Sun. Nov 24th, 2024

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்று, கிட்டதட்ட 150 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆளும்கட்சி வழக்கறிஞர்களாக இன்றைக்கும் அதிமுக.வைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றி வருவதாக பொங்குகிறார்கள் திமுக.வைச் சேர்ந்த முன்னணி வழக்கறிஞர்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட முக்கியமான பதவிகளில் நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்களே தவிர, அதே நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிற நீதிமன்றங்கள், நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றில் முந்தைய அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள்தான், திமுக ஆட்சியிலும் அரசு வழக்கறிஞர்களளாக நீடிக்கிறார்கள் என்பதுதான் அவர்களுடைய ஏகோபித்த குற்றச்சாட்டாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முக சுந்தரம், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா என முக்கியமான பதவிகளில் மட்டும் திமுக.வைச் சேர்ந்த முன்னணி வழக்கறிஞர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களைத் தவிர, சென்னை உள்பட பெரும்பான்மையான மாவட்டங்களில் அரசு வழக்கறிஞர்களாக திமுக.வைச் சேர்ந்தவர்கள் முழுமையாக நியமிக்கப்பட்வில்லை என்று மனம் நொந்து கூறுகிறார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருக்கும் திமுக வழக்கறிஞர்கள் பலர்.

அவர்களிடம் பேசினோம். மனதில் நீண்ட நாளாக குமைந்துக் கொண்டிருக்கும் வேதனையை கொட்டி தீர்த்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆகிய பதவிகளை தவிர்த்து, பிளிடர், அரசு சிறப்பு வழக்கறிஞர், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அரசு சார்பிலான பதவிகள் வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஆளும்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு, அவரவர் தகுதிக்கு ஏற்ப, நீதிமன்றங்களில் பதவி வழங்கப்படும். உயர்நீதிமன்றம் தவிர, சென்னையிலேயே உள்ள பிற நீதிமன்றங்கள், மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் ஆகியவற்றில் 800 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவற்றுக்கு மட்டுமே தலைமை பதவிகளில் திமுக.வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் பதவியைத் தவிர்த்து பிற நிலைகளில் உள்ள பதவிகளுக்கு 150 நாட்களை எட்டிய பிறகும் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் தவிர மற்ற அனைத்து நீதிமன்றங்களிலும் அதிமுக காலத்தில் நியமிக்கப்பட்டவர்களே அரசு வழக்கறிஞர்களாக நீடித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, 9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியான வழக்கறிஞர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அரசாணை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு வெளியாகி 80 நாட்களுக்கு மேலாகிவிட்ட இந்த நேரத்திலும்கூட திமுக வழக்கறிஞர்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், திமுக சட்டப்பிரிவில் உள்ள கோஷ்டிப் பூசல்தான்.

சட்டத்துறை அமைச்சரான ஆர்.ரகுபதி, திமுக வழக்கறிஞர்களுக்கு பதவி வழங்குவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. காரணம், திமுக சட்டப்பிரிவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசு வழக்கறிஞர் பதவியை யார், யாருக்கெல்லாம் வழங்கலாம் என ஒரு பட்டியலையே தயாரித்து வைத்திருக்கிறாராம். அமைச்சர் ஆர்.ரகுபதிக்கும், ஆர்.எஸ்.பாரதிக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் திமுக.வுக்காக களப்பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றின் போது ஒரு மாதத்திற்கு மேலாக களப்பணியாற்றிய திமுக வழக்கறிஞர்கள் பெரும்பான்மையானோரை புறக்கணித்துவிட்டு, திமுக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு யார் யாரெல்லாம் விசுவாசமாக இருக்கிறார்களோ, அவர்களின் பெயர்கள்தான் அரசு வழக்கறிஞர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்கறிஞர்களாக திமுக.வினரை நியமனம் செய்வதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு மிக,மிக நெருக்கமான திமுக எம்.பி.களும் பிரபல வழக்கறிஞர்களுமான வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெற்று வரும் குளறுபடிகளை நன்கு அறிந்திருந்தபோதும், தங்கள் நிலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால், அமைதி காத்து வருகிறார்கள்.

மாநிலம் முழுவதும் திமுக.வுக்காகவே காலம் காலமாக உழைத்து வரும் விசுவாசிகள், களப் பணியாளர்கள் யார் என்பதெல்லாம் முதல்வருக்கு மிக,மிக நெருக்கமான திமுக வழக்கறிஞர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் உண்மை நிலவரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. ஆட்சிப் பணியாக இருந்தாலும், அரசு நிர்வாகத்தோடு தொடர்புடையாக பிற துறைகளுக்கான பணிகளிலும், நேர்மைக்கும், தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, தகுதியுடையவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட வேண்டிய அரசு வழக்கறிஞர்கள் பதவி நியமனத்திலும், அவரே தலையிட்டு, கோஷ்டி அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும், அரசு வழக்கறிஞர் பதவியை பெறுவதற்கே கையூட்டு வழங்க விரும்பாத திமுக வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு, உரிய அங்கீகாரத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் என்றனர், நீதிமன்றத்திலும், திமுகவிலும் செல்வாக்கு மிக்க திமுக வழக்கறிஞர்கள்.

கொரோனோ காலம் என்பதால், காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் பெரும்பான்மையாக நடைபெறுவதால், அரசு தொடர்பான வழக்குகளில் அக்கறையின்றியே அதிமுக.வைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.

வரும் நாட்களில் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கும்போது, அரசு தொடர்பான வழக்குகளில் அதிமுக.வைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள், திமுக அரசுக்கு சாதகமாக வாதாட விரும்ப மாட்டார்கள். அப்படிபட்ட நேரத்தில், திமுக அரசுக்குதான் பெரும் தர்ம சங்கடம் ஏற்படும். அப்படிபட்ட நிலை உருவாகமல் இருக்க, சென்னை உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து மாவட்ட அளவிலான நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்களை விரைந்து நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உரையாடல்களை நிறைவு செய்தனர் திமுக முன்னணி வழக்கறிஞர்கள்.