Thu. Nov 21st, 2024

திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, அந்த நிலத்தை கையகப்பற்றுவதறகாக, பொக்லைன் இயந்திரம்கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன். நிலத்தின் உரிமையாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் க்குவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் இளங்கீரனை கைது செய்தனர்.

காவல்துறையின் இந்த செயலுக்கு தமிக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உடனடியாக கண்டனம் தெரிவித்ததுடன், இளங்கீரனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இளங்கீரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில், திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து – இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.