Sun. May 19th, 2024

மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி மத்திய பெட்ரோலிய துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது புதிய விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 175 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக உயர்ந்துள்ளது.

.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் இரண்டு முறை விலை உயர்த்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்தது.

ஜனவரி மாதம் முடிந்தவுடன் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை ரூ.735 ஆக உயர்ந்தது. இப்போது மேலும் ரூ.50 உயர்த்தி இருப்பதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு கியாஸ் சிலிண்டர்களுக்கு குறிப்பிட்ட அளவு மானிய தொகைய மத்திய அரசு வழங்குகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களை நுகர்வோர் பெற்று வருகின்றனர்.

மத்திய அரசு வழங்கும் மானியத்தொகை முறையாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்றும் ஒரு ஆண்டிற்கான மானியத்தொகையை முழுமையாக கிடைக்கவில்லை என்றும் நுகர்வோர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல், பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை பல இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்துப் படுவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரவதால், உணவு விடுதிகளில் உணவுப் பொருள்களின் விலையும் கணிசமாக உயரும் ஆபத்துள்ளதாக உணவு விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.