Tue. Apr 30th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம்.செல்வகணபதி, கடந்த சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை போல வாழ்ந்து கொண்டிருப்பதால், அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னோடிகள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்வதற்காக சென்னை செல்வதாக கூறி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்டு வந்துள்ளார் டி.எம்.செல்வகணபதி. ஆனால், சேலம் மாவட்ட நிர்வாகிகள் சிலர், சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகளை உள்ளடக்கிய பல்வேறு வாட்ஸ் அப் குரூப்புகளில் நேற்று முன்தினம் தீயாக பரவியது. அந்த வரிசையில், உதயநிதி ஸ்டாலினுக்கு டி.எம்.செல்வகணபதி வாழ்த்து தெரிவித்தது போன்ற ஒரு புகைப்படமும், வாட்ஸ் அப் குரூப்பில் இடம் பெறாததால், அவரது ஆதரவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதேபோல, அவர் பொறுப்பாளராக உள்ள மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளும், தங்கள் தளபதியின் புகைப்படம் எங்கே என ஒவ்வொரு வாட்ஸ் அப் குரூப்பாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


அதைவிட பரிதாபமாக, சனிக்கிழமை முதல் இன்று காலை வரை எங்கேயும் அவரது நடமாட்டம் பற்றி எந்த செய்தியும் வெளியே வராததால், தாயை பிரிந்த கன்றுக்குட்டி மாதிரி, சேலம் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், கடந்த இரண்டு நாட்களாக பச்சை தண்ணீரை கூட வாயில் ஊற்றாமல், டி.எம்.செல்வகணபதியின் திருமுகத்தை தரிசிக்க, பட்டினிப் போராட்டத்தில் குதித்துள்ளதாக, எடப்பாடியில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


அதைவிட முக்கியமாக, கடந்த சனிக்கிழமை, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை சென்னையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, மின்னல் வேகத்தில் சேலம் திரும்பி, அவரது பிறந்தநாளையொட்டி அன்றைய தினம் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தனது திருக்கரங்களாலேயே நலத்திட்ட உதவிகள் வழங்குவேன் என்றும் உறுதியளிந்திருந்த போதும் கூட, டி.எம்.செல்வகணபதியால் சேலம் திரும்ப முடியாமல் போனது ஏன் என்று சோகத்துடன் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள்.


கடந்த 27 ஆம் தேதி முதல் நாளை (30 ஆம் தேதி) வரை சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெறும் என்றும், அந்த நிகழ்வுகளில் தங்க மோதிரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் டி.எம்.செல்வகணபதியே அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்த போதும், எந்தவொரு விழாவிலும் இன்று காலை வரை அவர் தலையை காட்டாதது, அவரது ஆதரவாளர்களை துடிதுடிக்க வைத்துள்ளது.


கடந்த மூன்று நாட்களாக டி.எம்.செல்வகணபதியின் நடமாட்டம் கண்களில் படாததால், அவரது ஆதரவுக் கூட்டம் தாயை பிரிந்த குழந்தையைப் போல, தரையில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருக்கும் போது, அவரது எதிர்தரப்பினர், கொண்டாட்ட மனநிலையில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் டி.எம்.செல்வகணபதியை பொறுப்பாளராக கொண்டிருக்கும் சேலம் மேற்கு மாவட்ட திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் துயரம்..


டி.எம்.செல்வகணபதியால் பழிவாங்கப்பட்ட திமுக நிர்வாகிகளிடையே இன்று காலை முதல் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம், சேலத்தில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லரசு காதுக்கும் கிடைத்துள்ளது. அந்த தகவல் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை என்றாலும் கூட, பொதுதளத்தில் வைப்பது கடமை என கருதுகிறோம்.

டி.எம்.செல்வகணபதியின் எதிர்தரப்பு உற்சாகத்திற்கு காரணம் இதுதான்….

1991 – 96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டுக்கு மேற்கூரை அமைப்பதில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக 1996 -2001 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் டி.எம்.செல்வகணபதி மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. நிச்சயம், டி.எம்.எஸ்.ஸுக்கு பாதகமாகதான் தீர்ப்பு வரும். அப்போது அவர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், அந்தநேரத்தில் திமுகவில் கட்சி பதவி வகிப்பது சரியாக இருக்காது. எனவே, அதற்கு முன்பாக சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகி விடுங்கள். உங்கள் தரப்பிலேயே செல்வாக்கு மிக்க ஒருவரை, உங்கள் பதவியில் அமர்த்தி விடுகிறோம். அப்படியொருவரை பரிந்துரைங்கள் என அண்ணா அறிவாலயத்தில் கேட்கபட்டதாகவும், அதனை ஏற்று சேலம் மாவட்டம் மேட்டூரில் தற்போது நகரச் செயலாளராக இருக்கும் காசி விஸ்வநாதன் என்ற பிரமுகரை, தனக்கு பதிலாக பரிந்துரை செய்திருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் சேலம் மாவட்டத்தில் இருந்து நல்லரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதன்…இவர், டி.எம்.எஸ்.ஸுக்கு மிக,மிக நெருங்கிய உறவினரும் கூட..

இந்த தகவல்களில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது என்று குறுகிய நேரத்தில் நல்லரசுவால் உறுதிபடுத்திக் கொள்ள இயவில்லை. இருப்பினும், சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விஷயம், சேலம் மாநகர மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம் என ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகளிடமும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் இந்த நேரத்தில், செய்திகளை தருவதில் முந்திக் கொள்கிறது நல்லரசு என்ற பெருமையை சூடிக் கொள்ள நாமும் அவசரமாக இந்த செய்தியை பதிவு செய்கிறோம்..
இந்த தகவல் அனைத்தும் பொய்யாகவே இருக்க வேண்டும் என்பதுதான் நல்லரசுவின் விருப்பமும் கூட..

மீசையை முறுக்கி கம்பீரம் காட்டும் டி.எம்.செல்வகணபதி அவர்களே… வீறுகொண்டு வாருங்கள்….

One thought on “டி.எம்.செல்வகணபதி எங்கே? பரிதவிக்கும் சேலம் மேற்கு மாவட்ட திமுக…”
  1. உங்கள் பத்திரிக்கைக்கு பொய்ய ரசு என்று தலைப்பு வையுங்கள் ..
    உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை நல்ல திட்டம்தான் ..

    உங்கள் திட்டம் ஒரு போதும் பலிக்காது ..

Comments are closed.