ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்..
முந்தைய அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. டி. ராஜேந்திர பாலாஜி.. பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்ற புகாரின் பேரில் இவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. இந்நிலையில் ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பலரிடம் வசூலித்து ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட வர்கள் விருதுநகர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீஸ் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. அதனை தொடர்ந்து அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ். பி. தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.. அதனையடுத்து தேடுதல் பணி தீவிரமடைந்த நிலையில் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.. இதனிடையே முன்ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார்.. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்ட செக் போஸ்ட் அருகே பதுங்கி இருந்த போது கே. டி. ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து விருதுநகர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்..