Fri. Nov 22nd, 2024


கருப்புப்பட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல்…

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். நிகழ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உயிரிழப்பு தொடர்பாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு நேற்றிரவு சென்றார். அவருடன் அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.


கோவையில் இருந்து கார் மூலம் வெலிங்டன் ராணுவ பயிற்சி நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பிபின் ராவத் திருவுருப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்த வருகை பதிவேட்டில் பிபின் ராவத்தின் தியாகத்தை போற்றும் விதமாக கருத்தை பதிவு செய்து வீர வணக்கம் செலுத்தினார்.

முதல்வர் தனது பதிவில், தாய் திருநாட்டின் வீரத் திருமகன் விபத்தில் உயிர் இழந்ததிற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன் என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், அங்கிருந்த ராணுவ உயரதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.


இன்று காலை ஹெலிகாப்டர் விழுந்து தீப்பற்றி எரிந்த இடமான குன்னூர் அருகே உள்ள காட்ரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான காரணத்தை கண்டறிய பேருதவியாக இருக்கும் கருப்புப்பெட்டியும் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
பிபின் ராவத் மறைவால் நாட்டு மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்துள்ள வீடியோ வெளியாகி, தீயாக பரவி வருகிறது.

விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் கருப்புப்பெட்டி, நிகழ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது…