முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதார பாராட்டி விட்டார், சேகர்பாபு அல்ல, செயல்பாபு என்று பெருந்தன்மையோடு உச்சிமுகர்ந்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு என்ன வேண்டுமானாலும் பேசலாமா? திமுகவில் சேர்ந்து அமைச்சரான பிறகும்கூட அவரது மனதில் அதிமுக சிந்தனைதான் முழுமையாக இருக்கிறது என்று கொதிக்கிறார்கள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள்.
கொதிப்புக்கான காரணம் என்ன?. ஒட்டுமொத்த முன்னோடிகளின் மனக்குமறல்களை கொட்டினார், மூத்த நிர்வாகி ஒருவர்.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையிலேயே அவர் இயக்கத்திற்காக உயிரையே கொடுக்க துணிந்த வரலாற்று நிகழ்வாக மிசா காலத்தில் அவர் அனுபவித்த கொடுமைகள்தான், தியாகத்தின் உச்சமாக இருந்து வருகிறது. மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி எந்தநேரத்தில் மிசா கால கொடூரமான நினைவுகளை பகிர்ந்து கொண்டாலும், மணமேடை ஏறிய இரண்டொரு நாளிலேயே மு.க.ஸ்டாலினை சிறைச் சாலைக்கு அனுப்பி வைத்ததை உருக்கமாக குறிப்பிடுவார். இப்படி மிசா காலத்தில் காட்டுமிராண்டித்தனமாக சித்ரவதைகளை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின் என்று அவரது தியாகத்தை இன்றைக்கும் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் கலைஞரின் நிழலாக நடமாடிய முன்னணி தலைவர்கள் வரை நினைவுக்கூர்ந்து பெருமையாக பேசி வருகிறார்கள்.
மிசா காலத்தில் ஒட்டுமொத்த திமுகவும் சொல்லனா சித்ரவதைகளை அனுபவித்ததை இன்றைக்கும் அந்த கால முன்னணி நிர்வாகிகள் நினைவுக்கூர்ந்து உருக்கமாக பேசி வரும் நிலையில், மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறைக்கு சென்றதைப் பற்றி, தரக்குறைவாக விமர்சனம் செய்த மாஃபா பாண்டியராஜன் மீது ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
தனி நபராக இருந்த போது சொல்லாத ஒரு விமர்சனத்தை, முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது பேசியவர் பாண்டியராஜன். 1975-1977ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள்தான் இன்றைய தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அவர்கள் மனதில் மு.க.ஸ்டாலினின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தரக்குறைவான எண்ணம் பதிய வேண்டும் என்ற தீயநோக்கத்தில்தான் மாஃபா பாண்டியராஜன் அன்றைக்கு பேசினார். இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா வேண்டுமானால் ரசித்து, அதற்கு பதிலாக மாஃபாவுக்கு பதவிகளை வாரி வழங்கியிருப்பார். அதற்கான வாய்ப்பே இல்லாத நேரத்தில், அதாவது, ஓபிஎஸ்,இபிஎஸ் ஆகிய இரட்டையர் தலைமையில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும்போது, அவர்களே அதை அவ்வளவாக ரசித்ததில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அன்றைக்கு அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் எவ்வளவு தரக்குறைவான விமர்சனத்தை முன் வைத்தார் என்பதையெல்லாம் பி.கே.சேகர்பாபு மறந்திருக்க மாட்டார்.
மாஃபாவின் தரக்குறைவான விமர்சனத்தைக் கேட்டு கொந்தளித்த திமுக தொண்டர்கள், குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர், மாஃபாவை கண்டித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது அவர் அமைச்சராக இருந்த போதும் அவரது உருவப்பொம்மைகளை திமுகவினர் போலீசாரின் மிரட்டலுக்கு அடி பணியாமல் எரித்தனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமான நிலையில், இரண்டொரு நாளில் மாஃபாவே நேரடியாக ஊடகங்களை வலிய அழைத்து, தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டனர் என்று மறுப்பு தெரிவிக்கும் வகையில் விளக்கம் அளித்தார். ஆனால், அவராக தனது செயலுக்கு மனம் வருந்தி விளக்கம் சொல்லவில்லை. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான் மாஃபா தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தார்.
அதே நேரத்தில், மாஃபாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்தார். அப்போது அவர் தெரிவித்த ஒரு அறிவிப்புதான் இன்றைய காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. மாஃபா மீது திமுகவினர் கவனம் செலுத்தக் கூடாது என்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்றால், மாஃபா எப்போதுமே திராவிட சிந்தனையோடு இருப்பவர் கிடையாது. இந்துத்துவா சிந்தனை கொண்டவர். பாஜக மேலிட தலைவர்களின் மனதில், இபிஎஸ், ஒபிஎஸ்ஸை மிஞ்சிய இடம் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என்று சூசகமாக உணர்த்தியவர் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கூறியது எந்தளவுக்கு நிதர்சனம் என்பதை, பின்னாட்களில் மாஃபாவே வெளிப்படுத்திய தருணமும் உண்டு.
செல்வி ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய நேரத்தில் சுயமரியாதையோடு அவருக்கு ஆதரவு தெரிவிக்காமல், அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறிய அறிவுரையை ஏற்றுதான் இபிஎஸ் பக்கம் இருந்து ஓபிஎஸ் பக்கம் வந்தேன் என்று மாஃபாவே பின்னாட்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இப்படிபட்ட சிந்தனையுடையவரைதான், மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவின்போது, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் விருப்பத்திற்கு மாறாக, பொது மேடையில், மாஃபாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பகிரங்கமாக திமுகவில் இணையும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் வெளிப்படையான இந்த அழைப்பின் மூலம் மாஃபா மிகப் பெரிய தியாகி போலவும், அவரது வருகையின் மூலம்தான் திமுகவுக்கு செல்வாக்கு கூடும் என்ற நினைப்பை பொதுவெளியில் ஏற்படுத்திவிட்டது. அவர் அமைச்சராக இருந்த காலத்தில், அவரது தொகுதிக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் எந்தளவுக்கு லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடியது என்பதெல்லாம் ஆவடி தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, அமைச்சர் பி.கே.சேகர்பாபுக்கும் நன்றாகவே தெரியும். அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கை தள்ளிப் போகிறது என்ற ஒரே காரணத்திற்காக மாஃபா புனிதராகிவிட மாட்டார்.
தலைமையின் அறிவுரை இல்லாமல், அதிமுகவில் எக்ஸ்டரா லக்கேஜ் போன்று இருப்பவர்களை எல்லாம் திமுகவுக்கு இழுத்து வர வேண்டும் என்ற எண்ணத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கைவிடுவார் என்றால் அவரது நிகழ்கால, எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார் அந்த அறிவாலய நிர்வாகி.
சிறிதுநேர ஆசுவாசத்திற்குப் பிறகு அவரே மீண்டும் பேசினார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் அழைப்பு ஒரு சில மணி நேர இடைவெளியிலேயே மாஃபா மறந்து, அதிமுகவில் விசுவாசமிக்க நிர்வாகியாக நீடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அதற்கு காரணம், அதிமுக தலைமையிடம் இருந்து அவருக்கு வந்த கடும் அழுத்தம்தான் காரணம். இயல்பாகவே, எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் நீண்ட காலம் மாஃபா நீடிக்க மாட்டார். தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர முயற்சியெடுத்த காலத்திலேயே அவர் நாடாளுமன்றத்திற்கு செல்லும் கனவோடுதான் இருந்தார். ஆனால், அவரை டெல்லி அனுப்பினால் எப்படியெல்லாம் சுயநலத்தோடு நடந்து கொள்வார் என்ற கணக்கோடுதான் அவரை தமிழகத்திலேயே அரசியல் செய்யும் அளவுக்கு வாய்ப்பு கொடுத்தார் செல்வி ஜெயலலிதா.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. அதற்குள் தன்னுடைய பொருளாதார நிலையை மேலும் மேலும் மேம்படுத்திக் கொண்டு, 2023 ஆம் ஆண்டு இறுதியில் பாஜகவுக்கு தாவி விடும் எண்ணத்தில்தான் மாஃபா இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அவர் ஒருபோதும் திராவிட கட்சியைப் போல தோற்றம் தரும் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்து நீண்ட காலம் கட்சிப் பணியாற்ற மாட்டார் என்பது மட்டுமே உறுதி.
இப்படி அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைப் போல, சுயநலமாக மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவரால் திமுகவுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. இதையெல்லாம் நன்றாக புரிந்து வைத்திருப்பவர்தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். பி.கே.சேகர்பாபு மட்டுமல்ல வேறு யாருடைய பரிந்துரையை ஏற்றும் ஒருபோதும் மாஃபாவை திமுகவில் சேர நிச்சயம் அனுமதிக்க மாட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று முத்தாய்ப்பாக கூறி அமைதியானார் திமுக முன்னணி நிர்வாகி.