பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமர்ந்து 6 மாதங்களை தான் கடந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த செல்வாக்கை பெற்று வருவதாகவும், சமூக நீதி கொள்கையை நிலைநாட்டுவதிலும், அதனை சார்ந்து திட்டங்களை அறிவிப்பதிலும், அமல்படுத்துவதிலும், முதல்வர் மு.க.ஸ்டாலினே தனிப்பட்ட ஆர்வம் கொண்டு வேகம் காட்டி வருவதாகவும் மத்திய உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு நாள்தோறும் அறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது. அப்படி அனுப்பப்படும் அறிக்கையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கைதான் மத்திய அரசை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டதாக உறுதிப்படுத்த முடியாத ஒரு தகவல் டெல்லியில் இருந்து கிடைத்துள்ளது.
தமிழக அரசு அறிவிக்கும் புதுமையான திட்டங்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்குகளில் திமுக அரசுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அப்படி திமுக அரசுக்கு ஆதரவாக பல்வேறு பொது நல வழக்குகளை பட்டியலிடப்பட்டிருந்தாலும், அதில் முதன்மையாக இருப்பது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழக்கின் தீர்ப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாம்.
தமிழகத்தில் இருந்து மத்திய உளவுத்துறையால் அனுப்பப்படும் அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அதிமுக்கியத்துவம் கொடுத்து ஆலோசனை நடத்தியுள்ளது. அதில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மூத்த வழக்கறிஞர்களும் எம்.பி.க்களுமான வில்சன், என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் வழக்குகளில் திமுக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுவருகிறது என்ற சந்தேகத்தை மத்திய சட்ட அமைச்சகம் அழுத்தம் திருத்தமாக பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கையாகவே வழங்கியுள்ளதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதைவிட முக்கியமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, திமுக அரசுக்கு ஆதரவான மனநிலைக்கு மாறிவிட்டார் என்றும் அவரது தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறும் விசாரணைகளின் போது, வெளிப்படையாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டி வருவதாகவும், தமிழக அரசின் புதிய திட்டங்களை வானளவு புகழ்ந்து பேசி, தமிழக ஆட்சியாளர்களின் மனங்களை குளிர வைத்து வருவதாகவும் மத்திய சட்ட அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளதாகவும் டெல்லியில் உள்ள சட்ட அமைச்சகத்தோடு தொடர்புடைய நம்பிக்கையான விஜபி ஒருவர் தகவல் தெரிவிக்கிறார்.
அவரின் கூற்றை தவிர்க்க முடியாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், தலைமை நீதிபதி சென்னையில் இல்லை என்ற தகவல்தான். அவர் விடுமுறையில் கொல்கத்தா சென்றிருப்பதாகவும், மத்திய அரசின் சந்தேகப்பார்வை தன் மீது விழுந்திருப்பதை தலைமை நீதிபதியும் அறிந்தே இருக்கிறார் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தகவல் கசிந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவருக்கு பதவி உயர்வு என்றால் அவர், உச்சநீதிமன்றத்திற்குதான் மாற்றப்படுவார். ஆனால், இந்தியாவின் தலைச்சிறந்த உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக வரலாற்றில் பதிந்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியை, சின்னஞ்சிறு மாநிலமான, அதுவும் வழக்குகள் அதிகமாக தாக்கல் ஆகாத மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யும் வகையிலான ஆலோசனைகள், மத்திய சட்ட அமைச்சகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் டெல்லி விஜபி தெரிவிக்கிறார்.
உறுதிப்படுத்த முடியாத இந்த தகவல்கள் எல்லாம் வெறும் புரளி என்பது எப்போது உறுதியாகும் என்றால் விடுமுறையில் சென்றுள்ள தலைமை நீதிபதி, விரைவாக சென்னை திரும்பி, தலைமை நீதிபதிக்கான அன்றாட பணிகளை தடங்கல் இன்றி வழக்கம் போல மீண்டும் தொடரும்போதுதான், நீதித்துறையில் மத்திய பாஜக அரசின் தலையீடுகள் இல்லை என்பது உறுதியாகும்.
தலைமை நீதிபதியின் பணிகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களிடையே உயர்வான மதிப்பீடுகளே உள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது முன் வைக்கப்படும் வாதங்கள், ஆதாரமாக வழங்கப்படும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆழமாக உள்வாங்கிக் கொண்டும், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலும் அழுத்தம் திருத்தமான தீர்ப்புகளைதான் வழங்கி வந்துள்ளார் என்றும் தீர்ப்பில் தலைமை நீதிபதி எழுதும் வாசகங்கள், சட்டத்தின், நீதித்துறையின் மேன்மையை எடுத்து கூறும் வகையில்தான் இருந்து வந்திருக்கிறது என்கிறார்கள் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள்.
[…] […]