல்களாலும் நாடறியட்டும்…மென்மேலும் மிளிரட்டும்…

அன்பே சிவம் என்பதை அழுத்தமாக பரப்பிக் கொண்டிருக்கும் தமிழக மண்ணில், சக மனிதர் மீது செலுத்தும் அன்பும்,நேசமும் உள்ளத்தையே உருக வைக்கும் அளவுக்கு எண்ணற்ற நிகழ்வுகள் நித்தம் நித்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் நேற்றைய தினம் 30 நிமிடம்தான் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். எனது பங்கேற்பிற்காக மனிதநேயம் கொண்ட நண்பர் அளித்த பரிசுத் தொகுப்பு இது… பார்வையில் படும்போதே பிரமிக்க வைக்கிறது அல்லவா. இதில் இடம் பெற்றுள்ள பொருட்களை விட, போலித்தனம் இல்லாத அன்பை காட்டவேண்டும் என்று நினைத்த அந்த மனிதரின் நேசம், மாண்பு, மிகப்பெரியது….

One thought on “மக்களின் குரல்களை காது கொடுத்து கேளுங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே……”

Comments are closed.