தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுசசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஒன்றிய பகுதிகளில் வாழ்க்கரை, மேல வாழ்க்கரை, மடப்புரம், மீனம்பநல்லூர்,கீழையூர் கருங்கண்ணி சோழவித்யாபுரம் மகிழி பாப்பா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாகப்பட்டினம் கீழையூர், கீழ்வேலூர் பகுதிகள் ஆண்டுதோறும் சிறு மழை பெய்தால் கூட பெரும் வெள்ளப் பெருக்கெடுத்து விளைநிலங்களும், குடியிருப்புகளும் நீரால் சூழப்பட்ட கடல் போல் காட்சியளிக்கிறது. இப்பகுதியின் கடல் முகத்துவாரத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இருக்கிற பகுதிகள் முழுமையும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டதால் தண்ணீர் வடிவது தடுக்கப்பட்டு விவசாயிகளும் பொதுமக்களும் மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமானால் பாபா கோவில் முதல் வேட்டைக்காரனிருப்பு வரை கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் சென்று வடியக்கூடிய இயற்கையான நீர் வழி பாதைகளை இறால் பண்ணைகள் முற்றிலும் தடுத்து விடுகிறது.
மேலும் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழை நீர் கடலில் சென்று வெள்ளையாறு, கடுவையாறு வழியாக வடிவதில் உள்ள தடைகளை அகற்றி, கடல் முகத்துவாரத்தில் மறு சீரமைப்பு மேற்க்கொண்டால் தான் முழுமையாக பாதுகாக்க முடியும்.
மேலும் வெள்ளையாறு மகிழி முதல் புதிய நீட்டிப்பு கால்வாயை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி கரைகளுக்கு தடுப்பு சுவர் அமைத்து நீரோட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதனை தமிழக அரசு சிறப்பு திட்டம் மூலம் நிறைவேற்றுவதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேற்கண்டவாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பி.ஆர். பாண்டியன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த போது, மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் மாவட்ட துணைசெயலாளர் வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் என். மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.