ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் 75 வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அந்தந்த மாநில அரசுகள் தயாராகி வருவதைப் போல, இந்தியாவின் தலைநகரான புதுதில்லியிலும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. குடியரசு தலைவர் மாளிகை எதிர்புறம் அமைந்துள்ள ராஜவீதியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள். சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் குடியரசு தின விழா அணிவகுப்பை ஆரவாரமாக கையொலி எழுப்பி வரவேற்பார்கள்.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை சுமந்து வரும் அலங்கார வாகனங்களின் கம்பீரம், இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் வாழும் மக்களையும் உற்சாகப்படுத்தும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் சுதந்திர வேட்கையை பற்றச் செய்து, வெள்ளையர்களை விரட்டியடித்தது அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் சித்திரங்கள், புகைப்படங்கள் வாயிலாக ஒவ்வொரு மாநில அரசின் அலங்கார ஊர்திகளும் கண் முன்னே கொண்டு வந்து, தேசப்பக்தியை பீறிட செய்யும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உணர்ச்சிமயமான அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு தற்போது பெரும் சிக்கல் எழுந்துள்ளது. பாஜக ஆட்சிபுரியாத மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தென்மாநிலத்தில், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் மாற்றந்தாய் மனப்பான்மைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம் இதோ…