Sun. Apr 20th, 2025

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முனைப்புடன் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், 21 மாநகராட்சிகள் உள்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சி மன்றங்கள் ஆகியவற்றுக்கான இடஒதுக்கீடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள விவரம் இதோ…

மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் தாழ்த்தப்பட்டோருக்கு (பெண்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கான மேயர் பதவி, தாழ்த்தப்பட்டோர் (பொது) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாநகராட்சிகளைத் தவிர, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட பெண் உள்பட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் சரிபாதிக்கு மேல் கூடுதலாக ஒரு மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.