Thu. May 2nd, 2024

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி – குப்பம் ஊராட்சி, காரணையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிகழ்வில் உரையாற்றினார். அதன் விவரம்….

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் – என்ற மக்கள் பயணத்தை இது வரை இரண்டு கட்டங்களாக நடத்தித் தமிழகத்தில் உள்ள 71 தொகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்துள்ளேன். மூன்றாம் கட்டப் பயணத்தை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து இன்று தொடங்குகிறேன்.

இன்று மாலையில் உளுந்தூர்பேட்டையிலும் நாளைய தினம் விருத்தாசலம் மற்றும் சிதம்பரத்திலும் மக்களைச் சந்தித்து மனுக்களை வாங்க இருக்கிறேன். இந்த மனுக்கள் உள்ள பெட்டிகள் அனைத்தும், நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே திறக்கப்படும். ஒவ்வொருவர் கவலையும் வரிசையாகத் தீர்க்கப்படும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவது என்பது உங்களது கவலைகளைத் தீர்ப்பதற்காகத்தான். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான். உங்களது எண்ணங்களை அமல்படுத்துவதற்காகக் தான் என்பதை மக்கள் முதலில் உணர்ந்திருக்கிறார்கள்.

இதுவரை நான் வலம் வந்த 71 தொகுதிகளாக இருந்தாலும்- இன்று மனுக்களைத் தந்து நீங்கள் பேசி இருக்கக் கூடிய இந்த மாவட்டத்தின் நான்கு தொகுதிகளாக இருந்தாலும் – எந்தத் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பேசுவதைக் கேட்கும் போது தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இல்லை, இல்லவே இல்லை என்பதைத் தான் உணர முடிகிறது. ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால் மக்களின் அன்றாடப் பிரச்னைகளை ஒரு அரசாங்கம் நிச்சயமாக தீர்த்து வைத்திருக்கும். மக்கள் கோரிக்கை வைப்பது எல்லாம் ஏதோ பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கானவை அன்று. அவை அவர்களது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்னைகளைத் தீர்க்கவே கோரிக்கை வைக்கிறார்கள். அதைக் கூட பழனிசாமி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்று தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதாதா? 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்து விட்டது. அது அணை அல்ல, சுவர் தான் என்கிறார் சட்ட அமைச்சர் சண்முகம். காலையில் பார்த்தால் அணை என்பார். ராத்திரியில் பார்த்தால் சுவர் என்பார். அப்படி ஒரு மனிதர்தான் சி.வி.சண்முகம். 25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இவர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. அணை உடைந்ததும், திருடனுக்கு தேள் கொட்டியதை போல மாட்டிக் கொண்டார் சண்முகம். நாங்கள் இன்னமும் அணையைத் திறக்கவில்லையே என்றும் சொல்லி இருக்கிறார். 20.12.2020 அன்று திறந்து வைத்துள்ளார்கள். அமைச்சரும் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். (திறப்புவிழா பற்றிய காணொலி காண்பிக்கப்பட்டது)

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது விழுப்புரம் நகரத்துக்கு விரிவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் வரும் என்றீர்கள். டெண்டர் விட்டு ஒன்றரை ஆண்டாகி விட்டது. ஏன் இதுவரை பணிகள் தொடங்கவில்லை? விழுப்புரம் நகராட்சியையாவது, சிறப்புநிலை நகராட்சி ஆக்கினீர்களா? அதுவும் இல்லை! பத்து ஆண்டுகள் ஆகியும் விழுப்புரத்துக்கு சுற்றுவட்ட சாலை வந்ததா? இல்லை! முதலமைச்சர் ஒரு உதவாக்கரை! மந்திரிகள் உளறுவாயர்கள்! இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கோட்டையை மீட்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல். இவர்கள் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் மாட்டார்கள். பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் மாட்டார்கள். இவர்கள் மக்களைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள். மக்களோடு இருக்கவுமாட்டார்கள்.

இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து- மக்களாட்சிக்கு தொடக்கப்புள்ளி வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். கழக ஆட்சி மலரும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருவோம் 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.