Fri. Nov 22nd, 2024

தேனி மாவட்டத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்திருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரம், கடந்த ஒரு மாதமாக கொதி நிலையிலேயே இருந்து வருகிறது. நீறு பூத்த நெருப்பாக இருந்த அந்த விவகாரத்தை துவக்கத்திலேயே ஊதி அணைக்காமல், அதை கொழுந்துவிட்டு எரிய விட்ட பெருமை, திமுக பொதுச் செயலாளரும் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகனையே சேரும் என்கிறார்கள் தேனியை உள்ளடக்கிய ஐந்து மாவட்ட விவசாயிகள்.

கேரளாவில் கனமழை பெய்ய துவங்கிய அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே, அம்மாநில அரசின் பார்வை முல்லை பெரிய அணை மீது விழுந்துவிட்டது. அதேபோல, கேரளாவில் உள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளைச்சேர்ந்த அரசியல்வாதிகளும், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதற்கு முல்லை பெரியாறு அணையே காரணம் என வழக்கம் போல தமிழகத்தின் மீதான விரோதத்தை மேலும் தூண்டிவிட்டார்கள். அதேநேரத்தில் மலையாள நடிகரான ப்ரித்விராஜ், முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை பற்றியெல்லாம் ஆய்வு செய்யாமல், அணையை உடைத்து எறியுங்கள் என்று பிதற்றி கேரள மக்களை வெறியேற்றினர். இப்படி ஒட்டுமொத்த மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான மனநிலையில் வெற்றி பெற்றுவிட்டனர் கேரள அரசியல்வாதிகள். அதன் காரணமாக, கேரளம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களை கடந்த தென்னிந்தியா முழுவதும் முல்லை பெரியாறு அணை விவகாரம் மீண்டும் தீயாக பரவி வருகிறது.  

கடந்த ஒரு மாத காலமாக முல்லைப் பெரியாறு அணை பற்றி கேரளாவில் உள்ள அரசியல்வாதிகள் எதிர்மறை கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்த போதும்கூட, அதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாமல், கும்பகர்ணனைபோல தூங்கி கிடந்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் என்பதுதான் தென் மாவட்ட விவசாயிகளின் கடுமையான குற்றச்சாட்டாகும்.

இப்படிபட்ட நேரத்தில், கேரளாவின் பொய் பிரசாரத்திற்கு பதிலடி கொடுப்பதற்காகவும், தென் மாவட்ட விவசாயிகளின் கோபத்தை தணிக்கும் வகையிலும் கூட அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியாறு அணைக்கு சென்று பார்வையிடவில்லை என்பது விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.  தமிழகத்தில் உள்ள ஊடகங்களை அழைத்துச் சென்று முல்லை பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் அளவு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்த தகவல்களை பேட்டியாக அளித்திருந்தால், தமிழகம்,கேரளாவில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திற்கும்  உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தமிழகத்தின் நியாயத்தையும், கேரளாவின் கபட நாடகத்தையும் இந்தியா முழுவதும் பரப்பியிருக்க முடியும்.   

ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், எரிமலை போல வெடிக்கப் போகிறது என்று தெரிந்திருந்தும் கூட, கடந்த மாதத்தின் துவக்கத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு சேவகம் செய்யும் ஒன்றிரண்டு திமுக பெண் நிர்வாகிகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களையே சுற்றி சுற்றி வந்தார் அமைச்சர் துரைமுருகன்.  அப்போதும்கூட, திமுக ஆட்சியின்  சாதனைகளை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெற்றிப் பயணத்தை பற்றி பரப்புரை செய்து ஒட்டுமொத்த திமுக வெற்றிக்கு பாடுபடாமல், திமுக நிர்வாகிகளை கரித்து கொட்டுவதிலும், முடங்கி போய் கிடக்கும் அதிமுகவினரை உசுப்பிவிடும் வகையில் எம்.ஜி.ஆர்., துரோகி என தனது மேதாவிதனத்தை எல்லாம் காட்டினார் அமைச்சர் துரைமுருகன்.

83 வயதை எட்டிவிட்ட நிலையிலும் கூட அரசியலில் நிதானம் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கும் அவரின் நடவடிக்கைகளால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவில், சகோதரர்களாக ஒரே குடும்பமாக வாழ்ந்து வரும் திமுக நிர்வாகிகள், ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்ளும் அளவிற்கு, தன்னுடைய சுயநலத்திற்காக பகைமை உணர்வை தூண்டிவிட்டார். இப்படி சொந்த கட்சிக்கே நம்பிக்கை துரோகம் இழைத்து வரும் அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும்கூட தமிழகத்திற்கும் துரோகம் செய்ய துணிந்து விட்டார் என்கிறார்கள் தென் மாவட்டத்தில் உள்ள திமுக விவசாய அணியைச் சேர்ந்த நிர்வாகிகள்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்ட  விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விவாத பொருளாகிவிட்ட நிலையில், கேரள மாநில அமைச்சர்கள் இரண்டு பேர் தடலாடியாக முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி நுழைந்து, தண்ணீரை திறந்து விட்டார்கள். அவர்களின் அடாவடி செயல்களை தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அணையில் இருந்து கேரள அமைச்சர்கள் ரோஸி அகஸ்டின், ராஜன் தண்ணீர் திறந்துவிட்ட நிகழ்வு, டிவிட்டர், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவிக் கொண்டிருந்த போதுகூட, அமைச்சர் துரைமுருகன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வாயை மூடிக் கொண்டே இருந்தார்.

ஆனால், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மௌனமாக இருப்பதை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். ஒருபடி மேலே சென்று பி.ஆர்.பாண்டியன் நவம்பர் 12 ஆம் தேதி கேரளாவிற்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்துவிட்டார். ஆளும்கட்சியைப் போலவே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதுவும் தென் மாவட்டங்களின் தளபதியாக தன்னை முன்னிறுத்தி கொள்ளும் பன்னீர்செல்வமும் உட்கட்சி அரசியலில்தான் கவனத்தை செலுத்தி வந்தார். கடந்த சில நாட்களாக தேனி உள்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து அநீதி இழைத்து வரும் கேரள அரசை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தாமதமாக போராட்ட களத்திற்கு வந்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தவறும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டமும் நடைபெறும் என அறிவித்தார்.

இப்படி பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், ஐந்து மாவட்ட விவசாயிகளும் போராட்டக்களத்திற்கு வந்துவிட்ட பிறகும் கூட விழித்துக் கொள்ளாத அமைச்சர் துரைமுருகன், கடந்த 29 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை கேரள அமைச்சர்கள் திறந்துவிடவில்லை, தமிழக அரசின் அதிகாரிகள்தான் திறந்து வைத்தார்கள் என்று வாய் கூசாமல் பொய் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேபோக்கில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வந்தால், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கும் மட்டுமின்றி தமிழகத்திற்கும் திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக கூறும் எதிர்க்கட்சியினர் பிரசாரம் தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும் ஆபத்து உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் கையாளாகாதனம், அலட்சிப் போக்கு ஆகியவற்றால், திமுக ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் ஆபத்துஉள்ளதாக அச்சத்துடன் பேசுகிறார்கள் தென் மாவட்ட திமுக முன்னணி தலைவர்கள்.    

பொய்யிலேயே பிறந்து…பொய்யிலேயே வாழ்ந்து… மக்களை ஏமாற்ற முற்படும் அமைச்சர் துரைமுருகனை விரட்டி வேலை வாங்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்…