தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….
நாள்தோறும் ஏதாவது எழுத வேண்டும் என்ற சிந்தனை எப்போதுமே எனக்கு ஏற்பட்டதில்லை. தூண்டுதல் இல்லாமல் எதையும், ஊதியத்திற்காக கூட எழுதியதில்லை. ஆகச் சிறந்த ஆன்மிகவாதியின் புதல்வனாக பிறந்த போதும் என்னையும் அறியாமல், என் வளர்ப்போடஒட்டிக்கொண்டது பகுத்தறிவு. அதுதொடர்பான முழக்கங்கள் இன்றைக்கும் எனக்குள் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய 30 ஆண்டுகளுக்கு மேலான ஊடக வாழ்க்கையில், என்னை தாங்கிப் பிடிப்பவர்களில், பெரும்பான்மையானவர்களாக இருப்பவர்கள் பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள்தான். கடந்த 1997 ஆம் ஆண்டில் சென்னையில் அறிமுகமான ஊடகவியலாளர், அன்றைக்கு காட்டிய அதே நட்போடு இன்றைக்கும் அரவணைத்துக் கொள்வது என்பது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஊடகவியலாளரிகளிடம் அரிதாக வெளிப்படும் அதிசயம்.
இன்றைக்கு ஆங்கில ஊடகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அந்த நண்பரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. 45 நிமிடங்களுக்கு மேல் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. அதன் முத்தாய்ப்பாக, ‘தலைமைச் செயலாளர் (சிஎஸ்) வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸும், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ்ஸும், நேர்மையான ஆட்சியை நிலை நிறுத்துவார்கள். ஊழல்களால் புரையோடிப் போன ஆட்சி நிர்வாகத்தை சீர்படுத்த, இருவரின் துணிச்சலும், சமரசத்திற்கு இடம் கொடுக்காத மனப்பாங்கும் துணை புரியும்‘ என்று தெரிவித்தார்.
இவருக்கு முன்பாக, கடந்த மாதத்தின் துவக்கதில், மறைந்த திமுக தலைவர் கலைஞர்.மு.கருணாநிதியிடம் நேரடி பரிட்சயம் கொண்டவரும், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி எம்.பி. ஆகியோரிடமும் நல்ல நட்பும் கொண்டிருக்கும் முதுபெரும் ஊடகவியலாளர்- எதிரொலி நாளிதழின் ஆசிரியர் ராமதாஸ், கூறிய ஒரு கூற்றும், இந்த கட்டுரையின் கருப்பொருளாக அமைந்தது.
‘தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், கடுகளவும் நேர்மை தவறாதவர். ஆனால், மிகுந்த மனிதாபிமானம் கொண்டவர். அவருக்கு கிடைக்கும் தகவல், யாரிடம் இருந்து, எங்கிருந்து வருகிறது என்று ஆராய மாட்டார். அதன் உண்மைத் தன்மையை மட்டுமே பார்ப்பார். அதில் நியாயம் இருந்தால், தன்னுடைய முழு சக்தியையும் செலுத்தி அதை நிறைவேற்றிவிடுவார்‘என்றார் அவர்.
எவ்வளவு நம்பிக்கை.. இதே எண்ணத்தோடு பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்றால், வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு இதைவிட வேறு பாராட்டுகள், புகழை தலைமைச் செயலாளர் பதவி கொடுத்துவிடுமா, என்ன?
கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், அவரது திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ப உரிய, உயரிய பதவி வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அவரை ஒதுக்கிய போதும்கூட, தனது நேரத்தையும், சிந்தனையையும் தமிழ் சமுதாயத்தை பண்படுத்துவதற்கே செலவிட்டவர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், மேடைகள் என அவர் இடைவிடாமல் இயங்கியதைப் போல, வேறொரு எழுத்தாளர், சொற்பொழிவாளர், அரசியல் தலைவர், இந்த மக்களுக்காக சிந்தித்திருப்பார்களா? சந்தேகம்தான்.
பத்தாண்டுகள்….நாள்தோறும் 18, 19 மணிநேரம் உழைப்பு.. 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐஏஎஸ் தேர்வுக்கு எப்படி தயாரானரோ, அந்த கடினமான உழைப்புக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காமல், அரசு அதிகாரியான பிறகும் கூட இன்றைக்கும் தளராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.
இன்றைக்கு அரசியல் தலைவர்கள், தொழில் முனைவோர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் என சமூகம் போற்றும் பிரபலங்கள், அவரோடு நட்பு கொண்டிருக்கலாம். ஆழ்ந்த சிநேகம் கொண்டிருக்கலாம். அப்படி ஆயிரக்கணக்கானோர் அவரின் நட்பை பெற்றிருந்தாலும் கூட, அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத நல் வாய்ப்பு ஒன்று எனக்கு அமைந்தது. அவரது வீட்டில் நடைபெறும் அரிய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு விருந்து உட்கொள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்..
வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸுக்கும் எனக்குமான அறிமுகத்தை சொல்லக் கூடிய கட்டுரையா இது? வெளிப்படுத்த வேண்டியதை கூட உரிய காலத்தில் உலகத்தின் முன் வைக்காமல் தவிர்த்த செய்தியும் இங்கு முகம் காட்டுகிறது.
வால்பாறையில் நீதிபதி மகன் ஒருவரின் விவகாரத்தில் சிக்கி சிறை சென்ற வனச்சரகர் ஒருவரின் செய்தி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த வனச்சரகர், நான் பிறந்த மண்ணான தாரமங்கலத்தில் என்னோடு 1987 ஆம் ஆண்டில் தராசு மக்கள் மன்றத்தில் இணைந்து பணியாற்றிய நண்பர் தீபம் பாஸ்கரின் உடன்பிறந்த சகோதரரின் மகன் ஆவார். சிறையில் அண்ணார் மகன் அடைக்கப்பட்டிருந்த போது மிகுந்த மனவேதனையோடு பேசினார். நீதித்துறையின் அழுத்தத்திற்கு ஆட்சியாளர்கள் அடிபணிந்து விட்டார்கள் என பொங்கினார். வார விடுமுறை நாள்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்துள்ளதால் செவ்வாய்கிழமைதான் பிணையில் வெளியே வர முடியும் எனக் கூறி ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
வனச்சரகருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்னை அறச்சீற்றம் கொள்ள செய்தது. அதன் விளைவாக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு பற்றி ஒரு கட்டுரை எழுதி, நேர்மையான அதிகாரியிடம் உண்மையான பதில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன். வாட்ஸ் அப் வாயிலாக பகிரப்பட்ட அந்த கட்டுரை, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பார்வைக்கு போயிருக்கிறது. அவர் காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கலந்து ஆலோசித்திருக்க கூடும். என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால், செவ்வாய் கிழமைதான் சிறையில் இருந்து விடுதலையாக முடியும் என்ற நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, அதுவும் விடுமுறை நாளான சனிக்கிழமை நள்ளிரவிலேயே வனச்சரகர் விடுதலையாகியிருக்கிறார். அநீதி நிகழ்வுக்கு விரைவாக நீதியை பெற்று தந்திருக்கிறார் தலைமைச் செயலாளர் என்று நெகிழ்ந்து கூறினார் தீபம் பாஸ்கர். நீதித்துறை மீது படிந்த கறையை சத்தமே இல்லாமல் பிரயாசித்தம் தேடியிருக்கிறார்கள்.
சிறந்த ஓவியரான பாஸ்கர், தீபம் என்ற பெயரில் ஓவியக் கலையில் ஈடுபட்டவர். 1993 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தலைவலியாக இருந்த டான்ஸி ஊழல் வழக்கு விவகாரத்தை மாவட்டந்தோறும் பொதுக்கூட்டம் நடத்தி அரசியல் களத்தில் பிரளயத்தை ஏற்படுத்தி வந்த தராசு ஆசிரியர் ஷ்யாம், சேலத்திலும் முழங்கினார். அவரின் வருகையையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு இணையாக பிளக்ஸ் என்ற வடிவமைப்பை மிஞ்சிய வகையில் பதாகைகளை சேலத்தில் வைத்தோம். ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் ஷ்யாம் உருவத்தை அச்சு அசலாக வரைந்து கொடுத்தவர் நண்பர் தீபம் பாஸ்கர். அவருக்கு செஞ்சோற்று கடன் செலுத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு..
இப்படி வெளியுலகிற்கே தெரியாமல் எண்ணற்ற செய்திகள் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை சுற்றி சுழன்று கொண்டே இருக்கின்றன. அவருடனான அறிமுகம் 1997 அல்லது 1998 ல் ஏற்பட்டது. அப்போது ஆனந்த விகடன் இதழில் அவரது குடும்ப புகைப்படமும் செய்தியும் இடம் பெற்றிருந்தது. சேலம் என்று வாசித்தவுடன் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட, அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த அவருக்கு அஞ்சல் ஒன்று அனுப்பி வைத்தேன். அன்பு மிகுந்த வார்த்தைகளை சுமந்துகொண்டு பதில் மடல் வந்தது. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு இருந்த நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சமத்துவப்புரத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைக்கும் அரசு விழாவுக்கு சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவராக பயணமானேன். அந்த விழா மேடையிலேயே ஆட்சியர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸை சென்னைக்கு அழைத்து உயர்ந்த பதவியில் அமர வைக்க போகிறேன் என்று அறிவித்தார் கலைஞர். கூட்டத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
கொஞ்ச நாட்களிலேயே சென்னையில் முக்கியத்துவம் இல்லாத ஒரு அரசு அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதுகுறித்து தராசு வார இதழில் செய்தி எழுதிய நான், கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய கவிதையான, அம்மிக்கல் செதுக்க சிற்பி எதற்கு என்பதை மேற்கோள் காட்டி செய்தியை நிறைவு செய்திருந்தேன். அதை கலைஞர் வாசித்தாரோ என்னவோ தெரியாது. ஆனால், இரண்டொரு நாளில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு நிர்வாக இயக்குனராக வெ.இறையன்பு ஐஏஎஸ் மாற்றப்பட்டார். சென்னை என்பதால் அவரை சந்திக்கும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது. அன்றிலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை அவ்வப்போது அவரை சந்தித்திருக்கிறேன்.
2004 ஆம் ஆண்டில் சேலத்தில் காலைக்கதிர் செய்தியாளராக பணியாற்றியபோது, வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் தந்தையாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இல்லத்திற்குள் காலடி எடுத்து வைத்த அந்த நொடியே வியப்பை ஏற்படுத்தியது. நுழைவு வாயிலை அடுத்து முதலில் கண்ணில் பட்டது ஒரு வரவேற்பு பலகை. அதில், சிபாரிசு கேட்டு யாரும் வராதீர்கள் என்றும் உங்கள் புதல்வன் உங்கள் வாரிசு அல்ல, உங்கள் வழியாக பூமிக்கு வந்தவர்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதுவே அவரது அப்பழுக்கற்ற வாழ்க்கையையும், அவரின் வார்ப்புகளான வாரிசுகளின் வாழ்க்கையையும் வெளிப்படுத்தியதால் காலைக்கதிர் நாளிதழில் பதிவு செய்ய விரும்பினேன்.
வெ.இறையன்பு ஐஏஎஸ்., அவரது சகோதரர்(மூத்தவர்) திருப்புகழ் ஐஏஎஸ்., அப்போது கல்லூரி பேராசிரியராக இருந்த அவர்களது சகோதரி வெ.இன்சுவை, அவர்களது இளவல் மற்றும் தாய், தந்தையரின் சிறு வரலாற்றை காலைக்கதிரில் பதிவு செய்தேன். அந்த செய்திக்கட்டுரை சேலத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் தகவல் பலகையில் பல காலம் வாசம் செய்தது.
குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் சேலத்தில் உள்ள தந்தை இல்லத்தில் கூடுகிறார்கள். அந்த சிறப்புக்குரிய தினம், வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் தாத்தா நினைவு நாள் ஆகும். முன்னோருக்கு படையல் என்பதால், காலை முதலே இல்லம் பரபரப்பாகவே இருந்தது. நண்பகலுக்கு சிறிது நேரத்திற்கு முன்பாக இல்லத்திற்கு சென்றேன். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு வெ.இறையன்பு ஐஏஎஸை நேரில் பார்த்த போது அடையாளமே தெரியவில்லை. சாதாரண தரத்திலான மேல் சட்டை. வேட்டி என்ற பெயரில் ஒன்றை கட்டியிருந்தார்.
ஆண்டுக்கணக்கில் காணிக்கையே கிடைக்காத கோயிலில் இருக்கும் அர்ச்சகர் கட்டியிருப்பாரே, வெள்ளை நிறத்தை தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை போல ஒரு வேட்டியை கட்டியிருந்தார். வேட்டியொரு பக்கம் போக, அவர் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தார்.
தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரி உள்ளிட்ட அனைவரிடமும் பேசி தரவுகளை சேகரித்துவிட்டு, புகைப்படக் கலைஞருடன் வெளியேற முயன்றபோது அவரின் தந்தையாரின் அன்பு கட்டளையை தவிரிக்க முடியாமல், அவர்கள் இல்லத்தில் விருந்தாளியானேன்.
அந்த இல்லத்தில் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் அற்புதமானவை. அவரது தந்தை முன்பு அவரது வாரிசுகள் ஒருவர் கூட இருக்கையில் அமராமல் இருந்தது இன்றைக்கு நினைத்தால் கூட வியப்பாகவே இருக்கிறது. அர்த்தமற்ற ஒரு வார்த்தைக் கூட வெளிப்படவில்லை. அவர்களது குடும்பத்தினரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் பாடம். அதில் பயணிக்க விரும்பினால் நிறைய தியாகம் செய்ய வேண்டும். அந்த சந்திப்பு மூலம் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்து மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்திலேயே துக்கரமான நிகழ்வு ஒன்றுக்காக அதே இல்லத்திற்குள் குறுகிய காலத்திலேயே செல்ல வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. அவரின் இளவல், இளம் வயதிலேயே பூமியுடனான பந்தத்தை முறித்துக் கொண்டார்.
மீண்டும் 2005 ல் சென்னை திரும்பினேன். 2010 வரையிலான சந்திப்புகள் நினைவில் நீங்காமல் இருக்கின்றன. 2011 அதிமுக ஆட்சியில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதேகாலகட்டத்தில் ஜெயா டிவியில் பணியாற்றியதால் அவரை தேடிச் சென்று சந்திக்கும் சூழல் உருவாகவில்லை. இப்படியே பத்தாண்டுகள் கடந்துவிட்டன.
இடைப்பட்ட காலத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் துவக்கிய தாய் வார இதழில் ஊடகவியலாளராக பணியாற்றிய முதுபெரும் செய்தியாளர் குடந்தை கீதப்பிரியன், வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் மனிதநேயத்தை அவ்வப்போது எடுத்து கூறும்போதெல்லாம் ஒருவித விரக்தியோடு மென்று முழங்குவேன்.
பத்தாண்டு கால வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சியில், அவரின் திறமைக்கும், உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து இருக்கிறது. அவர் அமர்ந்திருக்கும் தலைமைச் செயலகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திலும் ஊழலை ஒழித்து நேர்மையான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு 18 மணிநேரத்திற்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவை பற்றிய செய்திகள் நண்பர்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளும்போது, முதல் பாராவில் ஆங்கில ஊடக நண்பர் சொன்னதைப்போல, நேர்மை பாதையில் இருந்து கடுகளவும் தடம் மாறாமல் பயணிப்பது மாத்திரம் மட்டுமல்ல, தமிழக அரசு நிர்வாகத்தையும் செம்மைப்படுத்துவார் என்ற நம்பிக்கை, உள்ளம் முழுவதும் நிரம்புகிறது.
நல்லரசுவில் வரும் ஒன்றிரண்டு செய்திகளும் அவரது கவனத்திற்கு செல்வதாக அறிகிறேன். தலைமைச் செயலகத்திற்கு வாரத்திற்கு ஒருமுறையோ சில நாட்களோ செல்லும்போது கூட அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் எழும்போது அந்த எண்ணத்திற்கே தடை விதித்து கொள்கிறேன்.நேரில் சந்திக்கும் நேரத்திலோ, தொலைபேசியில் பேசும் நேரத்திலோ, வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் நேரத்திலோ, எனக்கு ஒதுக்கும் சில வினாடிகளில் கூட விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்கான திட்டத்தை தலைமைச் செயலாளரால் நிறைவேற்றி விட முடியும்…
கடவுளை நம்பு..அவர் உன்னைவிட்டு விலக மாட்டார் என்ற ஆன்றோரின் வாக்குக்கு ஏற்ப, அவர் மீதான நம்பிக்கை எப்போதும் குறைந்ததில்லை. அதிகாரமிக்க இடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட தமிழ்ச் சமுதாயம் மேம்பட அவர் உழைத்துக் கொண்டே இருப்பார். பாராட்டும், புகழும் வாடி உதிர்ந்து போகும் மலர்களைப்போல அற்ப வாழ்க்கை கொண்டது என்பதை உணராதவர் அல்ல, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்…
நேர்மையை போற்றும் அனைவரும் அவருக்கு எப்போதுமே அரணாக நிற்பார்கள்…
அவரை பற்றி அவ்வப்போது செய்திகள் தகவல்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள். எனக்கு ஒரு நீண்ட காலமாக தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன் அவரைப்பற்றி ஆனால் இதுவரை எனக்கு கிடைக்கப் பெறவில்லை.இறையன்பு ஐயா அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா அது பற்றி இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை அது பற்றிய ஒரு கட்டுரை வெளியிடவும்.அல்லது தகவல் கூறவும்
மற்றும் சிறப்புச் செய்தியாளரகிய இளமதி ஆகிய உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வழங்கவும்.