Sat. Nov 23rd, 2024

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி டிஜிபி ராஜேஷ் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர்கள் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் ராஜேஷ் தாஸ் புகார் தெரிவித்திருந்தார்.

சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள பலர், புகார் கூறிய பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, டிஜிபி மனு மீது தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.