Mon. Apr 29th, 2024

கட்டுரையாளர்: பிரபல எழுத்தாளர்- வரலாற்று ஆய்வாளர் பாலன் நாச்சிமுத்து…

மனிதகுலம்:
நமது பேரண்டம் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருவெடிப்பால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. இந்தப் பேரண்டத்தின் தோற்றம் குறித்து எண்ணிய மூலவர் தொல்கபிலர் ஊழி ஊழிக்காலமாய் இந்தப்பேரண்டம் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே இதனை உருவாக்குவதற்கு என்று யாரும் தேவைப்படவில்லை எனக் கூறியுள்ளார். பெருவெடிப்புக்குப்பின் தோன்றும் இப்பேரண்டம் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பின் சுருங்கத் தொடங்கி ஒரு சிறிய ஆதிமூலப்பொருளாக உருவாகும். இந்த ஆதிமூலப்பொருள் மீண்டும் ஒரு பெருவெடிப்பை உருவாக்கும். இப்படி இப்பேரண்டம் என்பது தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும் என்றே நமது தமிழ் மரபு கருதி வந்துள்ளது.

பெருவெடிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து நமது பேரண்டம் விரிந்து சென்று கொண்டேயுள்ளது. இன்றும் திரள்கள் ஒவ்வொன்றும் விரிந்து சென்று கொண்டேயுள்ளன. அவை விரிந்து சென்று கொண்டிருக்கும் வரைதான் உயிரினங்கள் வாழமுடியும். அவை ஒருகாலத்தில் சுருங்கத்தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என நவீன அறிவியல் அறிஞர் சுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார்.

நமது பேரண்டத்தில் கோடிக்கணக்கான திரள்கள்(Galaxy) உள்ளன. ஒவ்வொரு திரளும் கோடிக்கணக்கான விண்மீன்களைக் கொண்டதாக உள்ளது. பால்வெளி என்ற திரளில் நமது ஞாயிறு மண்டலம் அமைந்துள்ளது. நமது ஞாயிறு மண்டலமும், கோள்களும், நமது பூமியும் இன்றைக்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளன. நமது பூமியில் 100கோடி ஆண்டுகள் கடந்த பிறகு, இன்றைக்கு 300 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. அதன்பின் 200 கோடி ஆண்டுகள் கடந்தபின், இன்றைக்கு 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஒரு செல் உயிரினத்திலிருந்து, கூட்டு செல் உயிரினங்கள் தோன்றின.

அதன்பின் இன்றைக்கு 50 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த கூட்டு செல் உயிரினங்களிலிருந்து, முதுகெழும்பிகள் உருவாகின. 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த முதுகெலும்பிகளிலிருந்து, பாலூட்டி விலங்குகள் உருவாகின. ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பாலூட்டி விலங்குகளிலிருந்து, மனித மூதாதை தோன்றினான். இறுதியாக 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த மனித மூதாதையிலிருந்து, மனிதன் தோன்றினான். ஆனால் இந்த மனிதனிடம் இருந்து, நவீன மனிதன்(Homosapien), 1.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றினான்(1).

இன்றைக்கு 300 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு செல் உயிரிதான், பரிணாம வளர்ச்சியின் உயர்கட்டத்தில் 100 இலட்சம் கோடி(ட்ரில்லியன்) செல்கள் கொண்ட நவீன மனிதனாக உருவெடுத்து உள்ளது. 1.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த நவீன மனிதன், அதன்பின் உலகம் முழுவதும் பரவி வாழத் தொடங்கினான். இவனது பரவல் நியேண்டர்தால் போன்ற பிற மனித இனங்களை உலகிலிருந்து வெளியேற்றியது. மத்திய கிழக்கிற்கு இன்றைக்கு 80,000 ஆண்டிற்கு முன்பும், இந்தியாவிற்கு 70,000 ஆண்டிற்கு முன்பும் மேற்கு ஐரோப்பாவிற்கு 40,000 ஆண்டிற்கு முன்பும், அமெரிக்காவிற்கு 12000 ஆண்டிற்கு முன்பும் அவன் வந்தடைந்தான்.

நாகரிகம்:

வரலாற்றுக்கு முந்தைய இனக்குழு கால மனித வரலாறு குறித்து, ‘தொல்பழங்காலம்’ என்ற எனது இரண்டாம் பகுதி ஓரளவு விரிவான தரவுகளை வழங்கியுள்ளது. அவற்றை காட்டுமிராண்டி காலம், அநாகரிக காலம் எனலாம். அதற்குப் பிந்தைய நாகரிக காலம் தான் வரலாற்றுக்காலம். வரலாற்றின் தொடக்க காலத்தில் ‘குறியீடுகள்’ உலகம் முழுவதும் இருந்துள்ளன. நமது பழந்தமிழகத்தின் குறியீடுகள் கி.மு. 3000 முதல் உலகம் முழுவதும் இருந்த சுமேரியா – எகிப்து முதலான பண்டைய நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருந்தது.

அதன்மூலம் உலகம் முழுவதும் இருந்த பண்டைய நாகரிகங்களோடு நமது பழந்தமிழகம் வணிகப் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. அதனால்தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகப் புகழ்பெற்ற வாக்கியத்தை கணியன் பூங்குன்றனார் கூறிச்சென்றார் எனலாம். ஆகவே பண்டைய உலக வரலாறு குறித்து சுருக்கமாக அறிவது அவசியமாகிறது.

நமது பேரண்டம் 1400 கோடி ஆண்டுகளுக்கும், நமது பூமி 400 கோடி ஆண்டுகளுக்கும், நவீன மனிதனின் தோற்றம் 1.5 இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனினும், நமது மனித குலத்தின் நாகரிக வரலாறு என்பது இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இனக்குழு நிலையில் இருந்த மனிதன் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓரிடத்தில் தங்கி விவசாயத்தில் ஈடுபடத்தொடங்கினான். இக்காலகட்டத்தில் இனக்குழுக் குலங்கள் நான்கைந்து ஒன்றிணைந்து குலக்கூட்டமைப்புகளை உருவாக்கி ஒரு சிறு மக்கள் சமூகமாக உருவாகின.

இந்த சிறு மக்கள் சமூகங்கள் நாளடைவில் ஓரிடத்தில் தங்கிப் பாதுகாப்புக்காக கோட்டையோடு கூடிய சிறு நகரங்களை உருவாக்கிக்கொண்டன. இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு(கி.மு. 5000) முன் இது போன்ற சிறு நகரங்கள் பல யூப்ரடிசு, டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில்(இன்றைய ஈராக்) உருவாகின. இங்கும் இதன் அருகில் உள்ள ஈரானிலும்தான் கி.மு. 5000 முதல் கி.பி. 600 வரை சுமேரியன், அக்கேடியன், பாபிலோனியா, அசீரிய, பாரசீக, மிட்டணி, பார்த்திய, சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து உருவாகின. நமது உலகில் தோன்றிய இந்த பண்டைய நாகரிகங்கள் குறித்து சுருக்கமாக அறிவோம்.