Tue. May 21st, 2024

நவம்பர் 4 ஆம் தேதி தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி திருவிழாவின் மகிழ்ச்சி சென்னை மக்களின் மனங்களில் இருந்து நீங்குவதற்கு முன்பாக, வடகிழக்கு பருவமழை மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. நவம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் கொட்டிய கனமழையால் வடசென்னை உள்பட சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாக மாறியது. அன்றைய தினம் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியதையடுத்து, அன்றைய தினம் காலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், பகல் பொழுதில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் வடசென்னையில் பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்று ஒரு நாள் முழுவதும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ள நீரை அகற்றவும், தடைப்பட்டிருந்த போக்குவரத்தை சீரமைக்கவும், நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் மாநகராட்சி உள்பட பல்வேறு துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டார்.

அடுத்தடுத்த நாட்கள் என நேற்றைய தினம் வரை கனமழை தொடர்ந்து பெய்ததால், சென்னை மக்கள் மிகவும் நொந்து போயினர். அவர்களின் வேதனையை தீர்த்து வைக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் கூட ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், மக்களோடு மக்களாக களத்தில் நின்றதுடன், வெள்ள பாதிப்புகளை முழுமையாக களைய நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இடை இடையே நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழையால் பாதிக்கப்பட்ட சாகுபடிகளையும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். உரிய நிவாரணம் வழங்குவதற்கான ஆலோசனைகளிலும் முதல்வர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி கடந்த 25 நாட்களாக, வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரிடை ஆய்விலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகள், நாள்தோறும் முதல்வர் ஆய்வு மேற்கொள்வதால், அவருக்கு ஈடுகொடுத்து தங்களால் பணியாற்ற முடியவில்லை என்று புலம்பி வருகிறார்கள்.
மழை பாதிப்புக்காக காலை 9 மணிக்கே தயாராகி கிளப்பி விடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி மட்டும் ஆய்வு மேற்கொள்ளாமல், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு முன்பாகவே காரில் இருந்து திடீர் திடீரென இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கு எந்தவகையிலான வடிகால் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள போகிறீர்கள்? அதற்கான திட்டங்கள் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்.
இப்படியெல்லாம் முதல்வர் கேட்பார் என்பதை யூகித்து அதற்கேற்ப முன் தயாரிப்போடு வராத அதிகாரிகள், சரியான பதில்களை முதல்வரிடம் கூற முடியாமல் தவித்த தருணங்களும் உண்டு.
சென்னை புறநகர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த போது, நமக்கு நாமே திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சில கேள்விகளை முதல்வர் கேட்டபோது, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் திணறிய தருணங்களும் உண்டு என்கிறார்கள் முதல்வரின் பயணத்தின் போது உடனிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள்.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிய உணவு நேரத்தின் போது சென்னைக்கு திரும்பினார். சில மணிநேரங்கள் மட்டுமே தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளை மேற்கொண்ட முதல்வர், அன்று மாலை தனது தொகுதியான கொளத்தூருக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். இப்படி ஒருநாள் முழுவதும் முதல்வரின் ஆய்வு பயணத்திலேயே மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் நேரத்தை செலவிட்டுள்ளனர்.
அன்றைய தினம் முதல்வர் கூறிய அறிவுரைகளின்படி, வெள்ள நீர் வெளியேற்றம், சாலை சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக, அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு மாநகராட்சி உயரதிகாரிகள் உள்பட பல்துறை அரசு உயரதிகாரிகள் தங்கள் இல்லத்திற்கு செல்வதற்கே நள்ளிரவை கடந்து விட்டது.
மறுநாளான நவம்பர் 30 ம் தேதியும் நேரடி ஆய்வுப் பணிக்கு ஓய்வு கொடுக்காமல், காலை 9 மணிக்கே செம்மஞ்சேரியில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுவிட்டார் என்ற தகவல் கிடைத்தவுடன், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பல்துறை அரசு அதிகாரிகள் அடித்து பிடித்துக் கொண்டு செம்மஞ்சேரியில் ஆஜராகியிருக்கிறார்கள். வெறும் பெயரளவுக்கு ஆய்வுப் பணியை மேற்கொள்ளாமல், உண்மையான ஈடுபாட்டுடன், மக்களின் துயரங்களில் பங்கெடுக்கும் விதமாகவும் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்த வெள்ள நீரில் மணிக்கணக்கில் நடந்து பார்வையிட்டார்.


வெள்ளப்பாதிப்பால் கோபமாக இருந்த மக்கள் கூட, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பார்வையிட வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்டு சமாதானம் அடைந்ததாகவும், அதிகாரிகளிடம் கோபமாக பேசிய மக்கள், முதல்வரிடம் மிகுந்த பொறுமையாக தாங்கள் சந்தித்து வரும் சிரமங்களை எடுத்துக் கூறியதை கண்டு ஆச்சரியப்பட்டு போனோம் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள் சிலர்.

வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால், கடும் பாதிப்பை சென்னை மாநகர் சந்தித்துள்ள போதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மனம் தளரவில்லை. எவ்வளவு இடர் வரினும் துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டு விடலாம். அதற்கு தேவை, உண்மையான உழைப்பும், ஆத்மார்த்தமான ஈடுபாடும் போதும் என்று கூறி உயர் அதிகாரிகளை தட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வடகிழக்கு மழை, சென்னை மாநகர மக்களின் இயல்வு வாழ்க்கையை புரட்டி போட்டிருந்தாலும் கூட, முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள்ளாகவே, கொரோனோ, வடகிழக்கு பருவமழை என இயற்கை பேரிடர்கள் மிரட்டினாலும் கூட முதல்வர் மனம் துவண்டுவிடவில்லை.

முதல்வரின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கடுமையான பேரிடரை அவரே சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், கனமழையால் பாதிக்கப்பட்டு கடும் இன்னல்களை அனுபவித்து வரும் சென்னை மாநகர் மக்களை ஆறுதல் படுத்தும் வகையில் ஒருமுறையாவத நேரில் சென்றுவிட வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்பதைதான் இன்றைய நேரடி ஆய்வுப் பணியும் நிரூபித்திருக்கிறது. நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை துடைக்க முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டினாலும், அவருக்கு ஈடுகொடுத்து ஓடியாடி வேலை பார்ப்பது என்பது சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கடும் சவாலாகவே இருக்கிறது என்கிறார்கள் முதல்வரின் பாதுகாப்புக்காக களத்தில் நிற்கும் காவல்துறை அலுவலர்கள்…

வெள்ள நீர் விரைவாக வடிவதை போல, அரசு அதிகாரிகளின் சிரமமும் விரைவில் நீங்கிவிடும்….

One thought on “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வா? அலறும் அரசுத்துறை அதிகாரிகள்….”

Comments are closed.