Sun. Apr 20th, 2025


அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய கூட்டாளியான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் தொடர்புடைய 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் தொடர்ந்து நடத்தி வரும் சோதனையில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்கள், லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சோதனையில் இளங்கோவன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டவை குறித்து அறிக்கையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், சேலம் புத்திரகவுண்டன்பாளையம், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 36 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இந்த இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் ரூ.29 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஆடி கார் உள்பட 10 சொகுசு கார்கள், 2 வால்வா பேருந்துகள், 21.2 கிலோ தங்கம் (2650 கிராம்) 282.283 கிலோ வெள்ளி, ரூ. 68 லட்சம் வங்கி முதலீடுகளுக்கான பத்திரங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்ஸ், சொத்து ஆவணங்கள், வங்கிப் புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் பட்டியலை பார்த்து சேலம் அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நல்லவேளை அதிமுக மானத்தை காப்பாற்றிவிட்டார் இளங்கோவன் என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். விராலிமலை விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஒன்றுமே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதைப் போல, ஆர்.இளங்கோவனும் கூறி சேலம் அதிமுகவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியிருந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், செலிகளில் தேன் வந்து பாய்ந்தது மாதிரி நல்ல தகவல்களை சொல்லியுள்ளார்கள்.. வீட்டுக்கு யார் வந்தாலும் வெறுங்கையோடு திரும்பி செல்வதை ஆர். இளங்கோவன் விரும்ப மாட்டார். அந்தவகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் அவர் வஞ்சகம் செய்யவில்லை என்று உற்சாகமாகவே கூறி வருகின்றனர்.

தனது மகன் பிரவீன்குமாருடன் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆர்.இளங்கோவன்….