நடிகர் ரஜினிகாந்தை திடீரென்று வி.கே.சசிகலா சந்தித்து நலம் விசாரித்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சித் தேர்தல், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்வு போன்றவற்றின் மூலம் தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய ஊடகங்களிலும் அதிமுகவின் இரட்டை தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பற்றிய செய்தி மற்றும் ஊடக விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றது.
கடந்த சில நாட்களாக, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல், தொடர் விவாதங்களுக்கு வித்திட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான பனிப்போர், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடமும் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், இரண்டு தலைவர்களும் திடீரென்று ராசியாகி, ஒருமித்த உணர்வோடு அதிமுக தலைமைக்கான தேர்தலை இணைந்தே சந்தித்ததன் மூலம், வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் எதிர்காலமே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டனர்.
இவர்களின் தற்காலிக ஒற்றுமையால், ஒட்டுமொத்த அதிமுகவும் இரட்டை தலைமையின் கைக்குள் அடக்கமாவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர், இரட்டை தலைமைக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
வி.கே.சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வமும், உட்கட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அமைதியாகிவிட்டதை கண்டு, அவரது ஆதரவாளர்களும், அதிமுகவில் உள்ள வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்களும் வாயடைத்துப் போய்வுள்ளனர்.
இப்படி கடந்த ஒருவாரமாக, நாள்தோறும் அரசியலில் சூட்டை கிளப்பி வந்த இரட்டையர்களே, ஊடகங்களுக்கும் தீனிபோட்டனர். இவர்களுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவத்திற்கு இடையே வி.கே.சசிகலாவை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
இப்படிபட்ட நேரத்தில்தான், வி.கே.சசிகலா திடீரென்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து, ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார். நேற்று மாலையே (டிசம்பர் 6 ) இந்த சந்திப்பு நடந்தபோதும், இதுதொடர்பாக செய்தி, புகைப்படங்களுடன் இன்று மாலைதான் ஊடகங்களுக்கு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவரிடம் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், அடுத்த நாளே உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலமடைந்து திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கே நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார். மேலும், அவர் நலம் பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.
ஒருசில நாள் சிகிச்சைக்குப் பிறகு போயஸ் கார்டன் திரும்பிய பிறகு ரஜினியை நேரில் சென்று யாரும் சந்திக்கவில்லை. அவர் சார்ந்த திரைப்படத்துறையினர், அரசியல் தலைவர்கள் என அனைவரும் ரஜினிகாந்த், முழுமையாக ஓய்வு எடுக்கட்டும் என்றே அமைதியாக இருந்து வந்தனர். இப்படிபட்ட நேரத்தில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்திற்கு, திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்களிடம் பெருமளவில் இருந்தது. ரஜினிக்கும் கூட உள்ளுக்குள் அதுதொடர்பாக வருத்தம் இருந்திருக்கலாம் என்கிறார்கள் அவரது மனதை நன்கு அறிந்த திரையுலக பிரமுகர்கள் சிலர்.
இப்படி, சசிகலாவும், ரஜினிகாந்தும் அவரவர் சார்ந்த நட்பு வட்டாரங்களில் ஓரம் கட்டப்பட்டவர்களாக இருந்த நேரத்தில், எதிர்பாராத நேரத்தில் சந்திப்பு தொடர்பாக வி.கே. சசிகலாவிடம் இருந்து வந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டார் ரஜினி என்று கூறும் கார்டன் முக்கிய பிரமுகர்கள், இதுவரை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை, மரியாதையை வி.கே.சசிகலாவுக்கு ரஜினியும், அவரது மனைவி லதாவும் மிகுந்த பூரிப்புடன் கொடுத்துள்ளனர் என்கிறார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்தவர் வி.கே.சசிகலா என்று உதாசீனப்படுத்தும் குணம் இல்லாமல் உள்ளன்புடனேயே அவரை வரவேற்று கலந்துரையாடி இருப்பதன் மூலம், தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற முனைப்பு காட்டிய பலருக்கு நெற்றியடி போல, சசிகலாவுடனான சந்திப்பை ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்..
ஆக மொத்தத்தில், ரஜினியுடனான சந்திப்பு வி.கே.சசிகலாவுக்கும் அரசியல் ரீதியாக அவரது ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறும் அமமுக நிர்வாகிகள், இந்த சந்திப்பு மூலம் அதிமுக இரட்டையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள் பூரிப்புடன்…நடிகர் ரஜினிகாந்த்துடன் எதைப் பற்றியெல்லாம் வி.கே.சசிகலா விவாதித்திருப்பார் என்பதை அறிந்து கொள்வதற்கே வரும் நாட்களை செலவிட்டு இரட்டையர்கள் நிம்மதியிழந்துவிடுவார்கள் என்று கேலியாக கூறுகிறார்கள் வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்கள்…