கடந்த 24 மணிநேரத்திற்கு மேலாக தமிழகம் உள்பட தேசமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு படை பணியாளர்கள் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள், குன்னூர் அருகே அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயிலி பிபின் ராவத் உள்பட 13 பேர், உடல் கருகி உயிரிழந்தனர். பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று மாலை 6.30 மணியளிவில் வெளியிடப்பட்ட போதும், நேற்று பகலில் இருந்தே பிபின் ராவத்திற்கு என்னவாயிற்று? உயிரோடு இருக்கிறாரா என தமிழக மக்கள் உள்பட நாடு முழுவதும் மக்கள் ஒருவித பதற்றத்துடனேயே தொலைக்காட்சிகள் முன்பு அமர்ந்திருந்தனர்.
எப்படியும் உயிருடன் வந்திடுவார் தளபதி என்று பிரார்த்தனையில் ஈடுபட்ட கோடான கோடி மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் பிபின் காலமானார் என்ற தகவல் பேரிடியாக விழுந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை புறப்பட்டார். அங்கிருந்து காரில் மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக இரவு 9 மணியளவில் வெலிங்டன் சென்று பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் சென்றிருந்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐஏஎஸ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், முதல்வர் குன்னூரிலேயே தங்கியிருந்து, இன்று மாலை பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டு செல்லும் வரை அங்கேயே தங்கியிருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இதற்கான நேற்று இரவு முதல் இன்று இரவு வரை கடந்த 24 மணிநேரத்தில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திருமண நிகழ்வு உள்பட பல்வேறு நிகழ்வுகளை ரத்து செய்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், மிகுந்த தேசப்பக்தி உணர்வோடு, முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட ராணுவ அலுவலர்களுக்கு செலுத்திய அஞ்சலியை பார்த்து தேசமே நெகிழ்ந்திருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போலவே, தமிழகத்தைச் சேர்ந்தவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனும், முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட ராணுவ அலுவலர்களுக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்.
பக்கத்து மாநில ஆளுநர், தனது அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு அஞ்சலி செலுத்தியபோது, தமிழக ஆளுநர் ரவி எங்கே போனார் என்று நீலகிரி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்திலேயே அதுவும், திருச்சியில் இருந்த ஆளுநர் ரவி, முப்படை தலைமை தளபதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதை புறக்கணித்துவிட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் தீயாக பரவியதையடுத்து, ஆளுநரின் செயல் .குறித்து கடுயைமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
திருச்சிக்கு இன்று சென்றிருந்த ஆளுநர் ரவி, பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கேயே பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அலுவலர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன், தனது மனைவியுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனமும் செய்துள்ளார், ஆளுநர் ரவி. தேசமே மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில், ஆலய தரிசனத்திற்கு ஆளுநர் அளித்த முக்கியத்துவம், தேச பக்தியாளர்களிடம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முதல் குடிமகனாக, மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர் ரவி, விபத்தில் சிக்கிவிட்டார் பாதுகாப்பு படை பணியாளர்கள் தளபதி என்ற தகவல் வெளியானவுடன் முதல் ஆளாக குன்னூருக்கு விரைந்து, மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டாமா? அண்மையில் நாகாலாந்தில் பொதுமக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலை கேள்விபட்டு, தனது அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு டெல்லி விரைந்த ஆளுநர், பிபின் ராவத் விபத்தில் சிக்கிய போதும் அக்கறையற்று இருந்த மனப்பாங்கை எப்படி எடுத்துக் கொள்வது என்று கேள்வி எழுப்புகிறார்கள் சுதந்திர போராட்ட தியாகிகள்.