சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி…
குறுக்கு வழிகள் எல்லாம் நேர் வழியைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று…..
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் பாராட்டு வரிகள் இது…
நேற்று நண்பகல் தலைமைச் செயலகம் சென்றிருந்த போது வாட்ஸ் அப் மூலம் பரவியபோது பார்க்க நேர்ந்தது. இந்த நிமிடம் கூட வாட்ஸ் அப்பிலும், சமூக ஊடகங்களிலும் பார்வையை அலைய விடும்போது கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த பாராட்டுக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து வரிகளும் அற்புதமானவை என்பதைவிட ஆழ்ந்து யோசிக்க வைக்க கூடியவை.
அதிலும் கடைசி வரியான, குறுக்கு வழிகள் எல்லாம்……..என்பதை திரும்ப திரும்ப வாசிக்க நேரும் போது, உள்ளத்தில் ஒருவித கிளர்ச்சி எழுகிறது. அமைதியாக இருக்கவே முடியவில்லை.
தலைமைச் செயலகத்தில், முதன்மைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரிகளை சந்தித்து பேச நேரிடும் போதெல்லாம், அவர்கள் எவ்வளவு பணிச்சுமையோடு இருக்கிறார்கள், நிம்மதியின்றி தவிக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கவலை கொண்டிருக்கிறேன். வெளிப்பார்வைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு என்னப்பா… பெருவாழ்வு என்று சாதாரணமாக சொல்லிவிட்டு போய்விடுகிறோமே என்று குற்றவுணர்வை அடைந்திருக்கிறேன்.
துறைச் செயலாளர்களுக்கே இவ்வளவு நெருக்கடிகள் இருக்கும் போது, தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு, நாளொன்றுக்கு குறைந்தது 5 மணிநேரம் கூட நிம்மதியாக தூங்க நேரம் கிடைக்காது. குடும்பத்தினரோடு நிம்மதியாக கலந்துரையாட முடியாது. அதைவிட முக்கியமாக தன் உடல்நிலை, மனநிலையை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நேரமே இருக்காது. அடுத்து, அடுத்து என புலிப் பாய்ச்சலாக மூளை இயங்கி கொண்டிருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கை என்றால், எவ்வளவுதான் அன்பானவராக இருந்தாலும், அன்றாட நிகழ்வுகள் ஏற்படுத்தும் நெருக்கடியில் அவரும் கூட இயந்திர மனிதராக மாறிவிடுவார்.
ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்காக இருப்பவர் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.. திரும்ப, திரும்ப அவரை பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறோமே என்று எனக்கே கூச்சமாக இருந்தாலும் கூட, மானுட சமுதாயம் பண்பட வேண்டும் என்ற அவரின் தீராத தவத்தை, தாகத்தை, இன்றைய மாணவ சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லாமல் விட்டு விட்டால், உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயம் தமிழினம் என்ற பெயர் 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்ப்போடு இருக்குமா, பற்றற்ற வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகி சென்று விடாதா என்ற அச்சம்தான் எழுகிறது.
குப்பையில் கண்டெடுத்த 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 100 கிராம் தங்க நாணயத்தை, தனது ஏழ்மைநிலையிலும் சொந்தமாக்கி கொள்ள நினைக்காமல், மிகுந்த நேர்மை குணத்தால், அதை காவல்துறையிடம் ஒப்படைத்த சென்னையைச் சேர்ந்த துப்புரவுத் பணியாளர் மேரிக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிகழ்வை நேற்று எத்தனை பேர் உண்ணிப்பாக கவனித்து இருப்போம். கவனித்து இருந்தாலும் அந்த மேரியை எத்தனை பேர் மனதில் நிலை நிறுத்தியிருப்போம். ஆனால், தலைமைச் செயலாளர், மேரியின் மேன்மை குணத்தை பாராட்டுவதை தனது கடமையாக கொண்டு, அலுவலக நேரத்திலும் கைப்பட மடல் எழுதியுள்ளார்.
மனிதநேயமிக்க அவரின் ஒன்றிரண்டு செயல்கள் மட்டுமே வெளியுலகின் பார்வைக்கு வருகிறது. பெரும்பாலான நிகழ்வுகள் மீது விளம்பர வெளிச்சம் படுவதையே தவிர்த்து விடுகிறார் தலைமைச் செயலாளர். மேரிக்கு எழுதிய பாராட்டு கடிதத்தை தவிர்த்து, நாள்தோறும் அதிகாலையில் அவர் எழுதுகிற பொன் மொழிகள், வாட்ஸ் அப் மூலம் பரவி, சோகத்திலும் சோம்பலிலும் இருக்கும் மனங்களை உற்சாகப்படுத்தி, உழைப்பை நோக்கி ஓடு, ஓடு…..உண்மையான வாழ்க்கை பாதைக்குள் உன் பாதங்களே இன்னும் பதிவு ஆகவில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லுகிற பாணி, இன்றைய அதிகார வர்க்கத்தில் எத்தனை பேருக்கு வசப்பட்டிருக்கும்.. பத்து விரல்களில் ஒரு விரல் கூட நீளவில்லை…
இருப்பதில்
மகிழ்ச்சி அடைபவனே
கோடீஸ்வரன்.
இருத்தலை ரசிப்போம்.
இருப்பதை ருசிப்போம்.……………………
அடுத்தவர் நமக்கு சமம் என்று
எண்ணி யாரையும்
புண்படுத்தாத
அறமே
பண்படுத்திய
பகுத்தறிவு.…………………………….
உறவு வேர்
நட்பு விழுது
அன்பு கிணறு
கருணை கடல்
மகிழ்ச்சி மூலம்
ஆனந்தம் உட்பொருள்
இனிய நாள்
இதயத்தைத் தாலாட்டட்டும்…………………………..
ஒரே மழைதான்.
மண்ணில் விழும்போது
சேறாகிறது.
மலையில் பொழியும்போது
ஆறாகிறது.
அருவியாய் விழுவோம்.
ஆற்றலாய் எழுவோம்………………………………
நாற்று நடும்போது
சிந்தும்
வியர்வைக்கும்
அறுவடை செய்யும்போது
வழியும்
வியர்வைக்கும்
வேறுபாடு உண்டு………………………..
ஊரில் பல பேர்
வீட்டில் புத்தர்
பொம்மைகளாக
சில பேர்
வீட்டில் மட்டும்
உயிருடன்………………………………..
தூங்குவது வேறு
தூங்கி வழிவது வேறு.
விழிப்புணர்வே விடியல்…………………………..
மனிதன் நீரால்
வேர்களை மட்டும்
குளிர்விக்கிறான்
மழையோ மலர்களின்
மீதும்
பன்னீர் தெளிக்கிறது
மாமழை போற்றதும்……………………..
எது கிடைத்தாலும் மகிழ்ச்சி
அடையும் மனமே
சொர்க்கம்.
என்ன கிடைத்தாலும்
திருப்தி
அடையாத உள்ளமே
நரகம்.……………………………….
இருப்பதை உணர்ந்து
இருத்தலைக்
கொண்டாடுவோம்.
எளிமையாக இருக்கிறோம்
என்பதே நமக்குத்
தெரியாமல் இருப்பதே
உண்மையான எளிமை.
தெரிந்தால் தந்திரம்.……………………
விழிகளைக் குத்திவிட்டது
என்பதால்
விரல்களை வெட்டி
விடவா
செய்கிறோம்.
மறப்பதே
சிறந்த மன்னிப்பு..………………….
சின்னச்சின்ன
செயல்களில்
தெரிகிறது
பெருந்தன்மையின்
பிரதிபலிப்பு.
அன்பால் விட்டுக்கொடுப்போம்
நட்பில்
வெற்றி பெறுவோம்..…………………..
இவையெல்லாம் தலைமைச் செயலாளரான பிறகும் கூட, நாள்தோறும் காலை நேரத்தில் நண்பர்களுக்கு, அவரது உள்ளத்தை வென்றவர்களுக்கு வெ.இறையன்பு ஐஏஎஸ் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளும் காலை வணக்கத்தின் பொன் மொழிகள்..
நண்பர் ஒருவர் மூலம் எனக்கு வந்தவை இவை.
வறட்சி காலத்தில் ஏரி பக்கம் போகும்போது வயல்கள் வெடிப்பு, வெடிப்பாக காட்சியளிக்கும். பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரால் மட்டுமே, அந்த வெடிப்புகளை எல்லாம் சேறாக்க முடியும். அதுபோல, ஏமாற்றங்களாலும், விரக்தியாலும் மனம் பிளவு கொண்டிருக்கிற போது, அவற்றை அன்பு, நட்பு, நம்பிக்கை, உழைப்பு, உற்சாகம், ஊக்கம் ஆகிய நற்பண்புகள் அடங்கிய வெள்ள நீராக பெருக்கெடுத்து, உள்ளத்தையே உருக வைக்கும் ஆற்றல், சக்தி கொண்டது வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் சிந்தனைகள்.
தன்னைப் போலவே மானுட சமுதாயம் மாற வேண்டும் என்ற அவரின் எண்ணம், இன்றைக்கு எல்லோருக்கும் எளிதில் கைகூடி விடாது… அவர் காட்டும் அறவழிப் பாதை, நேர்மையான பயணம் கடினமானது. ஆனால், முயற்சித்தால் சாதித்துவிடலாம் என்றுதான் வெ.இறையன்பு ஐஏஎஸ், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசியும், எழுதியும் வருகிறார்.
அவரின் மேன்மை குணம் உலகம் அறிந்தது. நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லைதான்.
இதை எதற்கு எழுதினேன் என்றால்…………
2017 ஆம் ஆண்டு வேந்தர் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், திரைப்பட இயக்குனரான, தோழர் சூர்யாவுடன் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கு வெ.இறையன்பு ஐஏஎஸ் எழுதிய ஒரு புத்தகத்தை பார்த்தேன். வழக்கமான வடிவமைப்பை விட அதிகமாக வேறுபட்டது. வண்ண படங்கள் நிறைந்திருந்த அந்த புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது. அன்றைய பொருளாதார சூழலில், அதுவும் ஒரு புத்தகத்திற்கு ஆயிரம் ரூபாயை செலவழிக்க மனமில்லாமல், விருப்பம் இருந்த போதும் அதை வாங்காமல் திரும்பினேன். லட்ச ரூபாய் செலவழித்தாலும்கூட வெ.இறையன்பு ஐஏஎஸ் காட்டியுள்ள ஞானத்தை அடைந்துவிட முடியாது.
இப்படி அறிவுக் களச்சியமாக போற்றி பாதுகாக்க வேண்டிய எண்ணற்ற புத்தகங்களை கடந்த பத்தாண்டுகளில் எழுதியிருக்கிறார் அவர். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம் உள்பட சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் கடந்த பத்தாண்டுகளில் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் நூல்கள் ஒன்று கூட வாங்கப்படவில்லை.
தலைமைச் செயலாளராக பொறுப்பு ஏற்றவுடன் அவர் வெளியிட்ட முதல் வேண்டுகோளே, தனது நூல்களை, பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்உள்ள நூலகத்துறை வாங்க கூடாது என்பதுதான்.
இன்றைய மாணவ சமுதாயத்தை, மானமிகு சமுதாயமாக மாற்ற வேண்டும் என்றாலும், உழைப்பிற்கும், உயர்வுக்கும் நேர்மை எப்போதும் தடைக்கல்லாக இருக்காது என்பதை கல்வெட்டு போல மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றாலும், நூலகங்களிலும், பள்ளிகளிலும் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் அனைத்து நூல்களும் வாசம் புரிய வேண்டும்..
மத நூல்களை இலவச பிரதியாக தருகிறோம். அதை போலவே வெ.இறையன்பு ஐஏஎஸஸின் அனைத்து நூல்களையும் பள்ளி, கல்லூரி, நுழைத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது கூட வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதற்கு இணையானதாகும்..
என் கருத்தில் உடன்படுவோர், வெ.இறையன்பு ஐஏஎஸ் எழுதிய புத்தகங்களை, தமிழக அரசின் நூலகத்துறை கொள்முதல் செய்ய வேண்டும் என அஞ்சல் அட்டையில் எழுதி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வையுங்கள்…
தமிழினத்தில் வெ.இறையன்புகள் பெருகட்டும்…