Sat. Nov 23rd, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மே 7 ஆம் தேதி பதவியேற்றவுடன், தமிழக அரசில் யார் யாருக்கெல்லாம் பதவியை தர வேண்டும் என்று கனடாவில் இருந்து ஆலோசனைகள் வந்ததாகவும், விருப்ப ஓய்வுப் பெற்று கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் வசித்துவரும் அசோக் வர்தன் ஷெட்டிதான் முதலமைச்சர் அலுவலகத்தையே கட்டமைத்தார் என்றும் அழுத்தம் திருத்தமாக ஐஏஎஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது.

அசோக் வர்தன் ஷெட்டியின் நிர்வாகத் திறமையை கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நன்கு அறிவார். ஆனால், அதே சமயம், உள்ளாட்சித்துறையையும், துணை முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றியபோது அசோக் வர்தன் ஷெட்டியின் உருட்டல், மிரட்டல்களால் மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். அதனால், அவரது பெயரைக் கேட்டாலே தலைமைச் செயலகம் முதல் மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகம் வரையிலான அரசு அலுவலர்கள் மிரட்சியடைவார்கள்.

அப்படி கறார் அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்து ஆட்சியின் தலைமைப்பீடத்தில் முக்கிய பதவியில் அமர போகிறார் என்ற பேச்சு கடந்த ஒரு மாத காலமாக தலைமைச் செயலகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.கனடாவில் இருந்து சென்னை வந்து பல நாட்கள் கடந்துவிட்ட பிறகும், தலைமைச் செயலகத்திற்கு அசோக் வர்தன் ஷெட்டி வராதது குறித்து, பல்வேறு தகவல்கள் தலைமைச் செயலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

முதலமைச்சரின் ஆலோசகர் என்ற பதவியில் ஷெட்டி அமர வைக்கப்படுவார் என்று பேச்சு எழுந்த நிலையில், அந்த பதவியில் அமர ஷெட்டிக்கு விருப்பம் இல்லை என்று கடந்த வாரத்தின் இறுதிநாட்களில் தகவல் வெளியானது. தமிழக அரசை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் அதிகாரமிக்க பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று ஷெட்டி விருப்பம் தெரிவித்தாகவும், அப்படியொரு பதவியை உருவாக்கும் சூழல், தற்போதைய நிலையில் இல்லை கூறப்பட்டுவிட்டதாம். அதை கேட்டு அப்செட் ஆன ஷெட்டி, சீச்சீ..சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று கூறி, முதல்வரின் ஆலோசகர் பதவியில் கூட அமராமல் ஒதுங்கிக் கொண்டார் என்கிறார்கள் அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள உயரதிகாரிகள் சிலர்.

அசோக் வர்தன் ஷெட்டி அப்செட் ஆகியிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு உயரதிகாரி செம குஷியாக இருப்பதாகவும் தகவல் உலா வருகிறது. குஷியாக இருக்கும் அதிகாரி யாரென்றால், அவர்தான் அமுதா ஐஏஎஸ். கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு பணிக்காக புதுடெல்லி சென்ற அவர், பிரதமர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு கருணாநிதியின் மறைவையொட்டி, அவரது உடல் அடக்கத்தின் போது ஊண், உறக்கம் இல்லாமல் அமுதா ஐஏஎஸ் ஆற்றிய சேவையைப் பார்த்து, கலைஞர் குடும்பம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திமுகவும் நெகிழ்ச்சியடைந்தது.

துடிப்புமிக்க அதிகாரியான அமுதா ஐஏஎஸ்., நேர்மையானவர் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வராக பதவியேற்றவுடன் முதல்முறையாக டெல்லி  சென்றிருந்தபோது, அப்போதே அமுதா ஐஏஎஸ்ஸை தமிழக அரசு பணிக்கு திரும்புமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாகவும் பேசப்பட்டது.

தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையோடு மத்திய அரசு பணியில் இருந்து விடுவித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ள அமுதா ஐஏஎஸ், இன்றோ அல்லது அடுத்த சில நாட்களிலோ தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதாவது முக்கிய துறையில் பணியமர்த்தப்படுவார் என்று பேச்சும் தலைமை செயலக வட்டாரத்தில் சூடாக விவாதிக்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்திலும், முதலமைச்சர் செயலாளர்கள் அலுவலகத்திலும் நேர்மையான அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மூத்த அமைச்சர்கள் பலர், உறக்கத்தை இழந்து வருகிறார்கள்.

முதலமைச்சர் செயலாளர்களில் நெம்பர் 1 ஆக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்., நேர்மையை மட்டுமே அளவுகோலாக வைத்து கறாராக இருக்கிறார் என்றும், கொஞ்சம் கூட நெளிவு சுளிவு இல்லாமல் இருக்கிறார் என்பதும், அவரது அடியொற்றியே மற்ற நான்கு செயலாளர்களும் பணியாற்றுவதாலும், துறை சார்ந்த எந்தவொரு பணியையும் விரைவாக நிறைவேற்ற முடியாமல் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது என்பதே மூத்த அமைச்சர்களின் புகாராக உள்ளது.

முதலமைச்சர் அலுவலக செயலாளர்களின் செயல்பாடுகளால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மூத்த அமைச்சர்கள் சிலர், நேரிடையாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய பலன் கிடைக்கவில்லை என்பதால், முதலமைச்சர் அலுவலக செயலாளர்கள் பற்றி எந்தவொரு அமைச்சரும் இப்போதெல்லாம் முணுமுணுப்பதே இல்லையாம்.

இப்படியொரு சூழலில்தான், முதலமைச்சரின் அலுவலக செயலாளர்களில் ஒருவர், துறைக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் செயலாளர் நெம்பர் 3 என்று அழைக்கப்படும் சண்முகம் ஐஏஎஸ், ஏதாவது ஒரு துறைக்கு தன்னை மாற்றிவிடுங்கள் என்று உதயச்சந்திரன் ஐஏஎஸ் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார் என்றும் தலைமைச் செயலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படிபட்ட நேரத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியான திமுக அமோக வெற்றி பெற கடுமையாக உழைத்த மூத்த அமைச்சர்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துறை அதிகாரிகளை மாற்றிக் கொள்ளவும், இதுவரை தடை விதிக்கப்பட்டு வந்த சில முக்கிய திட்டங்களுக்கு உரிய அனுமதியை பெற்று செயல்படுத்தவும் காய் நகர்த்த துவங்கி விட்டார்கள் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலர்…

தீபாவளி திருநாளுக்கு முன்பாக அமைச்சர்கள் தரப்பிலும், உயர் அதிகாரிகள் தரப்பிலும் அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்கிற தகவல்தான் தலைமைச் செயலகத்தில் தற்போது ஹாட் டாக்காக மாறியிருக்கிறது.