ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகருக்கு அருகே நேற்றிரவு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, பந்த் சவுக் அருகே போலீஸார் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில காவல்துறையினர் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். படுகாயமடைந்த 12 காவல் அலுவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கண்டனம்
ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தாக்குதலின் முழு விவரம் குறித்து முழுமையான அறிக்கை அனுப்பும்படி அம்மாநில ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி
இந்நிலையில், ஸ்ரீநகர் தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், ஸ்ரீரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கர தீவிரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலை நான் கண்டிப்பதோடு, வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்ற படை வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஸ்ரீநகர் தாக்குதல் நிகழ்வுக்கு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ் இ முகம்மது பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.