Sat. May 18th, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்கள் பற்றி எழுப்பிய கேள்விக்கு ( எண் 65 ) கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த பதிலில் பதில் இல்லை என்பதே உண்மை.

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத காலியிடங்கள் எவ்வளவு என்று கேட்டதற்கு தனித் தனியாக எண்ணிக்கையை தராமல் மொத்தமாக 13701 காலியிடங்கள் என பதில் தரப்பட்டுள்ளது. கேள்வியே மொத்த காலியிடங்கள் என்று ஒரு வரியில் கேட்கப்பட்டு இருந்தால் வேறு விசயம். ஆனால் பிரிவு வாரியாக கேள்வி இருக்கும் போது மொத்த எண்ணிக்கையை பதிலாக தருவதன் நோக்கம் என்ன?

இருந்தாலும் இவ்வளவு காலியிடங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்களும் ஆயிரக் கணக்கில் உள்ளன என்பதில் ஐயமில்லை.

இட ஒதுக்கீட்டு ரோஸ்டர்களை தயாரிப்பதில் எந்த மத்திய கல்வி நிறுவனமாவது சிரமங்கள் இருப்பதாக அரசின் வழி காட்டுதல்களை கோரியுள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை என அமைச்சர் பதில் அளித்துள்ளார். அப்படியெனில் எல்லா மத்திய கல்வி நிறுவனங்களும் ரோஸ்டர்களை தயாரித்து இருக்க வேண்டும். இதை அரசாங்கம் சரி பார்ப்பதோடு அந்தந்த நிறுவனங்கள் ரோஸ்டர் விவரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும்.

கடைசி கேள்வியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள “செயல் வடிவ பணி நியமனங்கள்” (Mission Mode Recruitment) சம்பந்தமான பதவி வாரியாக, பிரிவு வாரியாக விவரங்கள் வேண்டுமென்ற கேள்விக்கும் தகவல்கள் தரப்படவில்லை. மாறாக
“செயல் வடிவ பணி நியமனங்கள்” (Mission Mode Recruitment) 05.09.2021 இல் இருந்து 04.09.2022 வரைக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற தகவல் மட்டும் தரப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்?

அரை குறை பதில்கள் இந்த கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. சமூக நீதி மீது அரசுக்கு அக்கறை உள்ளதா? இந்த “செயல் வடிவ பணி நியமனங்கள்” (Mission Mode Recruitment) இட ஒதுக்கீடு பிரிவினரின் உரிமைகளை உறுதி செய்யுமா? என்ற கேள்விகள் எல்லாம் பதில் தேடி நிற்கின்றன.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

One thought on “இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன்? சு. வெங்கடேசன் எம் பி கேள்வி…”

Comments are closed.