Tue. May 21st, 2024

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அடிப்படையில் அதற்கான அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20ஆண்டுகாலம் சிறைவாசம் முடித்தவர்கள் மட்டுமல்ல, 10ஆண்டுகள் நிறைவு செய்தவர்களையும் விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் இந்த ஆணையில் வெளியிடப்பட்டுள்ளன. இதை நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில் இராசீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் வாடும் 7பேர்களையும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் 38 முசுலீம்களையும் விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

கடந்த காலத்தில் அண்ணா நூற்றாண்டு விழா போன்ற முக்கிய அரசு விழாக்களின் போதுகூட இவர்கள் விடுவிக்கப்படவில்லை. மேலே கண்ட சிறைவாசிகளில் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அவர்களுக்குக் கருணை காட்டப்படவில்லை. கீழவெண்மணியில் 44பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும், மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களும் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைவாசிகளை விடுதலை செய்யும்போது பாரபட்சம் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. மேலும் 14ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு பெற்ற கைதிகளை விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மேற்கண்டவர்களை விடுதலை செய்வதற்கு விதிமுறைகள் ஏதேனும் தடையாக இருக்குமானால், சிறப்பு ஆணையின் மூலம் அவற்றை நீக்கி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வரும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனனையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.