தாரை இளமதி.,, சிறப்புச் செய்தியாளர்
தமிழக அரசின் நிர்வாகத்துறையில் பணியாற்றி வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளில் தனித்துவமானவர் சுப்ரியா சாகு ஐஏஎஸ்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத அறநெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்..
மகாகவி பாரதி வியந்து பாராட்டி மாதரை பெருமைப்படுத்தும் இந்த கவிதையில், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்ற வரிகளுக்கான பொருள் மட்டுமே உடனடியாக புத்தியில் உதிப்பதில்லை.
எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தான் வரித்துக் கொண்ட லட்சியத்திலிருந்து
தன்னுடைய உயர்ந்த சிந்தனைகிளில் இருந்து யாருக்காவும், எதற்காகவும் தடம் பிறழாத பண்புடையவர்களைத்தான் திமிர்ந்த ஞானச் செருக்கு என்று வியந்து, வியந்து வர்ணிக்கிறார் மகாகவி.
இந்தக் கவிதைக்கு முழுமையாக, முற்றிலுமாக பொருந்தக் கூடியவர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பெண் அரசு அதிகாரிகள்.
முந்தைய அதிமுக ஆட்சியில், நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் (தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவுச் சங்கம்) தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சுப்ரியா சாகு ஐஏஎஸ். அவரின் இயல்பான குணத்திற்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், அவரை பணி மாற்றம் செய்துவது தொடர்பாக முந்தைய ஆட்சிக்காலத்தில் நிர்வாகத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த உயர் அதிகாரிகளும் கவலைப்படவில்லை.
யானைக்கு சோளப் பொரி போல சிறிய துறையிலும் கூட முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியிருக்கிறார் சாகு ஐஏஎஸ். கடந்த மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புடன் முதல்வராக மு.க.ஸ்டாலின் கோட்டையில் அமர்ந்தவுடன், ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இடம் மாற்றம் 20 நாட்களுக்குள்ளாகவே நடைபெற்றது. முதல் பணியிட மாற்ற உத்தரவிலேயே சுப்ரியா சாகு ஐஏஎஸ் இடம் பெற்றார். அதுவும் அவருக்கு மிக,மிக விருப்பமான சுற்றுச்சூழல், வனத்துறையின் செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.
முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலான சுப்ரியா சாகு ஐஏஎஸ், நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர் போனவர் என்பதால், அவரை முதல் டிக்கிலேயே ஓ கே செய்தவர், முதலமைச்சரின் செயலாளர்களில் முதன்மையானவராக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்.தான்.
அவரின் நல்லாசியுடன் வனத்துறையின் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் பதவியேற்ற அடுத்த நொடியே, ஒட்டுமொத்த வனத்துறையும் அதகளமானது.
யாருடைய சொல்லும் கட்டுப்படாதவர், பணியில் கடுமை காட்டுபவர், தலைமைச் செயலகம் முதல் வனச்சரகத்தில் உள்ள கீழ்நிலை பதவி வரையிலும் பணிபுரியும் ஒட்டுமொத்த வனத்துறையிலும் ஊழல் என்ற பேச்சோ, முறைகேடு என்ற வார்த்தையோ கேட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் என்பதால், அவரின் அதிரடி நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ என்று அச்சத்திலேயே நாட்களை எண்ணத் தொடங்கினர்.
அவர்களின் எதிர்பார்ப்பை வீணடித்து தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்று நினைத்தோ என்னவோ, வனத்துறை செயலாளராக அமர்ந்தவுடன் மாநில, மாவட்ட அளவிலான உயர் பதவிகளில் நங்கூரம் போல பல ஆண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்த ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60 அதிகாரிகளை பந்தாடினார். வழக்கமாக இந்த பதவி அந்தஸ்திலான அதிகாரிகள், கடந்த ஆட்சிக் காலங்களில் இடம் மாறுதலுக்காக அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து பசையுள்ள இடங்களில் அமர்ந்த பழம்பெருச்சாலிகள் பற்றிய செய்திகள் எல்லாம் உண்டு.
கிட்டதட்ட 4 கோடி ரூபாய் வரை லஞ்சமாக மட்டுமே பணியிட மாறுதல் மூலம் வசூலாகியிருக்கும் பணிமாறுதலை, அசால்ட்டாக செய்து முடித்தார் சுப்பியா சாகு ஐஏஎஸ்.
முதல் அதிரடியைப் பார்த்தே ஒட்டுமொத்த வனத்துறையும் ஆடிப்போனது. வனத்துறை அலுவலர்கள் மட்டுமா, அந்த துறையின் அமைச்சரான குன்னூர் ராமச்சந்திரனுக்கும் வியர்த்து கொட்டியுள்ளது. சீனியர் அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு வேண்டிய வனத்துறை அலுவலர்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டபோது, அவர்களின் வேண்டுகோளை வனத்துறை செயலாளரின் கவனத்திற்கு எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமலேயே பல நாட்கள் தவித்து இருக்கிறார்.
இப்படி, வனத்துறை அலுவலர்கள் முதல் அமைச்சர் வரை அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் சுப்ரியா சாகு ஐஏஎஸ், வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் போல மாறிடுவார் என்கிறார்கள் அவரின் கீழ் பணிபுரியும் நேர்மையான அதிகாரிகள் சிலர்.
சுப்ரியா சாகு ஐஏஎஸ்.ஸை விட நூறு மடங்கு நேர்மையாளரான தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், ஒருநாள் தலைமைச் செயலகத்தில் பத்துமாடி கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொரு துறையிலும் குப்பைகளைப் போல பைல்கள் தேங்கி கிடந்திருக்கின்றன. அலுவலக அறையிலும் தூய்மையில்லை. அதைப் பார்த்து அதிர்ச்சியான தலைமைச் செயலாளர், அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
துறை செயலாளர்கள் அலுவலக அறை முதல் அனைத்து அலுவலக அறைகளும் தூய்மையாக இருக்க வேண்டும். காகித பயன்பாட்டை குறைத்து கணினி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ். அவரின் உத்தரவை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, தனது அறையில் இருந்த கோப்புகளை எல்லாம் விரைந்து கையெழுத்திட்டு, தூய்மையாக வைத்துக் கொண்டதுடன், பத்து மாடி கட்டடத்தில் உள்ள பிற வனத்துறை அதிகாரிகளின் அலுவலக அறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கணினி பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார் சுப்ரியா சாகு.
இப்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்., முதல் அமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோரின் நன்மதிப்பை பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்.ஸின் கடமையுணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமித்து இன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கையெழுத்திட்டிருப்பவர் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.
இவ்வளவு புகழுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரராக இருந்தும், ஒரே ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாரே சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பதுதான் நல்லரசுக்கு உள்ள வருத்தம்.
குற்றம் இழைத்தவன் தன் மகன் என்று தெரிந்திருந்த போதும் தேர்ச் சக்கரத்திற்கு பலி கொடுத்த நீதி தவறாத மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழ் மண்ணில், தனது துறையின் கடைநிலை ஊழியர் தவறே செய்யாத போதும் நீதித்துறையின் அதிகாரத்திற்கு அடிபணிந்து அப்பாவி ஊழியர் ஒருவரை சிறை கொட்டடியில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறாரே சாகு ஐஏஎஸ் என்பதும் அப்பாவியின் கண்ணீரால் நேர்மையிலும், துணிச்சலிலும் படிந்துவிட்ட கறையை எந்த ஞானச் செருக்கு மூலம் கழுவிக் கொள்வார் சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்று கண்ணீர் மல்க கேட்கிறார்கள் வால்பாறை வனத்துறை பணியாளர்கள்..
நேர்மையான பதில் இருக்கிறதா சுப்ரியா சாகு ஐஏஎஸ் அவர்களே…..
நல்ல அதிகாரிகள் பல துறைகளில் பொறுப்பு ஏற்று உள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துகள்,தமிழகத்தில் மொத்த நிலபரப்பில் 33% நிலப்பரப்பை பசுமை காடுகலாக்க போர்கால நடவடிக்கையும் பசுமையை பாதுகாத்து வளர்க்க நாணுவ சட்டமும் கொண்டுவர நாட்டு மக்களின் சார்பாக வேண்டுகிறேன்
நல்ல அதிகாரிகள் பல துறைகளில் பொறுப்பு ஏற்று உள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துகள்,தமிழகத்தில் மொத்த நிலபரப்பில் 33% நிலப்பரப்பை பசுமை காடுகலாக்க போர்கால நடவடிக்கையும் பசுமையை பாதுகாத்து வளர்க்க ராணுவ சட்டம் போல மிக கடுமையான சட்டமாக கொண்டுவர நாட்டு மக்களின் சார்பாக வேண்டுகிறேன்
[…] சுப்ரியா சாகு ஐஏஎஸ்… அலறும் வனத்துறை… […]