Tue. May 21st, 2024

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்திற்கு, 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 10.5 விழுக்காடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. திமுக ஆடசி அமைந்தவுடன் அதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் இருந்தன. அந்த வழக்குகளின் முக்கிய சாராம்சம், வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதிய உள்ஒதுக்கீடு அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் மற்றும் எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, இன்று தீர்ப்பு கூறுப்பட்டது.

வன்னியர்களுக்க தனி இட ஒதுக்கீடு வழங்கும் 10.5 விழுக்காட்டிற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், 6 முக்கிய கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்றும் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு தெரிவித்துள்ளது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணை சட்டத்திற்கு முரணானது என்றும்

முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல், எப்படி சாதி வாரியாக இட ஒதுக்கீடு வழங்க முடியும்..? என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு மேல்முறையீடு

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு வெளியானதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.