Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கடந்த 2020 புதிய விதிகளை அமல்படுத்தியது. அதில், 18 வயதில் இருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் 3 ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பிலும், எஸ். ஸ்ரீதரன் என்பவர் தரப்பிலும் தனித்தனியாக வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் 8 பேர் புதிதாக இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ள நிலையில், டி.ஆர்.ரமேஷ் என்பவர் அனைத்து சாதியினர் அர்ச்சகராக நியமனம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்ப நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், அர்ச்சர்களை அரசே நியமனம் செய்துள்ளது சட்டவிரோதம் என்று வாதிட்டார். மேலும், 28 க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளன. அதற்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்பட வேண்டும். அதனை மீறி அர்ச்சர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அர்ச்சகர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும், இந்த மனு மீது தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தது.