சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புகழ்பெற்ற ஜவுளி விற்பனை நிலையமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.1,000 கோடி வருவாயை மறைத்து வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், ரூ. 80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது, வருமானவரித்துறை..
சென்னை தி.நகரில் உள்ள புகழ் பெற்ற சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் கடந்த 1 ஆம் தேதி வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதேபோல, ஜவுளி, தங்க நகை விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் அதன் சகோதர நிறுவனமான சரவணா செல்வரத்தினம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை உள்ளடக்கிய 37 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் மறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும், 150 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமலேயே கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல, சரவணா செல்வரத்தினம் 80 கோடி ரூபாய் அளவுக்கு போலி பில்கள் தயாரித்து, விற்பனை செய்து சட்டத்திற்கு புறம்பாக வருவாய் ஈட்டியுள்ளது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கணக்கில் காட்டாமல் 7 கோடி ரூபாய்க்கு இதர விற்பனையில் ஈடுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கணக்கில் காட்டப்படாத ரூ 10 கோடி ரொக்கம், ரூ. 6 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.