தமிழகத்தில் முதலமைச்சராக பதவி வகிப்பவர்களுக்கு, காவல்துறை மரபுபடி வாகன அணிவகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பொருட்டு வழங்கப்படும் காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தி வழங்கப்பட்டது, இதுவரை முதல்வர்களாக இருந்தவர்களில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒருவருக்குதான். அவர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் அவரது காருக்கு முன்பாகவும், பக்கவாட்டிலும், பின்பக்கத்திலும் மொத்தம் 18 கார்கள் அணிவகுத்து செல்லும். அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும்போதும், பணி முடித்து மீண்டும் வீட்டிற்கு திரும்பும்போதும், மற்ற நேரங்களில் அரசு விழா உள்ளிட்டவற்றில் முதல்வர் கலந்து கொள்ளும் போதும் இந்த அட்டகாசமான அணிவகுப்பு நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். அவருக்கு முன்பும் பின்பும் முதல்வராக இருந்த போதுகூட மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, காவல்துறையின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பத்துக்கு மேல் அணிவகுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று கடுமை காட்டினார்.
முதல்வர் செல்லும் போது, அவரின் காரோடு அணிவகுக்கும் காவல்துறையின் பாதுகாப்பு வாகனங்களின் பவனி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினாலும் கூட சென்னையில் பெரும்பாலும் வாகன ஓட்டுநர்களை எரிச்சல்படுத்திவிடும். முதல்வரின் பயணத்திற்காக, எதிர்பக்க சாலை, குறுக்குச் சாலை போன்றவற்றில் குறைந்தது 30 நிமிடத்திற்காகவது போக்குவரத்து தடை செய்யப்படும். இதன் காரணமாக, அவசர வேலையாக செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது வாடிக்கை. அண்மையில், முதல்வரின் வருகைக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் காரும் கூட வாகன போக்குவரத்தில் சிக்கிக் கொண்டதும், உள்துறை செயலாளரையே மன்னிப்பு கேட்க வைத்ததும், முதல்வரின் பாதுகாப்பு குறித்த விமர்சனதை சமூக ஊடகங்களில் எழுப்பியது.
மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து துளியும் பந்தா காட்டாமல் பணியாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு வழங்கப்படும் அதிகபட்ச பாதுகாப்பு குறித்து அடிக்கடி அதிருப்தி தெரிவித்த போதும், காவல்துறை உயரதிகாரிகள், பாதுகாப்பு காரணம் காட்டி, அவருக்கான பாதுகாப்பை குறைப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.
ஆனால், நீதிமன்ற விமர்சனத்திற்கு பிறகு, தனது பாதுகாப்பை குறைத்தே ஆக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கறார் காட்டியதால், அவரின் உத்தரவை நிறைவேற்றுவது தொடடர்பாக, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், முதல்வரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் தற்போதுள்ள 18 கார் அணிவகுப்பை சரிபாதியாக குறைத்துக் கொள்வது என்றும், தேவையற்ற வாகனங்கள் முதல்வரின் வாகன பவனியில் பின்தொடரக் கூடாது என்றும், முதல்வரின் பயணத்தின் போது, தேவையை கருத்தில் கொண்டு மட்டுமே வாகனப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்றும், முதல்வர் பயணிக்கும் பாதையில் வாகனப் போக்குவரத்தை அனுமதித்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் வகையில், அவருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை பெருமளவில் குறைத்துக் கொண்டுள்ளது, தமிழ்நாடு காவல்தறை.
தனது தலைமையிலான ஆட்சி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதில் உறுதி காட்டி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அலுவல் நிமித்தமாக சாலைகளில் பயணிக்கும் போதுகூட, தன்னால் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதி காட்டி வருவதைப் பார்த்து, முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை உயரதிகாரிகளே வியந்து போய் இருக்கிறார்கள்.