Fri. May 17th, 2024

தமிழக அரசு நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை மையமாக வைத்து பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து அரசாணையை கடந்த வாரம் வெளியிட்டது. இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் வழிகாட்டுதலோடு போராட்டக் குழு அமைத்து நரிமணம் சுற்றியுள்ள 40 மேற்பட்ட கிராம விவசாயிகள் வரும் 16ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த அறிவித்தனர. மேலும் இதன் பாதிப்பு குறித்து எடுத்துரைப்பதற்காக பிரச்சாரப் பயணம் அறிவிக்கப்பட்டது,

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அருன் தம்புராஜ் இன்று தனது அலுவலகத்துக்கு அழைத்து போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிஆர்.பாண்டியன் கூட்ட முடிவு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான பணியில் சுமார் 34 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொண்டு வருகிறது, இதற்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறது.மேலும் இதனுடைய துணை நிறுவனங்கள் தொழிற்சாலைகள் உருவாக்குகிற வகையில் திருமருகள் ஒன்றியத்தை மையமாக வைத்து பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

கடந்த பத்தாண்டு காலம் விவசாயிகள் போராடி பெற்ற காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்கிற அறிவிப்பை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இந்த அறிவிப்பாணை அமைந்ததை கண்டித்து வரும் 16ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் எங்களை (போராட்டக்குழுவை) நேரில் அவரது அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் போராட்டக்குழு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பெட்ரோகெமிக்கல் மண்டலம் என்ற அறிவிப்பாணையை திரும்பப் பெறுவது குறித்து விரைவில் தமிழக அரசும், முதலமைச்சரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.அதை பற்றி விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என உத்தரவாதம் அளித்தார்.

மேலும் விவசாயிகள் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு இடமளிக்காது மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவாதம் அளிப்பதாகக் கூறினார். பெரும் மழை புயல் சீற்றங்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை திரும்ப பெற கேட்டுக் கொண்டார்

இதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழு உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்றும், விரைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.. மறுக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதம் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவெடுத்திருக்கிறோம் என்றார்.

பேச்சுவார்த்தையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில பொருளாளர் ஸ்ரீதர், நாகை மாவட்ட தலைவர் புலியூர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் திருமருகல் சேகர், நாகை நாகூர் வாசு, போராட்டக்குழு தலைவர் செந்தில்குமார், செயலாளர் சக்திவேல்., மீரா உசேன், செய்தித் தொடர்பாளர் என் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.