Fri. Nov 22nd, 2024

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வை வைத்து, தமிழகத்தை காஷ்மீரோடு ஒப்பீட்டு டிவிட்டரில் கருத்து தெரிவித்த புகாரின் பேரில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யபட்டார்.

மேலும், முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாகவும் யூ டியூபர் மாரிதாஸுக்கு எதிராக மற்றொரு புகார் பதிவாகியுள்ளது.

இரண்டு புகார்களின் மீது விசாரணை நடத்தி வந்த போலீசார், மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்த போது விசாரணை ஆஜராகுமாறு கூறி கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள யூ ட்யூபர்களில் ஒருவர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், காஷ்மீர் போல தமிழகமும் மாறி வருகிறது. தேச ஒற்றுமைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு திமுக அரசு துணை போகிறது என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

மேலும் மற்றொரு பதிவில், பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக திமுக ஆதரவாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், சோக நிகழ்வை வைத்து தேசத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்றும் மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு பதிவுகளையும் மாரிதாஸ் நீக்கியிருந்தாலும் கூட, அந்த பதிவுகளை நகலெடுத்து, அதனை காவல்துறைக்கு அனுப்பி வைத்து மாரிதாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரிக்கவும், அவரை கைது செய்யவும் அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அங்கு போலீசார் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

 யூடியூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், மதன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாஜக பின்னணியில் உள்ள தைரியத்தில், திமுகவுக்கு எதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மாரிதாஸ் அவதூறாக கருத்து வெளியிட்டு வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.