Sun. Nov 24th, 2024

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விவரம்;

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கோடு அருகில் உள்ள கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை மீட்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பலமுறை நடைபெற்ற போதும், இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதிகள், சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் முடியாமல் திணறி வருகிறது.

அதானி துறைமுகம் வழியாக இந்தியாவிற்குள் போதைப் பொருள்கள் ஏற்கெனவே ஒருமுறை கடத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது முறையாக கடத்தும் முயன்ற போது, அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் கொரோனோ பேரிடரால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து, மூடப்பட்ட தொழிற்கூடங்கள் மீண்டும் திறக்கப்படாததால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காண தவறிவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவுக்கு சொந்தமான சொத்துக்களை, தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்தப் போக்கை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்பட்டு விடும்.

அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் ஜனநாயக விரோதப் போக்கை தடுத்து நிறுத்த அனைத்து அரசியல்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

பொதுமக்களின் அன்றாட தேவைகளான உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. யாருமே எதிர்பார்த்திராத வகையில் பெட்ரோல் விலை ரூ 100 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது. சமையல் எரிவாயு ரூ.900 அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. சமையல் எண்ணெய் ரூ. 200 ஆக அதிகரித்து இருக்கிறது. இப்படி அனைத்து உணவுப் பொருட்களும் கடுமையாக உயர்ந்துள்ளதால், அதனை சமாளிக்க முடியாமல் நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.